துறப்பார்மன் துப்புர வில்லார் உறற்பால

குறள் 378
துறப்பார்மன் துப்புர வில்லார் உறற்பால
ஊட்டா கழியு மெனின்
[அறத்துப்பால், ஊழியல், ஊழ்]

பொருள்
துறப்பார் - துறவந்தவர்கள்

மன் - ஓர்அசைநிலை; எதிர்காலங்காட்டும்இடைநிலை; ஒழியிசைக்குறிப்பு; பிறிதொன்றாகைக்குறிப்பு; மிகுதிக்குறிப்பு; ஆக்கக்குறிப்பு; கழிவுக்குறிப்பு; நிலைபேற்றுக்குறிப்பு; ஒருபெயர்விகுதி; அரசன்; வீரன்; தலைவன்; கணவன்; உத்தரட்டாதிநாள்; பெருமை; இழிவு; மந்திரம்; மணங்கு.

துப்புரவு - தூய்மை; நுகர்ச்சிப்பொருள்; ஐம்பொறிநுகர்ச்சி; அனுபவம்; திறமை; முறைமை; மேன்மை; வேண்டற்பாடு; அழகு.

இல்லார்- இல்லாதவர்

உறற்பால -  ஊழ்வலியால் வந்துறும் துன்பங்கள்

ஊட்டல் - உண்பிக்கை; ஊட்டுதல்; அடைவிக்கை, கன்றுமுதலியனபால்குடித்தல்.

ஊட்டுதல் - உண்ணல்; உண்பித்தல்; வாயிலிடுதல்; புகட்டுதல்; கன்றுபால்குடித்தல்; சாயமேற்றுதல்; அகிற்புகை, செம்பஞ்சு, மைமுதலியனஊட்டுதல்; நினைப்பூட்டுதல்; நுகரச்செய்தல்.

ஊட்டா - வந்து வருத்தாமல் 

கழியும் - கழிதல் - மிகுதல்; கடந்துபோதல்; நடத்தல்; குறைபடுதல்; அழிதல்; ஒழிதல்; சாதல்; முடிவடைதல்; வருந்துதல்; மலம்முதலியனவெளிப்படுதல்; அச்சங்கொள்ளுதல்.

எனின் - என்றால், என்றுசொல்லின்; என்கையால்

முழுப்பொருள்
துப்புரவு என்ற சொல்லுக்கு அகராதியில் இடம்பெற்றுள்ள பொருள்களில் நுகர்ச்சிப்பொருள், ஐம்பொறிநுகர்ச்சி, திறமை, முறைமை ஆகிய பொருள்களை எடுத்துக்கொண்டால் இக்குறளுக்கு நல்ல ஒரு பொருள்ளை நாம் காண முடியும்.

ஒருவருக்கு நுகர்ச்சிச் செய்கிறப் பொருள்கள் இல்லையேல் அதாவது அவர் வறியவராக இருப்பினும், ஐம்பொறிகள் காட்டும் புலனின்பங்களை நுகர வேண்டும் என்று நாட்டம் இல்லையென்றாலும் (அவர் துறவறம் பூண எல்லா மனதகுதிகளும் இருப்பினும்),  ஒருவருக்கு திறமை இல்லையென்றாலும் அதில் இருந்து தப்பிக்க துறவறம் பூண வேண்டும் என்று நினைத்தாலும், ஒருவருக்கு துறவறம் பூண முறைமையில்லை (ஊழ்யில்லை) என்றால் தனது ஊழின் விதியால் அவர் துன்பங்கள் நீங்காமல் அதனை அனுபவிப்பார். அவரால் துறவறம் பூண முடியாது/மாட்டார். ஆதலால் துறவறம் என்பது தப்பித்துக்கொள்ளும் ஒரு வடிகால் அல்ல. துறவறம் பூணுவதற்கும் ஊழ்தனில் விதிக்கபட்டு இருக்கவேண்டும் என்றென்கிறார் திருவள்ளுவர். விதி வலிமை வாய்ந்தது.

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
துப்புரவு இல்லார் துறப்பார் - வறுமையான் நுகர்ச்சி இல்லாதார் துறக்கும் கருத்துடையராவர், உறற்பால ஊட்டா கழியும் எனின் - ஊழ்கள் உறுதற்பாலவாய துன்பங்களை உறுவியாது ஒழியுமாயின். ('துறப்பார்' என்பது ஆர்ஈற்று எதிர்கால முற்றுச்சொல். தம்மால் விடப்பெறுவன தாமே விடப்பெற்று வைத்தும், கருத்து வேறுபாட்டால் துன்பமுறுகின்றது ஊழின் வலியான் என்பது எஞ்சி நிற்றலின், 'மன்' ஒழியிசைக்கண் வந்தது.).

மணக்குடவர் உரை
நுகரும்பொரு ளில்லாதார் துறக்க அமைவர்: தமக்கு வந்துறுந் துன்பப்பகுதியானவை உறாதுபோமாயின். இது துறவறமானது ஊழினால் வருமென்றது

மு.வரதராசனார் உரை
வரவேண்டிய துன்பங்கள் வந்து வருத்தாமல் நீங்குமானால் நுகரும் பொருள் இல்லாத வறியவர் துறவறம் மேற்க்கொள்வர்.

சாலமன் பாப்பையா உரை
துன்பங்களை அனுபவிக்க வேண்டும் என்னும் விதி, ஏழைகளைத் தடுத்திருக்கவில்லை என்றால், அவர்கள் துறவியர் ஆகியிருப்பார்கள்.

No comments:

Post a Comment