தீயவை செய்தார் கெடுதல் நிழல்தன்னை

குறள் 208
தீயவை செய்தார் கெடுதல் நிழல்தன்னை
வீயாது அஇஉறைந் தற்று
[அறத்துப்பால், இல்லறவியல், தீவினையச்சம்]

பொருள்
தீயவை - தீயசெயல்; துன்பம்; கீழ்மக்கள்கூட்டம்.

செய்தார் - செய்தவர்

கெடுதல் - அழிதல்; பழுதாதல்; வறுமையடைதல்; ஒழுக்கங்கெடுதல்; உருவழித்தல்; தோற்றோடுதல்; விபத்து; தீங்கு; விகாரத்தால்எழுத்துக்கெடுதல்; வழிதவறிப்போதல்.

நிழல் - சாயை; எதிரொளி; அச்சு; குளிர்ச்சி; அருள்; ஒளி; நீதி; புகலிடம்; கொடை; செல்வம்; மரக்கொம்பு; நோய்; பேய்

தன்னை - தலைவன்; தமையன்; தமக்கை; தாய்.

வீ-தல் - vī-   4 v. intr. prob. vī. 1. Toperish; to cease; to disappear; அழிதல். வீயாச்சிறப்பின் (புறநா. 15). 2. To die; சாதல். சிலைத்தெழுந்தார் வீந்தவிய (பு. வெ. 3, 7). 3. To leave;நீங்குதல். வினைப்பகை வீயாது பின்சென் றடும்(குறள், 207). 4. To change; to deviate, as fromone's course; மாறுதல். வானின் வீயாது சுரக்கும்(மலைபடு. 76).

வீயாது - அழியாது 

அடி – அவருடைய அடியை ஒற்றியே

அடி – பாதம்; காற்சுவடு முதல் கடவுள் பாட்டின்அடி; அடிப்பீடம்; அண்மை மரபுவழி; அளவு கீழ் மகடூஉமுன்னிலை

உறைந்து - உறைதல் - தோய்தல்; தங்குதல்; வாழ்தல்; ஒழுகுதல்; இறுகுதல்; செறிதல்; உறுதியாதல்.

அற்று - அத்தன்மையது; அதுபோன்றது; ஓர்உவமஉருபு; ஒருசாரியை.

முழுப்பொருள்
ஒருவன் தீவினை செய்தால் முதலில் அவன் அவனுக்கே கேடு செய்துக்கொள்கிறான். அவன் செய்த தீவினை நிழல்ப்போல அவனை பின்தொடர்ந்து அவனை கொல்லும்/தண்டிக்கும். நிழலின் அளவு நேரத்திற்கு ஏற்ப வெளிச்சத்திற்கு ஏற்ப வெளிச்சத்தின் உயரத்திற்கு ஏற்ப மாறுபடும். ஆதலால் நிழல் பெரிதாகி தொலைவில் இருப்பது போலக்கூட தோன்றும். சில சமயம் மழுப்புவது போலவும் தோன்றும். ஆனால் எல்லா நிழலும் ஒருவனின் காலடியில் தான் தங்குகிறது.  அதுப்போல ஒருவன் செய்த வினை அவன் உள்ளே தான் தங்கும். ஆதலால் தீவினை செய்தால் அக்கேட்டை செய்த குற்றத்திற்கான தண்டனையில் இருந்து தப்பிக்கவே முடியாது. 

என்ற குறளையும் இங்கு தொடர்புபடுத்திக்கொள்ளலாம்.

ஒப்புமை
அகநானூற்று (49:15) வரியான, “செல்வுழிச் செல்வுழி மெய்ந்நிழற் போல” என்பதும்,  கலித்தொகை (61:8-9)  பாடல் வரியான் “நிழல்போற்றிரி தருவாய் என்னீ பெறாததீதென்”  என்பதும் நிழல் நம்மைத் தொடர்ந்து வருதலை குறிப்பதாகிய அறிவியல் உண்மையை உணர்த்தும் சங்கப்பாடல்கள். முழுக்கருத்தையும் சொல்லும் பாடலாக , “செற்றொருவரைச் செய்த தீமைகள் இம்மையே வரும் திண்ணமே” சுந்தரரின் தேவாராப்பாடலைச் (4) சொல்லலாம். 

”நீலமா மணிநிற நிருதர் வேந்தனை
மூலநா சம்பெற முடிக்கும் மொய்ம்பினாள்
மேலைநாள் உயிரொடும் பிறந்து தான்விளை
காலமோர்ந் துடனுறை கடிய நோயனாள்” (கம்ப.சூர்ப்பனகை.8)

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
தீயவை செய்தார் கெடுதல் - பிறர்க்குத் தீவினை செய்தார் தாம் கெடுதல் எத்தன்மைத்து எனின், நிழல் தன்னை வீயாது அடி உறைந்தற்று - ஒருவன் நிழல் நெடிதாகப் போயும், அவன்றன்னை விடாது வந்து அடியின்கண் தங்கியதன்மைத்து. (இவ்வுவமையைத் தன் காலம் வருந்துணையும் புலனாகாது உயிரைப்பற்றி நின்று அது வந்துழி உருப்பதாய தீவினையைச் செய்தார், பின் அதனால் கெடுதற்கு உவமையாக்கி உரைப்பாரும் உளர். அஃது உரை அன்று என்பதற்கு அடி உறைந்த நிழல் தன்னை வீந்தற்று என்னாது, வீயாது அடி உறைந்தற்று என்ற பாடமே கரியாயிற்று. மேல் 'வீயாது பின் சென்று அடும்' என்றார்.ஈண்டு அதனை உவமையான் விளக்கினார்.).

மணக்குடவர் உரை
தீயவானவற்றைப் பிறர்க்குச் செய்தார் கெடுதல், நிழல் தன்னை நீங்காதே உள்ளடியின்கீழ் ஒதுங்கினாற் போலும். மேல் வினைப்பகை பின் சென்றடுமென்றார் அஃதடுமாறு காட்டினார்.

மு.வரதராசனார் உரை
தீய செயல்களைச் செய்தவர் கேட்டை அடைதல், ஒருவனுடைய நிழல் அவனை விடாமல் வந்து அடியில் தங்கியிருத்தலைப் போன்றது.

சாலமன் பாப்பையா உரை
பிறர்க்குத் தீமை செய்தவர் அழிவது, அவரை அவரது நிழல் விடாது கால்களின் கீழே தங்கியிருப்பது போலாம்.

No comments:

Post a Comment