துறைவன் துறந்தமை தூற்றாகொல் முன்கை

குறள் 1157
துறைவன் துறந்தமை தூற்றாகொல் முன்கை
இறைஇறவா நின்ற வளை
[காமத்துப்பால், கற்பியல், பிரிவாற்றாமை]

பொருள்
துறைவன் - நெய்தல்நிலத்தலைவன்

துறந்தமை - துறத்தல் - கைவிடுதல்; பற்றற்றுத்துறவுபூணுதல்; நீங்குதல்.

தூற்றுதல் - சிதறுதல்; தூசுபோகத்தானியங்களைத்தூவுதல்; புழுதிமுதலியவற்றைஇறைத்தல்; பரப்புதல்; அறிவித்தல்; பழிகூறுதல்; வீண்செலவுசெய்தல்.

கொல் - இரும்பு; உலோகம்; கொலைத்தொழில்; வருத்தம்; கொல்லன்; கொல்லன்தொழில்; கதவில்தைக்கும்இரும்பு; குறுக்குத்தாழ்; ஐயப்பொருள்தரும்ஓர்இடைச்சொல்; ஓர்அசைநிலை.

தூற்றாகொல் - ஊரரியச் உரத்துச் சொல்லாதோ?

முன்கை - muṉ-kai   n. id. +. [K. mun-gai.] 1. Forearm; முன்னங்கை. முன்கை யிறையிறவா நின்ற வளை (குறள், 1157). 2. Hand; கைத்தலம். முன்கை நீண்டால் முழங்கை நீளும்.

இறை - உயரம்; தலை கடவுள் தலைவன் அரசன் உயர்ந்தோன்; மூத்தோன் பெருமையிற்சிறந்தோன்; கணவன் பறவையிறகு; கடன் வீட்டிறப்பு மறுமொழி மணிக்கட்டு குடியிறை சிறுமை அற்பம் காலவிரைவு; சிவன் பிரமன் மாமரம்; 

இறை - (வி)இறைத்துவிடு; தூவு எறி, வீசு தங்கு

இறவு - சாவு; முடிவு நீக்கம் மிகுதி இறால்மீன்; தேன்கூடு வீட்டிறப்பு எல்லை

வளை - சுற்றிடம்; சங்கு; கைவளை; சக்கரப்படை; துளை; எலிமுதலியவற்றின்பொந்து; நீண்டமரத்துண்டு; தூதுவளைஎன்னும்கொடிவகை; சிறியஉத்திரம்.

இறவா நின்ற வளை – தங்காது கழலுமோ என்ற அச்சுறுத்துகிற வளையணிகள்?

முழுப்பொருள்
நெய்தல் நிலத்தில் இருக்கும் தலைவி நினைக்கிறாள் "நெய்தல் நிலத்தில் பிறந்த என் அன்பிற்குரிய தலைவன் என்னை விட்டு பிரிந்து போக போகிறான் என்பதை அவர் என் தோள்களை தழுவும் பொழுதோ அல்லது என்னுடன் கூடும் பொழுதோ நான் தான் உணர்ந்து இருக்க வேண்டும். ஆனால் நான்  தான் காதல் மயக்கத்தில் அதை உணரவில்லை. ஆனால் என் முன்னங்கை மணிக்கட்டில் நீங்காது கழலும்/இருக்கும் வளையல்கள் வரப்போகும் பிரிவை உணர்ந்து என்னிடம் கூறி இருக்க வேண்டாமா?. அது சரி வளையல்கள் எப்படி பேசும்? அவை கழன்று விழுந்தோ அல்லதுயோ ஒன்றுடன் ஒன்று உரசி உடைந்தோ உணர்த்தியிருக்கலாம் அல்லவா?" 

மேலும் அஷோக் உரை

ஒப்புமை
”நோகோ யானே நெகிழ்ந்தன வளையே” (நற் 26:1)

“கோடீ ரிலங்குவளை ஞெகிழ” (குறுந் 11:1)

“இறையிறந், திலங்குவளை நெகிழச் சாஅய்” (குறுந் 50:3-4)

“இறைவளை நெகிழ்த்த எவ்வ நோய்”(குறுந் 289:2)

“துறைநணி ஊரனை உள்ளிஎன்
இறையே ரெல்வளை நெகிழ்போ டும்மே” (ஐங்குறு 20:4-5)

“அறைபறை யானை அலங்குதார்க் கிள்ளி
முறைசெயும் என்பரால் தோழி - இறையிறந்த
அங்கோல் அணிவளையே சொல்லாதோ மற்றவன்
செங்கோன்மை நெந்நின்ற வாறு” (முத்தொள்ளாயிரம்)

பரிமேலழகர் உரை
(இதுவும் அது.) துறைவன் துறந்தமை - துறைவன் என்னைப் பிரியலுற்றமையை; முன் கை இறை இறவாநின்ற வளை தூற்றாகொல் - அவன் உணர்த்தாமல் தாமே உணர்ந்து என் முன் கையில் இறையினின்றும் கழலாநின்ற வளைகள் எனக்கு அறிவியாவோ? அவன் உணர்த்த உணர்ந்து வந்து நீ அறிவித்தல் வேண்டுமோ? (முன்னே நிகழ்ந்தமையின் 'துறந்தமை' என்றும், கேட்ட துணையான் மெலிந்து ஆற்றாமையின், 'இறவாநின்ற' என்றும் கூறினாள். 'அழுங்குவித்து வந்து கூறற்பாலை யல்¬யாய நீயும், இவ்வளைகள் செய்தனவே செய்தாய்' எனப் புலந்து கூறியவாறு.)

மணக்குடவர் உரை
இறைவன் பிரிகின்றமையை எமக்கு அறிவியாவோ? முன் கையின் இறையைக் கடவாநின்ற வளைகள். முன்பே அறிதலான், உடம்பு மெலிந்தது என்றவா றாயிற்று.

மு.வ உரை
என் மெலிவால் முன் கையில் இறை கடந்து கழலும் வளையல்கள், தலைவன் விட்டுப் பிரிந்த செய்தியைப் பலரறியத் தெரிவித்துத் தூற்றாமலிருக்குமோ.

சாலமன் பாப்பையா உரை
அவர் என்னைப் பிரிய திட்டமிடுகிறார் என்பதை என் முன் கையிலிருந்து கழலும் வளையல்கள் எனக்குத் தெரிவிக்க மாட்டாவோ?.

No comments:

Post a Comment