இணர்எரி தோய்வன்ன இன்னா செயினும்

குறள் 308
இணர்எரி தோய்வன்ன இன்னா செயினும்
புணரின் வெகுளாமை நன்று
[அறத்துப்பால், துறவறவியல், வெகுளாமை]

பொருள்
இணர் - பூங்கொத்து [மெல்லிணர்க்கண்ணி], தொடர்ச்சி, குலை (bunch of fruit), ஒழுங்கு(arrangement), சுவாலை(flame), கிச்சிலிமரம், மாமரம்.

இணர்தல் - To pervade;வியாபித்தல்;
pervade: (especially of a smell) spread through and be perceived in every part of.
pervade: (of an influence, feeling, or quality) be present and apparent throughout.

எரி - நெருப்பு; வேள்வித்தீ; தீக்கடைகோல்; ஒளி; அக்கினிதேவன்; நரகம்; கார்த்திகை; புனர்பூசம்; கந்தகம்; இடபராசி; கேட்டை; வால்மீன்வகை.
எரி - (வி)எரிஎன்ஏவல்; ஒளிர்; அழல்; பொறாமைகொள்; சினங்கொள்; வயிறெரி.

தோய் - தோய்தல் - முழுகுதல்; நனைதல்; நிலத்துப்படிதல்; செறிதல்; அணைதல்; உறைதல்; கலத்தல்; பொருத்துதல்; முகத்தல்; கிட்டுதல்; ஒத்தல்; அகப்படுதல்; நட்டல்; துவைச்சலிடுதல்.

அன்ன - அத்தன்மையானவை; ஓர்அஃறிணைப்பன்மைக்குறிப்புவினைமுற்று; ஓர்உவமஉருபு.

இன்னா - துன்பம்; தீங்குதருபவை; கீழ்மையான; இகழ்ச்சி வெறுப்பு
செய்தல் - இயற்றுதல்; உண்டாக்கல்; சம்பாதித்தல்; ஒத்தல்
செயினும் - செய்தாலும் 

புணரின் புணர்தல் - பொருந்துதல்; கலவிசெய்தல்; அளவளாவுதல்; மேற்கொள்ளுதல்; ஏற்புடையதாதல்; விளங்குதல்; எழுத்துமுதலியனசந்தித்தல்; உடலிற்படுதல்; கூடியதாதல்; தலைவனும்தலைவியும்கூடுதலாகியகுறிஞ்சிஉரிப்பொருள்.

வெகுளாமை - சினவாமை, vekuḷāmai   n. id. + ஆneg. Non-irascibility, absence of anger;கோபியாமை, The absence of anger.

நன்று - நல்லது; சிறப்பு; பெரிது; அறம்; இன்பம்; நல்வினை; உதவி; வாழ்வின்நோக்கம்; துறக்கம்; ஏற்கைக்குறிப்பு.

முழுப்பொருள்
பல சுடர்களைக் கொண்ட நெருப்பு நம்மை அணைத்தால் எப்படி இருக்கும்? அது நம்மை சுட்டுப் பொறுக்கமுடியாத துன்பத்தைத் தரும். அதுப்போல பல துன்பங்களை நமக்கு ஒருவர் செய்தால் நம்மால் நமது சினத்தை காத்தல் என்பது கடினமாக காரியமாகும். முனிவர்கள் ஆனாலும் இல்லறத்தில் பொறுமையை கடைபிடிக்கும் இல்லறத்தார் ஆனாலும் துன்பத்தை சகிப்பதற்கும் ஒரு அளவு இருக்கிறது அல்லவா. ஆனால் அத்தகைய கடினமான பொறுக்கமுடியாத தருணங்களிலும் சினம்கொள்ளாது அத்துன்பங்களைப் பொறுத்துக்கொள்ள முடியுமானால் அது  நமக்கு மிக மிக நன்று (நன்மை பயக்கும்). 

திருவள்ளுவரும் உணர்ந்து இருக்கிறார் சில கொடிய துன்பங்களையும் தொடர்ந்து கொடுக்கப்படும் துன்பங்களையும் பொறுத்தல் மிக கடினமே. ஆனால் அதனை கோபம் கொள்ளாது பொறுக்க முடியுமானால் அது மிக நன்று. ஏனெனில் தேவையில்லாமல் சொற்களை இழக்கமாட்டோம். முகத்தில் சிரிப்பை இழக்கமாட்டோம். மன நிம்மதியை இழக்கமாட்டோம். உடல் ஆரோக்கியத்தை இழக்க மாட்டோம். உறவுகளை இழக்கமாட்டோம்.  

”கட்டழல் எவ்வம்” (சீவக 360)

பதிற்றுப்பத்துப்பாடல் (17:2-3), இன்னா செயினும் வெகுளாமையை 
பெரிய தப்புநராயினும் பகைவர் 
பணிந்து திறை பகரக்கொள்ளுநை” என்கிறது. 

பழமொழி (370) நானூறுப் பாடலும், 
இறப்பச் சிறியவர் இன்னாசெயினும் 
பிறப்பினான் மாண்டார் வெகுளார்” என்கிறது.

பொறையின் ஆற்றலால்
மூண்டெழு வெகுளியை முதலின் நீங்கினார்
ஆண்டுறை அரக்கரால் அலைப்புண் டாரரோ” (கம்ப.அகத்தியப்.8)


மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
இணர் எரி தோய்வு அன்ன இன்னா செயினும் - பல சுடரை உடைத்தாய பேரெரி வந்து தோய்ந்தாலொத்த இன்னாதவற்றை ஒருவன் செய்தானாயினும்; வெகுளாமை புணரின் நன்று - அவனை வெகுளாமை ஒருவற்குக் கூடுமாயின் அது நன்று. (இன்னாமையின் மிகுதி தோன்ற 'இணர் எரி' என்றும், அதனை மேன்மேலும் செய்தல் தோன்ற 'இன்னா' என்றும், அச்செயல் முனிவரையும் வெகுள்விக்கும் என்பது தோன்றப் 'புணரின்' என்றும் கூறினார். இதனான் வெகுளாமையது நன்மை கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
சினத்தைப் பொருளாகக் கொண்டவன் கெடுதல், நிலத்தெறிந்தவன்கை தப்பாமற் பட்டதுபோலும், இது பொருட்கேடு வருமென்றது.

மு.வரதராசனார் உரை
பலச் சுடர்களை உடைய பெரு நெருப்பில் தோய்வது போன்ற துன்பத்தை ஒருவன் செய்த போதிலும் கூடுமானால் அவன் மேல் சினங் கொள்ளாதிருத்தல் நல்லது.

சாலமன் பாப்பையா உரை
பல சுடரை உடைய பெருநெருப்பு நம் மீது பட்டது போன்ற தீமையை ஒருவன் நமக்குச் செய்தாலும், நம்மால் கோபம் கொள்ளாதிருக்க முடியுமானால் அது நம் உடலுக்கும் நல்லது.

No comments:

Post a Comment