அரும்பயன் ஆயும் அறிவினார் சொல்லார்

குறள் 198
அரும்பயன் ஆயும் அறிவினார் சொல்லார்
பெரும்பயன் இல்லாத சொல்
[அறத்துப்பால், இல்லறவியல், பயனில சொல்லாமை]
(For meaning in English, scroll to the bottom of this post)

பொருள்
அரும் - அருமை - அபூர்வம், மேன்மை, வருத்தம், இன்மை,

பயன் - பலன்; வினைப்பயன்; சொற்பொருள்; செல்வம்; பழம்; அகலம்; சாறு; பால்; வாவி; அமுதம்; நீர்.

ஆயும் - ஆய்தல் - நுணுகுதல்; வருந்துதல் அழகமைதல்; அசைதல் சோதனைசெய்தல்; பிரித்தெடுத்தல்; ஆலோசித்தல் தெரிந்தெடுத்தல்; கொண்டாடுதல் கொய்தல் காம்புகளைதல்; குத்துதல்

அறிவினார் - அறிவு உடையவர்கள்

சொல்லார் - சொல்லமாட்டார்கள் 

பெரும் - பெரிதான; மூத்த; இன்றியமையாத, பெருமை

பயன்  - பலன்; வினைப்பயன்; சொற்பொருள்; செல்வம்; பழம்; அகலம்; சாறு; பால்; வாவி; அமுதம்; நீர்.

இல்லாத - இல்லை, வறுமை

சொல் - மொழி; பேச்சு; பழமொழி; உறுதிமொழி; புகழ்; மந்திரம்; சாபம்; கட்டளை; புத்திமதி; பெயர்ச்சொல்; வினைச்சொல்; இடைச்சொல், உரிச்சொல்என்னும்நால்வகைமொழிகள்; தமிழ்மொழியில்உள்ளஇயற்சொல், திரிசொல், திசைச்சொல், வடசொல்எனநால்வகைப்பட்டமொழிகள்; நாடகவரங்கில்பேசப்படும்உட்சொல், புறச்சொல்; ஆகாசச்சொல்என்பன; சத்தம்; நாமகள்; பேசச்செய்வதானகள்; நெல்.    

முழுப்பொருள்
மேன்மையைத் தரக்கூடியச் சொற்களை அரிதானப் பயனை தரக்கூடிய சொற்களை நுணுகி அசைப்போட்டு ஆராய்வோர் அறிவுடையோர்கள். அத்தகைய அறிவுடையோர் பெரிய பயன்களை விளைவிக்கும் சொற்களையே பேசுவார்கள். சிறிய சராசரியான பயனை விளைவிக்கும் சொற்களைக்கூட பேசமாட்டார்கள். சிறிய பயனை விளைவிக்கும் சொற்களையே பேசமாட்டார்கள் பேசக்கூடாது என்றால் அவர்கள் பயனற்ற சொற்களை பேசவே கூடாது பேசவும் மாட்டார்கள். 

மேலும், ”அரும்பயன் ஆயும் அறிவினார்” - அதாவது அறிவினார் அரும்பயன் தரக்கூடியவற்றை ஆய்வர் என்றே கூறப்பட்டுள்ளது. அதவாது அரும்பயன் தரக்கூடியவற்றை தனது மனதில் சிந்திப்பர், அதையே தியானித்து செயல்படுத்தி வெற்றிக்கண்டு பயனை அறுவடை செய்வர். ஆதலால் அவர்கள் பேசினால் அரும்பயன் தரக்கூடியவற்றையே பேசுவர். அத்தகையோர் பெரும்பயன் அல்லாதவற்றை ஒரு போதும் சொல்லமாட்டார்கள்.

ஒருவிதத்தில் பார்த்தால் அவர்களுடைய ஆக்க சக்தியை ஆன்ம சக்தியை அவர்கள் சேமித்து வைத்துக்கொள்ள இது உதவும். பெரிய செயல்கள் நம்மை கைவிடாது. சிறிய செயல்கள் நம்மை கைவிடும். அதுபோலவே சொற்களும். பெரும் பயன் தரும் சொற்களை கண்டடைந்தால் அது நமக்கு நன்மையை  தரும். அதுவே சிறியபயன் தரும் சொற்களையும் பயனற்ற சொற்களையும் பேசிக்கொண்டு இருந்தால் வாழ்க்கையை சதா ஓடிக்கொண்டு தொலைப்பதுப்போல தொலைத்துவிடுவோம். 

