மேற்பிறந்தா ராயினும் கல்லாதார் கீழ்ப்பிறந்தும்

குறள் 409
மேற்பிறந்தா ராயினும் கல்லாதார் கீழ்ப்பிறந்தும்
கற்றார் அனைத்திலர் பாடு
[பொருட்பால், அரசியல், கல்லாமை]

பொருள்
மேற்குடி - mēṟ-kuṭi   n. id. +. Land-owners of a village; காணியாளர். கீழ்க்குடியாகியவரிசையாளரைப் புறந்தரும் மேற்குடிகளாகிய காணியாளரை (பதிற்றுப். 13, 24, உரை).

மேற்பிறந்தா ராயினும்- உயர்குடியில் பிறந்தவராயினும்; செல்வந்தராயி பிறந்தவராயினும் 

கல்லாதார்  - நெறிநூல்கள் கல்லாதவர்

கீழ்ப்பிறந்தும் - கீழான குடியில் பிறந்தும்

கற்றார் அறிஞர், புலவர், படித்தோர், கல்வியறிவுடையோர்கள்.

அனைத்து - அவ்வளவு; அத்தன்மையது; எல்லாம்

அனைத்திலர் அளத்தற்குரிய அளவுக்கு இல்லாதார்

பாடு -உண்டாகை; நிகழ்ச்சி; அனுபவம்; முறைமை; நிலைமை; செவ்வி; கடமை; கூறு; பயன்; உலகவொழுக்கம்; குணம்; பெருமை; அகலம்; ஓசை; உடல்; உழைப்பு; தொழில்; வருத்தம்; படுக்கைநிலை; விழுகை; தூக்கம்; சாவு; கேடு; குறைவு; பூசுகை; மறைவு; நீசராசி; இடம்; பக்கம்; அருகு; ஏழாம்வேற்றுமையுருபு.

முழுப்பொருள்
ஒருவர் உயர்குடியில் பிறந்திருந்தும் கற்காமல் கல்லாதவராய் இருந்தால் அவர் கீழான குடியில் பிறந்தும் கற்றவரின் பெருமைக்கு ஒப்பிட்டு பார்க்க முடியாது. உயர்குடியில் பிறந்தும் கல்லாதவர் கற்றவரை விட சிறுமை வாய்ந்தவரே.  

கற்றோர்க்கு சென்றவிடமெல்லாம் சிறப்பு என்றிருக்கையில், அதில் குலம் என்னும் வேற்றுப்படுத்தும் அடையாளம் நிற்காது. ஆனால் இங்கு உயர்குடி யில் பிறந்தவர் எனில் வறுமையில்லாமல் செல்வம் பெற்று கற்கும் வாய்ப்புகளும் சூழல்களும் நன்கு பெற்றுவர் என்ற பொருளை எடுத்துக்கொள்ள வேண்டும். கீழான குடி எனில் வறுமையில் இருந்தும் கல்வி கற்கும் வாய்ப்புகளும் வசதிகளும் இல்லாதவர் என்ற பொருளை எடுத்துக்கொள்ள வேண்டும். உதாரணமாக ஒருவர் அவர் இருக்கும் வசிப்பிடத்தில் (உதாரணமாக மலையில் இருக்கும் ஆழ்காடுகளில்) கற்க கூடிய வசதிகள் இல்லாமல் இருக்கலாம். 

இன்றைக்கு பார்த்தால் பெருநகரங்களில் (சென்னை போன்ற நகரம்) கற்பதற்கான எல்லா வசதிகளும் உயர் நூலகங்களும் கற்றுக்கொடுக்கும் மேதைகளும் பேராசிரியர்கள் இருந்தும் கற்காதவர்கள் சிறுமையானவர்கள். அதுவே வசதி வாய்ப்புகள் அறவே இல்லாத கிராமங்களில் இருந்து கற்று வந்தவர்களின் பெருமைக்கு ஈடே இல்லை. உதாரணமாக எழுத்தாளர்கள் கி.ராஜநாராயணன், எஸ்.ராமகிருஷ்ணன், ஜெயகாந்தன் போன்றோர் பெருநகரங்களில் இருந்து வந்தவர்கள் அல்ல. அதுப்போல் அப்துல் கலாம், ISRO சிவன் ஆகியோர் பின்தங்கிய கிராமங்களில் இருந்து வந்தவர்களே. இவர்களின் பெருமைக்கு முன் சாதனைக்கு முன் பெருநகரங்களில் எல்லா வசதிவாய்ப்புகள் பெற்றும் அதனை சரிவர பயன்படுத்தாது நேரத்தை வீண் செய்து உண்டு உறங்கி புணர்ந்து பின் மாயும் இந்த எளியோர்கள் சிறுமை வாய்ந்தவர்களே. 

பெருநகரங்கள் என்று மட்டும் அல்ல, ஒருவர் நல்ல குடியில் பிறந்தும், வாய்ப்புகள் பல இருந்தும், வாய்ப்புகளை உருவாக்கிக்கொள்ளவோ அல்லது அதனைத் தேடியோ கற்காதவர்கள், அடுத்தக்கட்டத்திற்கு செல்லாதவர்களையும் இதனில் சேர்க்கலாம்.

புறநானூற்றுப்பாடல் வரிகள், 
“வேற்றுமை தெரிந்த நாற்பாலுள்ளும் 
கீழ்ப்பால் ஒருவன் கற்பின் 
மேற்பால் ஒருவனும் அவன்கட்படுமே” (புறநா 183:8-10)ன்பது கவனிக்கவேண்டிய கருத்து. 

நாலடியார் பாடல் இக்கருத்தையொட்டி இவ்வாறு கூறுகிறது.

“களர்நிலத் துப்பிறந்த உப்பினைச் சான்றோர்
விளைநிலத்து நெல்லின் விழுமிதாக் கொள்வர்
கடைநிலத்தோ ராயினும் கற்றறிந் தோரைத்
தலைநிலத்து வைக்கப் படும்” (நாலடி 133)

“தோணி இயக்குவான் தொல்லை வருணத்துக்
காணின் கடைப்பட்டான் என்றிகழார் - காணாய்
அவன் துணையா வாறுபோ யற்றேநூல் கற்ற
மகன் துணையான் மிக்க கொளல்” (நாலடி 136)

“திரியழல் காணின் தொழுபவிறகின்
எரியழல் காணின் இகழ்ப - ஒருகுடியில்
கல்லாத மூத்தோனைக் கைவிடுபகற்றான்
இளமைபா ராட்டும் உலகு” (நான்மணி.64)

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை

மு.வரதராசனார் உரை

No comments:

Post a Comment