வாணிகம் செய்வார்க்கு வாணிகம் பேணிப்

குறள் 120
வாணிகம் செய்வார்க்கு வாணிகம் பேணிப்
பிறவும் தமபோல் செயின்
[அறத்துப்பால், இல்லறவியல்,  நடுவு நிலைமை]

பொருள்
வாணிகம் - வியாபாரம்; ஊதியம்.

செய்வார்க்கு - செய்பவர்க்கு 
செய்தல் - இயற்றுதல்; உண்டாக்கல்; சம்பாதித்தல்; ஒத்தல்.

வாணிகம் - வியாபாரம்; ஊதியம்.

பேணிப் பேணுதல் - போற்றுதல், உபசரித்தல்; ஒத்தல்; மதித்தல்; விரும்புதல்; பாதுகாத்தல்; வழிபடுதல்; பொருட்படுத்துதல்; ஓம்புதல்; அலங்கரித்தல்; கருதுதல்; குறித்தல்; உட்கொள்ளுதல்; அறிதல்.

பிறவும் - பிற - மற்றவை; ஓர்அசைச்சொல்.
பிறர் - அயலார்.

தமபோல் - தம்முடையதுப் போல

செயின்செய்தல் - இயற்றுதல்; உண்டாக்கல்; சம்பாதித்தல்; ஒத்தல்.

முழுப்பொருள்


இவ்வதிகாரத்தில் ஒன்பது குறள்களை நீதிபதிகளுக்கு கூறினார் திருவள்ளுவர். நீதிபதிக்கு அடுத்து தராசுக்கோலை கையில் ஏந்துபவர் வாணிகம் செய்வோர் ஆவர். அதனால் தான் அவர்களுக்கு ஒரு குறள்.

வாணிகம் செய்வோர் ஒரு இடத்தில இருந்து பொருளை பெற்று மற்றொரு இடத்தில அப்பொருளை விற்பார்கள். 

1) பொருளை வாங்கும் பொழுது எடை கம்மியாக இருந்தால் வாங்குவாரா? வாங்கமாட்டார் வியாபாரி. அதேபோல வியாபாரி பொருளை விற்கும் பொழுது எடை குறைவாக விற்கக்கூடாது. நியாயமாக விற்க வேண்டும். 
(நமக்கு விற்கும் ஒருவர் எடை அதிகமாக கொடுத்தாலும், அதனை தன்பொருள் என எண்ணி அவரிடமே கொடுத்துவிட வேண்டும்) 

2) பொருளை அதற்கான நியாயமான விலைக்கு அதிகமாக வியாபாரி வாங்க மாட்டார். ஏனெனில் அது அதிக விலைக்கு விற்கப்படுகிறது. அதுமட்டும் இன்றி அது தனக்கு கட்டுப்படி ஆகாது. அதேபோல தன்னுடைய வாடிக்கையாளருக்கு அதிக விலைக்கு அதாவது அதீத இலாபத்துடன் விற்க கூடாது. ஏனெனில் அது வாடிக்கையாளருக்கு கட்டுப்படி ஆகாது. 

3) சில சமயங்களில் தட்டுப்பாடு காரணமாக அதிக தேவை இருக்கலாம். அப்பொழுது பொருளை பதுக்கி பின்பு விலை ஏற்றி விற்பது எல்லாம் அநியாயம். சந்தர்ப்பவாதம். வாணிபர் அப்படி இருக்கக்கூடாது. 

ஆதலால் ஒரு வியாபாரி பிறருக்கு தான் விற்கும் பொருளை தன்பொருள் என எண்ணி அளவான இலாபத்துடன் எடை குறையாது விற்கவேண்டும். அதுவே ஒரு நல்ல தொழில் முறையாகும். 

வெறுமனே எடையில் நியாயம் இருக்க வேண்டும் என்று கூறாமல் இலாபத்திலும் நியாயம் இருக்க வேண்டும் என்று கூறுவது தான் திருவள்ளுவரின் சிறப்பு. 