"குறள் 26 செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர் செயற்கரிய செய்கலா தார்" என்ற குறளுடன் இக்குறளைத் தொடர்புக் கொண்டு பார்த்தால் பெரியோர்கள் பெரும் பயன் தரும் சொற்களைப் பேசுவார்கள் ஆனால் சிறியோர் பேசும் சிறிய பயன் தரும் அல்லது பயன் தராத சொற்களை தவிர வேறு ஏதையும் பேசமாட்டார்கள்.  ஒரு வேளை பேசினாலும் செயல்படுத்தமாட்டார்கள்

சமீபத்தில் பாவண்ணன் எழுதிய ”பேச்சு கூட எவ்வளவு போதை தரக்கூடியது என்பதை அன்று நான் புரிந்துக்கொண்டேன்” என்ற ஒரு வரியை வாசித்தேன். அவ்வார்த்தை என்னிடம் ஒரு சிறு அசைவை ஏற்படுத்தியது. எவ்வளவு உண்மை. நானே பல நூறு என்ன சில ஆயிர மணி நேரங்கள் போனில் பேசி வீண் செய்து இருக்கிறேன் என்பதை வருத்தத்துடன் பதிவு செய்கிறேன் இங்கு. நண்பர்களுடன் வீணான பல அரட்டைகளை என் இருபதுகளில் செய்து இருக்கிறேன். ஒரு தடவை 2008இல், என் நண்பரின் அண்ணனிடம் உரையாடலில் அவர் வருடத்திற்கு ஒரு தடவை தான் ரூபாய் மூவாயிரத்துக்கு தனது போனை ரீசார்ஜ் செய்வார் என்று கூறினார். ஆனால் அதில் ஐநூறு ரூபாய்க்கு கூட பேச மாட்டேன் என்றார். நான் அதிசயமாக, ஏன்? என்று அவரிடம் கேட்டேன். இருக்கு என்பதற்காக பேசுவதா? அவசியமில்லை. நேரமுமில்லை. நண்பர்களுக்கு 5-6 மாதங்களுக்கு ஒரு தடவை பேசினால் போதாதா என்று சொன்னார். சரி, நீ எவ்வளவு ரீசார்ஜ் செய்வாய் என்று கேட்டார். நான் சொன்னேன் 300 ரூபாய் மாதம் என்றேன். எவ்ளோ பேசுவ? என்று வினவினார். 300ரூபாயும் தீர்த்துவிடுவேன். நான் வெட்கும்படியாக ஏளனமாக என்னைப் பார்த்து சிரித்தார். அவர் ஏன் ஒரு நல்ல மருத்துவராக வளர்ந்து இருக்கிறார் என்று அப்பொழுது புரிந்துக்கொண்டேன். ஏனெனில் அவர் தனது ஆத்மசக்தியை செயலிலும் கற்றலிலும் பெற்றார். வீண் பேச்சுப் பேசி தன் நேரத்தையும் ஆத்மசக்தியையும் வீண் செய்யவில்லை.

மேலும், ஜெயமோகனின் வான்கீழ் சிறுகதையில் இவ்வரிகளை படிக்கும் பொழுதும் இக்குறள் எனக்கு நினைவிற்கு வந்தது


உதாரணம் 
குழந்தை பரதனோடு துஷ்யந்தன் அரண்மனை வந்தார் சகுந்தலை. ஏதும் அறியாதவன் போல துஷ்யந்தன் கீழ்வரும் வினாக்களைக் கேட்டான்:

” பெண்ணே நீ யார்? உன் கணவன் யார்? இந்தப் பையன் யார்? இங்கு ஏன் வந்தாய்?”

