கலந்துணர்த்தும் காதலர்க் கண்டாற் புலந்துணராய்

குறள் 1246
கலந்துணர்த்தும் காதலர்க் கண்டாற் புலந்துணராய்
பொய்க்காய்வு காய்திஎன் நெஞ்சு
[காமத்துப்பால், கற்பியல், நெஞ்சொடுகிளத்தல்]

பொருள்
கலந்து - கலத்தல் - சேர்த்தல்; சேர்தல்; நெருங்கல்; புணர்தல்; பொருந்தல்; கூட்டுறவாதல்; தோன்றுதல்; பரத்தல்.

உணர்த்தும் - உணர்த்தல் - அறிவித்தல்; துயிலெழுப்புதல்; ஊடல்தீர்த்தல்; நினைப்பூட்டுதல் கற்பித்தல்

உணர்தல் - அறிதல்; நினைதல், கருதுதல் ஆராய்தல் இயல்புணர்தல்; ஊடல்நீங்குதல்; தெளிதல் துயிலெழுதல் பகுத்தறிதல் நுகர்தல் தொட்டறிதல்; பாவித்தல்

காதலர்க் -  கணவன், தோழன், மகன் என்ற மூன்று நட்பாளர்கள்.

கண்டால் - காணுதல் - காணும் பொழுது ; அறிதல்; காண்டல்; சந்தித்தல்; செய்தல்; வணங்குதல்

புலந்து - புலத்தல் - மனம்வேறுபடுதல்; துன்புறுதல்; வெறுத்தல்; அறிவுறுத்துதல்.

உணராய் - உணர் ; உணரமாட்டாய்; 

பொய்க் - மாயை; போலியானது; உண்மையல்லாதது; நிலையாமை; உட்டுளை; மரப்பொந்து; செயற்கையானது; சிறுசிறாய்.

காய்வு - காய்தல் - உலர்தல்; சுடுதல்; மெலிதல்; வருந்தல்; விடாய்த்தல்; வெயில்நிலாக்கள்எறித்தல்; எரித்தல்; அழித்தல்; விலக்குதல்; வெறுத்தல்; வெகுளுதல்; கடிந்துகூறுதல்; வெட்டுதல்.

பொய்க்காய்வு - poy-k-kāyvu   n. பொய் +.Temporary estrangement; நிலையில் வெறுப்பு.(குறள், 1246.)

காய்தி - காய்தல் - உலர்தல்; சுடுதல்; மெலிதல்; வருந்தல்; விடாய்த்தல்; வெயில்நிலாக்கள்எறித்தல்; எரித்தல்; அழித்தல்; விலக்குதல்; வெறுத்தல்; வெகுளுதல்; கடிந்துகூறுதல்; வெட்டுதல்.

என் - என்னுடைய ; என்ன; வினாவினைக்குறிப்பு; ஐயக்கிளவி; இகழ்ச்சிக்குறிப்பு; 'எது'அல்லது'எதை'எனப்பொருள்படும்இடைச்சொல்; தன்மைஒருமைச்சொல்; யான்என்பதுவேற்றுமைப்பொருளில்அடையும்திரிபு; ஓர்அசைச்சொல்.

நெஞ்சு - மனம்; இதயம்; மார்பு; நடு; திண்ணக்கம்; தொண்டை; துணிவு.

முழுப்பொருள்
காதலரை பிரிந்து உள்ள தலைவி, தலைவன் வந்த உடன் என்ன நடக்கும் என்று நினைத்து, தன் நெஞ்சுடன் பேசுகிறாள். ஏ நெஞ்சே! என் தலைவனுடன் நான் ஊடலில் இருக்கிறேன். ஆனால் அவர் வந்த உடன் என்னுடன் கூடி அந்த ஊடலை எல்லாம் நீக்கிவிடுவார். (அப்படியெனில் அவர் என்னை பிரிந்து சென்ற தவறுகளையெல்லாம் எப்படி உணர்த்த முடியும்?). இப்படி இருக்கையில் அவருடன் ஊடுவதுப் போல ஏன் நெஞ்சே நீ பொய்யாக ஊடுகிறாய் / (நடிக்கிறாய்)? யாரை ஏமாற்ற? நான் அறிய மாட்டேனா உன்னை. அவரை வெறுத்தாலும் ஆழுள்ளத்தில் காதல் தான் நிரம்பியுள்ளது. காதலனை கண்ட உடன் பொங்கி வந்துவிடுகிறது. என் ஊடல் எல்லாம் வீண். 

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
(தலைமகன் கொடுமை நினைந்து செலவு உடன்படாத நெஞ்சினைக் கழறியது.) என் நெஞ்சே, கலந்து உணர்த்தும் காதலர்க்கணடால் புலந்து உணராய் - யான் தம்மொடு புலந்தால் அப்புலவியைக் கலவிதன்னானே நீக்கவல்ல காதலரைக் கண்டால் பொய்யேயாயினும் ஒருகால் புலந்து பின்னதனை நீக்க மாட்டாய்; பொய்க்காய்வு காய்தி - அதுவும் மாட்டாத நீ, இப்பொழுது அவர் கொடியர் எனப் பொய்க் காய்வு காயாநின்றாய், இனி இதனை ஒழிந்து அவர்பாற் செல்லத் துணிவாயாக. ('கலத்தலான்' என்னும் பொருட்டாய்க் 'கலக்க' என்பது திரிந்து நின்றது. அதனான் உணர்த்தலாவது கலவியின்பத்தைக் காட்டி , அதனான் மயக்கிப் புலவிக் குறிப்பினை ஒழித்தல். பொய்க்காய்வு - நிலையில் வெறுப்பு. 'கண்டால் மாட்டாத நீ காணாதவழி வெறுக்கின்றதனால் பயனில்லை' என்பதாம்.).

மணக்குடவர் உரை
என்நெஞ்சே! நீ காதலர் கொடுமையை அவர்க்கு உட்பட்டு அறிந்து வைத்தும் அவரைக்கண்டால் புலந்து கலக்கமாட்டாது முன்பே கலப்பை: இப்பொழுது பொய்க்காய்வு காயாநின்றாய்.

மு.வரதராசனார் உரை
என் நெஞ்சே! ஊடியபோது கூடி ஊடல் உணர்த்த வல்ல காதலரைக் கண்டபோது நீ பிணங்கி உணர மாட்டாய்; பொய்யான சினங்கொண்டு காய்கினறாய்.

சாலமன் பாப்பையா உரை
என் நெஞ்சே! நான் அவருடன் ஊடினால் அந்த ஊடலை என்னுடன் கூடி நீக்கவல்ல என் அன்பரைக் கண்டால் பொய்யாகவாவது கொஞ்சம் ஊடிப் பிறகு ஊடலை விட்டுக் கூடமாட்டோம். இப்போது அதையும் விட்டுவிட்டு அவரைக் கொடியவர் எனப் பொய்யாக வெறுப்பது போல் இருக்கின்றாய்; இதை விடுத்து அவரிடம் போயேன்.

No comments:

Post a Comment