பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க

குறள் 6
பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடுவாழ் வார்
[அறத்துப்பால், பாயிரவியல், கடவுள் வாழ்த்து]

பொருள்
பொறி - வரி, கோடு, புள்ளி; தழும்பு; அடையாளம்; எழுத்து; இலாஞ்சனை; விருது; உயர்ந்தஉடல்இலக்கணம்; வண்டு; பீலி; தேமல்; பதுமை; விதி; கன்னப்பொருத்து; மூட்டுவாய்; மெய், வாய், கண், மூக்கு, செவிஎன்னும்ஐம்பொறி; ஆண்குறி; மனம்; அறிவு; அனற்றுகள்; ஒளி; எந்திரம்; மதிலுறுப்பு; மரக்கலம்; விரகு; நெற்றிப்பட்டம்; திருமகள்; செல்வம்; பொலிவு; முன்வினைப்பயன்; திரட்சி; ஊழ்.

வாயில் - வழி; கட்டடத்துள்நுழையும்வாசல்; ஐம்பொறி; ஐம்புலன்; துளை; இடம்; காரணம்; கழுவாய்; அரசவை; வாயில்காப்போன்; தூதன்; தலைவனையும்தலைவியையும்இடைநின்றுகூட்டுந்தூது; திறம்; கதவு; வரலாறு.

ஐந்து - மெய், வாய், கண், மூக்கு, செவிஎன்னும்ஐம்பொறிகள்; ஐந்தென்னும்எண்; பஞ்சாங்கம்.

அவித்தான் - அவித்தல் - வேகச்செ ய்தல்; அணைத்துவிடுதல்; அடக்குதல்; கெடுத்தல் துடைத்தல் நீக்குதல்

பொய் - மாயை; போலியானது; உண்மையல்லாதது; நிலையாமை; உட்டுளை; மரப்பொந்து; செயற்கையானது; சிறுசிறாய்.

தீர் - tīr   VI. v. t. finish, complete, முடி; 2. accomplish, perfect, பூர்த்தியாக்கு; 3. settle, decide, தீர்மானி; 4. expiate (as sin), cure (as sickness), allay (as thirst) நீக்கு.

தீர்த்தல் - விடுதல்; முடித்தல்; போக்குதல்; அழித்தல்; கொல்லுதல்; தீர்ப்புச்செய்தல்; நன்றாகப்புடைத்தல்; கடன்முதலியனஒழித்தல்; மனைவியைவிலக்குதல்.

ஒழுக்க - ஒழுக்கம் - நடை, முறைமை; நன்னடத்தை, ஆசாரம்; சீலம்; உலகம்ஓம்பியநெறி; உயர்ச்சி; தன்மை; குலம்.

நெறி - வழி; சமயம்; வளைவு; சுருள்; விதி; ஒழுக்கம்; செய்யுள்நடை; குலம்; வழிவகை; ஆளுகை; குதிரைமுதலியவற்றின்நடை; வீடுபேறு; கோயில்; தாழ்ப்பாள்; கண்மண்டைக்குழி; புறவிதழ்ஒடிக்கை; காண்க:நெறிக்கட்டி; மனநிலை.

நின்றார் - நின்று - id. adv. Always, permanently; எப்பொழுதும். நிறைபய னொருங்குடனின்றுபெற நிகழுங் குன்றவை சிலவே (பரிபா. 15,7).--part. A particle used in the ablativesense; ஐந்தாம்வேற்றுமைப்பொருள்பட வரும் ஓரிடைச்சொல். (திருக்கோ. 34, உரை.)

நில் - nil   நில்லு V. v. i. (நின்றேன், நிற்பேன்) stand; 2. stay தங்கு; 3. be durable, last, persist in a course of conduct, persevere, நிலைநில்; 4. be retained or held, அடங்கு; 5. cease, be discontinued, stopped, suspended, ஒழி.

நீடு - நெடுங்காலம்; நிலைத்திருக்கை.

வாழ்வார் - வாழ்கிறார்

வாழ்தல் - இருத்தல்; செழித்திருத்தல்; மகிழ்தல்; சுமங்கலியாகஇருத்தல்; விதிப்படிஒழுகுதல்.

முழுப்பொருள்
ஒருவன் முக்தி அடைய எது வழி? ஐந்து பொறிகள் எனப்படும் கண், வாய், மூக்கு, செவி, மெய் (உடல்) ஆகியவற்றின் வழியாக பிறக்கும் ஆசைகளை முற்றுமாக அழித்து, பொய்களை அறுத்து நிலையாமையை கடந்து நிலைத்து நிற்கும் இறைவனை அவன் வழியான அற ஒழுக்க நெறிகளில் நிற்கின்றவர் நெடுங்காலம் வாழ்வார். முக்தி அடைவார்.  

திருஞானசம்பந்தர் பின்வரும் தேவாரப் பண்ணிலே, இதே போன்ற கருத்தை முன்வைத்து, 
“ புலனைந்தும் பொறி கலங்கி நெறி மயங்கி அறிவழிந்திட்டு”  
என்கிறார்.  ஐம்புலன்களும் தங்கள் பயனான இயக்கத்தினின்றும் தடுமாறி, அவற்றுக்குரிய நெறி மறந்து, அதனால் அறிவழிந்த்திட்டு என்பார்..
புலன்களின் இச்சைகள் பெரும்பாலும் நம்மை நல்லொழுக்க வழிகளிலிருந்த்து விலக்குவதாகவே இருக்கின்றன. 