சகுந்தலை கூறினாள், “” மகனே! பரதா! உன் தந்தையை வணங்கு!”

அவன் கேட்ட அத்தனை கேள்விகளுக்கும் ஒரே வரியில் பதில்.

இடைச்செருகல்:
செவிக்கு நாம் கொடுப்பது செல்வம் என்று நினைத்து நாம் செவிக்கு செல்வத்தை கொடுத்தால் நாம் எவ்வளவு மேன்மை அடைய முடியும் என்பதை உணரமுடியும். ஆதலால் நாம் கேட்கும் நிகழ்ச்சிகள், காணொளிகள், youtube காணொளிகள் ஆகியவற்றை தேர்ந்தெடுத்து கேட்போம். 

கேட்போர்க்கு ‘செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம்’ என்று கூறியதால் தான் பேசுவோர்/சொல்வோர்க்கு ‘குறள் 198 அரும்பயன் ஆயும் அறிவினார் சொல்லார் பெரும்பயன் இல்லாத சொல் ’ என்று கூறியுள்ளார் திருவள்ளுவர். 

மேலும், மேடை என்பது ஏதோ ஒருவகையில் அறிவை (செல்வத்தை) கொடுக்கும் இடம் ஏனெனில் மற்றவர் செவிகளை நம்மிடம் ஒரு 30-60 நிமிடங்கள் கொடுக்கின்றனர். அதனை உணர்ந்து மேடையில் இருப்போர் பேசவேண்டும். மேடைகளை நகைச்சுவை மன்றம்போல், whatsapp பல்கலைகழக ஒலிபெருக்கிகள் போல் ஆக்கிவிட கூடாது. 


மேலும்: அஷோக் உரை

ஒரு கவிதை
நான் சொற்களை விதைப்பவன் அல்லன்
மேலும் விளைவிப்பவனும் அல்லன்
கனவான்களே
எனக்கு சொற்களை செரைக்க மட்டுமே தெரியும்
-- கவிஞர் சாமான்யன் (கவிதைத் தொகுப்பு: மயிர் வெட்டி)


பரிமேலழகர் உரை
அரும்பயன் ஆயும் அறிவினார் - அறிதற்கு அரிய பயன்களை ஆராயவல்ல அறிவினையுடையார், பெரும்பயன் இல்லாத சொல் சொல்லார் - மிக்க பயனுடைய அல்லாத சொற்களைச் சொல்லார். (அறிதற்கு அரிய பயன்களாவன, வீடு பேறும், மேற்கதிச் செலவும் முதலாயின. 'பெரும்பயன் இல்லாத' எனவே பயன் சிறிது உடையனவும் ஒழிக்கப்பட்டன.).

மணக்குடவர் உரை
அரிய பொருளை யாராயும் அறிவினையுடையார் சொல்லார்; பெரிய பயனில்லாத சொற்களை, இது மேற்கூறிய குற்றமெல்லாம் பயத்தலின் இதனை யறிவுடையார் கூறாரென்றது.

மு.வரதராசனார் உரை
அருமையான பயன்களை ஆராயவல்ல அறிவை உடைய அறிஞர், மிக்க பயன் இல்லாத சொற்களை ஒருபோதும் சொல்லமாட்டார்.

சாலமன் பாப்பையா உரை
அரிய பயன்களை ஆராயும் அறிவுடையோர், பெரும்பயன் இல்லாத சொற்களைச் சொல்வார்.

English Meaning - As I taught a kid - Rajesh
Wise and knowledgable people will  will always think about stuffs that will yield great valuable results that will benefit the society. Such persons will never utter or communicate words that doesn't yield results. That means they will never indulge in trivial talks, insignificant talks, gossips, meaningless debates etc. It is because they conserve their energy for greater things and also not to get distracted in silly things. Mouth is one of sense, apart from mindless eating, mindless futile speaking also should be controlled

Questions that I ask to the kid
what does knowledgble people think about ? (think about great useful things) and what they don't speak? (Trivial things, gossip)?
What does speaking trivial / gossip take away from you ? (energy. focus away from great things. it is a distraction.)

No comments:

Post a Comment