தீயள வன்றித் தெரியான் பெரிதுண்ணின்

குறள் 947
தீயள வன்றித் தெரியான் பெரிதுண்ணின்
நோயள வின்றிப் படும்
[பொருட்பால், நட்பியல், மருந்து]

பொருள்
தீ - ஒர்உயிர்மெய்யெழுத்து(த்+ஈ); பஞ்சபூதத்துள்ஒன்றாகியநெருப்பு; வேள்வித்தீ; கோபம்; அறிவு; தீமை; நஞ்சு; நரகம்; விளக்கு; உணவைச்செரிக்கச்செய்யும்வயிற்றுத்தீ; வழிவகை.

பசி - உணவுவேட்கை; வறுமை; தீ

அளவு - பரிமாணம்; தருக்கஅளவை; தாளத்தில்மூன்றுமாத்திரைக்காலம்; மாத்திரை நிலஅளவு; சமயம் தன்மை ஞானம் மட்டும் தொடங்கி

அன்றித் - அல்லாமல்

தெரிதல் - தெரிதல் - தோன்றுதல்; விளக்கமாதல்; அறிதல்; ஆராய்தல்; தெரிந்தெடுத்தல்; அரித்தெடுத்தல்; காணும்ஆற்றலைப்பெற்றிருத்தல்; மனமறிதல்; கேட்டல்.

தெரியான் - அறியாமல் 

பெரிது - பெரிது, மிகவும்;  peritu   id. n. [K. piridu.] Thatwhich is great, big or large; பெரியது. நன்மைகடலிற் பெரிது (குறள், 103).--adv. Greatly; மிகவும். கலங்குவள் பெரிதென (கலித். 27).

உண்ணின் - உண்ணுதல் - உணவுஉட்கொள்ளுதல்; பொருந்துதல் நுகருதல்; அனுபவித்தல் இசைவாதல்.

நோய் - துன்பம்; வருத்தம்; பிணி; குற்றம்; அச்சம்; நோவு.

அளவு - பரிமாணம்; தருக்கஅளவை; தாளத்தில்மூன்றுமாத்திரைக்காலம்; மாத்திரை நிலஅளவு; சமயம் தன்மை ஞானம் மட்டும் தொடங்கி

இன்றிப் - இல்லாமல்

படும்படுதல் - உண்டாதல்; தோன்றுதல்; உதித்தல்; நிகழ்தல்; மனத்தில்தோற்றுதல்; பூத்தல்; ஒன்றன்மீதுஒன்றுஉறுதல்; மொய்த்தல்; அகப்படுதல்; புகுதல்; பெய்தல்; பெரிதாதல்; மேன்மையடைதல்; அழிதல்; சாதல்; மறைதல்; புண்காய்தல்; சாய்தல்; வாடுதல்; துன்பமடைதல்; தொங்குதல்; ஒலித்தல்; பாய்தல்; புதைக்கப்படுதல்; உடன்படுதல்; ஒத்தல்; பொறுத்தல்; முட்டுதல்.

முழுப்பொருள்
ஒருவர் வயிற்றின் பசிக்கும் உடல் உழைப்பிற்கும் ஏற்றவாறே உணவு உண்ண வேண்டும். ஆனால் பசியின் அளவிற்கு அல்லாமல் உணவையும் உணவு உண்ணும் காலத்தையும் ஆராயாமல் தன் உடல்நிலை உடலுழைப்பு பற்றிய தெளிவு இல்லாமல் அளவுக்கு அதிமாக உணவை உட்கொண்டால் அவருக்கு நோயும் அளவுக்கு அதிகமாக உண்டாகும். நோயின் தாக்கமும் அளவுக்கு அதிகமாக இருக்கும். 

முதுமொழிக் காஞ்சி (8:7), “உண்டி வெய்யோர்க்கு உறுபிணி எளிது” என்பதும், ஆத்திச் சூடி, “மீதூண் விரும்பேல்” என்பதும் இக்குறளின் கருத்தையொட்டி, உணவை மிகுந்த அளவில் உண்ணக்கூடாது என்பதை வலியுறுத்துத்தவேதான்.

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
தெரியான் தீ அளவு அன்றிப் பெரிது உண்ணின் - தன் பகுதியும் அதற்கு ஏற்ற உணவும் காலமும் ஆராயாது, வேண்டியதோர் உணவை வேண்டியதோர் காலத்து, வயிற்றுத் தீ அளவன்றி ஒருவன் உண்ணுமாயின்; நோய் அளவு இன்றிப் படும் - அவன் மாட்டு நோய்கள் எல்லையற வளரும். (தெரியாமை வினைக்குச் செயப்படு பொருள்கள் அதிகாரத்தான் வந்தன. நோய் - சாதியொருமை. இவை இரண்டு பாட்டானும் அவ்வகை உண்ணாவழிப்படும் இழுக்குக் கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
பசியின் அளவின்றி ஆராயாதே மிகவுண்பானாயின் மிகநோய் உண்டாம். இது, நோய் தீர்ந்தாலும் பசியளவு அறியாதே உண்பானாயின் மீண்டும் நோயா மாதலான் அளவறிந்து உண்ணல் வேண்டுமென்றது.