சங்க இலக்கியமான பட்டினப்பாலை இவ்வாறு சொல்கிறது: “நடுவுநின்ற நன்னெஞ்சினோர் வடுவஞ்சி வாய்மொழிந்து தமவும் பிறவு மொப்ப நாடிக் கொள்வதூஉம் மிகைகொளாது கொடுப்பதூஉங் குறைகொடாது பல்பண்டம் பகர்ந்துவீசும் தொல்கொண்டித் துவன்றிருக்கை”.  இதன் கருத்தானது, கொள்வதும் மிகையாகக் கொள்ளாமல், அதாவது பணமோ, பண்டமோ, அடுத்தவரின் சொத்துதானே என்று பேராசையிலோ, அல்லது வஞ்சகத்திலோ, ஏமாற்றியோ ஏற்றுக்கொள்ளாது, அதேபோல் தான் கொடுக்கும் பண்டமோ, பணமோ குறைவில்லாமல் கொடுப்பதுவே” நல்ல நடுவாண்மை மிக்க வாணிகருக்கு அழகு என்கிறது.

2000 ஆண்டுகளுக்கு முன்பே திருவள்ளுவர் கூறிவிட்டு சென்றுள்ளார். ஆனால் துரதிஷ்டவசமாக இன்றும் உற்பத்தியாளருக்கும் வாடிக்கையாளருக்கும் நடுவில் இருக்கும் இந்த சங்கிலித்தொடரில் நடுவில் இருப்போர் அடிக்கும் பகல் கொள்ளை மிக மிக அதிகம். உதாரணமாக ஒரு கிலோ அரிசி விவசாயி விற்கும் விலை 20 (ரூபாய்) என்றால் அது விற்கப்படும் விலை 70 (ரூபாய்) இருக்கும். 

மேலும்: அஷோக் உரை

ஒப்புமை
”கொள்வதூஉம் மிகைகொளாது கொடுப்புதூஉம் குறைகொடாது
பல்பண்டம் பகர்ந்து வீசும்
தொல்கொண்டித் துவன்றிருக்கை” (பட்டினப் 210-12)

பரிமேலழகர் உரை
பிறவும் தமபோல் பேணிச் செயின் -பிறர் பொருளையும் தம்பொருள் போலப் பேணிச் செய்யின்; வாணிகம் செய்வார்க்கு வாணிகம் - வாணிகஞ்செய்வார்க்கு நன்றாய் வாணிகம் ஆம். (பிறவும் தமபோல் செய்தலாவது, கொள்வது மிகையும் கொடுப்பது குறையும் ஆகாமல் ஒப்ப நாடிச் செய்தல். இப்பாட்டு மூன்றனுள், முன்னைய இரண்டும் அவையத்தாரை நோக்கின்; எனையது வாணிகரை நோக்கிற்று, அவ்விருதிறத்தார்க்கும் இவ்வறம் வேறாகச் சிறந்தமையின்.).

மணக்குடவர் உரை
வாணிகஞ் செய்வார்க்கு வாணிகமாம், பிறர் பொருளையுந் தமது பொருள்போலப் பேணிச் சோர்வுபடாமற் செய்வாராயின். வாணிகம் - இலாபம்.

மு.வரதராசனார் உரை
பிறர் பொருளையும் தம் பொருள் போல் போற்றிச் செய்தால், அதுவே வாணிகம் செய்வோர்க்கு உரி‌ய நல்ல வாணிக முறையாகும்.

சாலமன் பாப்பையா உரை
பிறர் பொருளையும் தம் பொருள் போலக் காத்து, வியாபாரம் செய்தால் வியாபாரிகளுக்கு நல்ல வியாபார முறை ஆகும்.

குறளும் பொருளும் - பா.ராகவன் உரை
அடுத்தவர் நலனில் அக்கறை செலுத்து.

No comments:

Post a Comment