நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும்

குறள் 336
நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும்
பெருமை உடைத்துஇவ் வுலகு
[அறத்துப்பால், துறவறவியல், நிலையாமை]
(For meaning in English, scroll to the bottom of this post)

பொருள்
நெருநல் - nerunal   s. yesterday, நேற்று; 2. adv. lately, recently, சற்றுமுன்

உளன் - வாழ்ந்த, இருந்த 

ஒருவன் - ஓர்ஆண்மகன்; ஒப்பற்றவன்; கடவுள்.

இன்று - இலை; இந்தநாள்; ஓரசைச்சொல்.

இல்லை - உண்டுஎன்பதன்எதிர்மறை; இன்மைப்பொருளைஉணர்த்திஐம்பால்மூவிடத்திலும்வரும்ஒருகுறிப்புவினைமுற்று; சாதலைஉணர்த்திஐம்பால்மூவிடத்திலும்வரும்ஒருகுறிப்புவினைமுற்று.

என்னும் - யாவும், எல்லாம்; என்றுசொல்லப்படும்; யாதும்; சிறிதும்

பெருமை - மாட்சிமை; மிகுதி; பருமை; புகழ்; வல்லமை; அகந்தை; அருமை

உடைத்து - உடைதல், இருக்கும், உண்டு

இவ் - இந்த 

உலகு உலகம், பூமி நாடு உலகத்தார்(இடவாகுபெயர்), உயர்ந்தோர், சான்றோர் திசை மங்கலச்சொற்களுள்ஒன்று

முழுப்பொருள்
நேற்று உயிருடன் இருந்த ஒருவர் இன்று உயிருடன் இல்லை என்கிற பெருமையை புகழை கொண்டது இவ்வுலகம். அதாவது இவ்வாழ்வும் உயிரும் நிலையில்லாதது. நிலையாமையை தன் இயற்கை விதி என கொண்டது இவ்வுலகு. அதுவே இவ்வுலகிற்கு பெருமை.

இது எப்படிப் பெருமையாகும்? இவ்வுலகத்தின் பார்வையில் யாரும் உயர்ந்தவர் அல்லர் சிறியோர் அல்லர். ஒருவர் எவ்வளவு நற்காரியங்கள் செய்தாலும் அவருக்கு இறப்பு வராது என்று அர்த்தம் ஆகாது. எல்லோருக்கும் இறப்பு நிச்சயம். நிலையான வாழ்வு இல்லை என்பதை எந்த ஒரு சார்பும் இல்லாமல் நடுவுநிலைமையுடன் பேணுகிறது இவ்வுலகம். அதனால் தான், அந்த நடுவுநிலைமையால் தான், தான் கொண்ட அறத்தில் இருந்து சிறிதும் விலகாததனால் தான் இவ்வுலகதிற்கு அந்தப் பெருமை சொந்தம்.

நேற்று வரை வாழ்ந்த ஒருவன் இன்று இல்லாமல் ஒழிகிறான், இறந்து படுகிறான்! இதை மனிதர்களைத் தினமும் காணவைத்து, “இந்த பூமியில் நிலையாய் வாழ்ந்தவர் யாரடா”, என்றுக் கேட்டு, யாருமில்லை என்பதை உணர்த்துகிற உலகம் பெருமைமிக்க ஒன்றுதானே!

சரி, உலகத்தின் பெருமையை ஏன் திருவள்ளுவர் கூறுகிறார்? எனக்கு சாவு வராது என்று நினைக்காதே. உனக்கும் வரும். ஆதலால் உன் நேரத்தை வீண் செய்யாமல் நல்ல செயல்களில் ஈடுப்படுத்துக்கொள். அறங்களை செய். பிறரை துன்புறுத்தாதே என்று சொல்லாமல் சொல்கிறார் திருவள்ளுவர்.

”பிறந்தார் பெயருந் தன்மை பிறரால் அறிதற் கெளிதோ” (கம்ப.நகர்நீங்கு 36)

கம்பர் இராமகாதையில், நகர் நீங்கு படலத்தில் (இந்திரசித்து 10), “பொன்றுதல் ஒருகாலத்தும் தவிருமோ பொதுமைத்தன்றோ! இன்றுளார் நாளை மாள்வார்” என்று சொல்லுகிறார். திருவாய்மொழி (1.2:2) , “மின்னின் நிலையில மன்னுயிர் யாக்கைகள்”  என்கிறது. அப்பர் திருக்காட்டுப்பள்ளி (9) பதிகத்தில், 
“இன்றுளார் நாளையில்லை எனும்பொருள் 
ஒன்றும் ஓராது உழிதரும் ஊமர்காள்” என்கிறார். எல்லாமே நிலையாமையைக் குறித்துக் கூறப்பட்டக் கருத்துக்கள்தாம்.

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
ஒருவன் நெருதல் உளன் இன்று இல்லை என்னும் பெருமை உடைத்து; - ஒருவன் நெருநல் உளனாயினான் , அவனே இன்று இல்லையாயினான் என்று சொல்லும் நிலையாமை மிகுதி உடைத்து, இவ்வுலகு - இவ்வுலகம். '(ஈண்டு உண்மை பிறத்தலையும், இன்மை இறத்தலையும் உணர்த்தி நின்றன. அவை பெண்பாற்கும் உளவாயினும், சிறப்புப்பற்றி ஆண்பாற்கே கூறினார். இந் நிலையாமையே உலகின் மிக்கது என்பதாம்.).

மணக்குடவர் உரை
ஒருவன் நேற்றுளனாயிருந்தான், இன்றில்லையாயினா னென்று சொல்லும் பெருமையை இவ்வுலகம் உடைத்து. இது யாக்கை நிலையாமை கூறிற்று.

மு.வரதராசனார் உரை
நேற்று இருந்தவன் ஒருவன் இன்று இல்லாமல் இறந்து போனான் என்று சொல்லப்படும் நிலையாமைஆகிய பெருமை உடையது இவ்வுலகம்.

சாலமன் பாப்பையா உரை
நேற்று இருந்த ஒருவன் இன்று இல்லை என்று சொல்லும்படி நிலையாமையை உடையது இவ்வுலகம்.

English Meaning - As I taught a kid - Rajesh
Those who were yesterday has gone today. No one can escape that. The world has transience as its reputation. Why does Thiruvalluvar say that? He could have said that to mean that, don't think you would live very long or not die and waste your time. Do your dharma. Do productive things that would help others. Do not hurt others or kill others. 

Questions that I ask to the kid
What reputation does this world have? Why does Thiruvalluvar say that?
A person who lived yesterday is not there today. Explain more.

No comments:

Post a Comment