தியடோர் பாஸ்கரன் அவர்கள் “செல்விருந்துதோம்பி வருவிருந்து பார்த்திருப்பார்” என்ற கட்டுரையில் இக்குறளை இப்படி எழுதியிருப்பார் - “பொறிவாயில் ஐந்துவித்தான் யார்?” சாதி போன்ற உயர்வு தாழ்வற்றதுமன்றி, எல்லா மனிதர் மட்டுமல்ல எல்லா உயிர்களும் பிறப்பொக்கும் என்ற கருத்தாக்கம் என்ன மிகவும் ஈர்த்தது. 

மேலும்: அஷோக் உரை

ஒப்புமை
”ஐவரை வென்றோன்” (சிலப் 10:198)
“அஞ்சொண் புலனும் அவைசெற்ற
மஞ்சன் மயிலா டுதுறையை
நெஞ்சொன்றிநினைந் தெழுவார்மேல்
துஞ்சம் பிணியா யினதானே” (சம்பந்தர்.திருமயிலாடுதுறை 4)

“வென்றவன் புலன்ஐந்தும்” (சம்பந்தர்.திருவல்லம் 10)

“அஞ்சு புலங்களை விலங்கினை” (சம்பந்தர்.திருப்புறம்பயம் 8)

“புலங்கள் வென்றவன் எம்இறைவன்” (சம்பந்தர்.திருவெண்டுறை 7)

“வென்றானைப் புலன்ஐந்தும்” (அப்பர்.உள்ளத்திருக் 7)

“பொல்லாப் புலனைந்தும் போக்கி னான்காண்” (அப்பர்.திருக்காளத்தி 6)

“அறுத்தானாம் அஞ்சும்” (அப்பர்.திருக்கருகாவூர் 11)

“பொறிவாயில் ஐந்தவித்த புனிதன் நீயே” (சிவசம்போதனை 1:29)

“பொறிவாயிலிவ்வைந்தனையும் அவியப் பொருது” (சுந்தரர், நெல்வாயில் 2)

”பிணக்கற அறுவகைச் சமயமும் நெறிஉள்ளி உரைத்த
கணக்கறு நலத்தினன்” (திருவாய்மொழி 1.3:5)
“அறிவினாற் குறைவில்லா அகல்ஞாலத் தவர் அறிய
நெறியெல்லாம் எடுத்துரைத்த நிறைஞானத் தொருமூர்த்தி”  (திருவாய்மொழி 4.8:6)

பரிமேலழகர் உரை
பொறி வாயில் ஐந்து அவித்தான் - மெய், வாய், கண், மூக்கு, செவி என்னும் பொறிகளை வழியாக உடைய ஐந்து அவாவினையும் அறுத்தானது; பொய் தீர் ஒழுக்க நெறி நின்றார்-மெய்யான ஒழுக்க நெறியின்கண் நின்றார், நீடு வாழ்வார் - பிறப்பு இன்றி எக்காலத்தும் ஒரு தன்மையராய் வாழ்வார். (புலன்கள் ஐந்து ஆகலான், அவற்றின்கண் செல்கின்ற அவாவும் ஐந்து ஆயிற்று. ஒழுக்க நெறி ஐந்தவித்தானால் சொல்லப்பட்டமையின், ஆண்டை ஆறனுருபு செய்யுட் கிழமைக்கண் வந்தது. 'கபிலரது பாட்டு' என்பது போல. இவை நான்கு பாட்டானும் இறைவனை நினைத்தலும், வாழ்த்தலும், அவன் நெறி நிற்றலும் செய்தார் வீடு பெறுவர் என்பது கூறப்பட்டது).

மணக்குடவர் உரை
மெய் வாய் கண் மூக்குச் செவியென்னும் ஐம் பொறிகளின் வழியாக வரும் ஊறு சுவை யொளி நாற்ற மோசை யென்னு மைந்தின்கண்ணுஞ் செல்லும் மன நிகழ்ச்சியை அடக்கினானது பொய்யற்ற வொழுக்க நெறியிலே நின்றாரன்றே நெடிது வாழ்வார்?.இது சாவில்லையென்றது.

மு.வரதராசனார் உரை
ஐம்பொறி வாயிலாக பிறக்கும் வேட்கைகளை அவித்த இறைவனுடைய பொய்யற்ற ஒழுக்க நெறியில் நின்றவர், நிலை பெற்ற நல்வாழ்க்கை வாழ்வர்.

சாலமன் பாப்பையா உரை
மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய ஐந்து பொறிகளின் வழிப் பிறக்கும் தீய ஆசைகளை அழித்து கடவுளின் பொய்யற்ற ஒழுக்க வழியிலே நின்றர் நெடுங்காலம் வாழ்வார்.

குறளும் பொருளும் - பா.ராகவன் உரை
புலனடக்கம் பலன் தரும்.

No comments:

Post a Comment