மு.வரதராசனார் உரை
பசித்தீயின் அளவின் படி அல்லாமல், அதை ஆராயாமல் மிகுதியாக உண்டால் , அதனால் நோய்கள் அளவில்லாமல் ஏற்ப்பட்டு விடும்.

சாலமன் பாப்பையா உரை
தன் வயிற்றுப் பசி அளவு தெரியாமல் மிக அதிகமாக உண்டால் அவன் உடம்பில் நோய்கள் அளவு இல்லாமல் வளரும்.


நோயின்றி வாழமுடியாதா? - மூ.இராமகிருட்டிணன். தமிழ்நாட்டின் முதல் இயற்கை வாழ்வியல் விஞ்ஞானி. உலக நல்வாழ்வு ஆசிரமம், சிவசைலம்
”ஒவ்வொரு மனிதனுகும் தேவையானது தூய காற்று, தூய நீர், தூய எண்ணம், தூய அறிவு” என்றார். “உப்பை உபயோகிக்காதீர்கள், ‘மருந்து சாப்பிடுவது இல்லை’ என்ற சூளுரை எடுத்துக் கொள்ளுங்கள். ஊறுகாயை வெட்கமில்லாமல்  தின்னாதீர்கள். சுடுசோற்றைக் காட்டிலும் பழைய சோறே நல்லது. நெல்லை முளைகட்டி வறுத்து, இடித்து, அவலாக்கி உண்டால் நன்மை; தீமை விளைவிக்காது. பொரி, நெல் பொரி சாப்பிடலா என்றார்கள். மேலும் புலாலை விடுங்கள். அது புண்நச்சு; புத்தியைக் கெடுத்து விடும். கொடியவனாக்கி விடும்” என்றார்.

எண்ணெயில் பொரித்த வடை, போண்டா, காரசேவு, பக்கோடா முதலியவைகளைச் சாப்பிடாதீர்கள், பாலை அதிகமாகப் பருகாதீர்கள்” என்றார். “காபி, டீ குடிக்காதீர்கள். எண்ணெயில் பொரித்த அப்பளத்தைத் தவிர்த்து விடுங்கள்” என்றார். “ஆரஞ்சு, திராட்சை, இளநீர், வெந்நீரில் வந்த வாழைக்காய் அவியல், சுட்ட அப்பளம் முதலியன சாப்பிடலாம்” என்றார்.

”உணவே மருந்து. மருந்தே உணவு” என்றார். வாழைக்காயைப் பொரியலாகச் செய்து சாப்பிட வேண்டாம் என்றார். “மிளகாயைத் தண்ணீரில் ஊறப்போட்டு, அந்தத் தண்ணீரைக் காயில் தெளித்துக் காரத்திற்காக உபயோகியுங்கள்’ என்றார். காய்ச்சிய தண்ணீர் கூடாது என்றார். நெருப்பில் கையை வைத்தால் சுடுவதுபோல் இயற்கை நெறியை தவிர்ப்பவர் துன்பத்தை அனுபவிப்பர் என்றார். தரையில் மணல் பரப்பி அதன் மேல் நீர் நிரப்பிய மட்பாண்டத்தை வைத்து, அதனுள் துணியில் முடிந்து வைத்துள்ள வில்வ இலையைப் போட்டு ஊற வைத்து அந்த நீரை வடிகட்டிக் குடிநீராக அருந்தலாம் என்றார். ‘தேங்காயை உடைத்த பின் அப்போதே சாப்பிடுங்கள். காலையில் உடைத்ததை மாலையில் சாப்பிடாதீர்கள். புதுமையாக உண்ணுங்கள். நாள் பட்ட பழத்தைச் சாப்பிட வேண்டாம்” என்றார். அளவோடு தண்ணீர் வைத்து வடிகட்டாமல் பொங்கலாக சமைத்து சாப்பிடுங்கள் என்றார். தண்ணீர் அல்லது எலுமிச்சம் பழச்சாறு கலந்த நீரை அருந்துங்கள் என்றார்

காலை 10 அல்லது 11 மணிக்கு தேங்காயும், மதியம் கதிரவன் ஒளியில் இருந்த பின்மாலை கால் அல்லது அரைமூடி தேங்காய், பழம் சாப்பிட வேண்டும் என்றார். ஒருமுறை உண்டபின் குறைந்தது 8 அல்லது 10 மணி பொறுத்து அடுத்த வேளை உணவைச் சாப்பிட வேண்டும் என்றார். தேங்காய், வாழைப்பழம் எப்பொழுதும் ஆண்டு முழுவதும் கிடைக்கும். எனவே சிவசைலம் ஆசிரமத்துக்கும் வரும் விருந்தினர்களுக்கும் தேங்காய், வாழைப்பழ உணவு தான் பரிமாறுகிறோம் என்றார். 

நாட்டுவாழை, கற்பூரவாழை முதலியவற்றை 2 மாதக் குழந்தைக்கும், இறக்கும் தறுவாயில் இருப்பவருக்கும் கொடுக்கலாம் என்றார்.

'பருப்பு வகைகளே உடம்புக்குக் கெடுதி செய்யும். பருப்பு சீக்கிரம் அழுகக் கூடியது. சக்தி அளிக்க வல்லது அல்ல பருப்பு’ என்றார். பல்வலிக்கு 2 நாட்கள் உண்ணாவிரதம் இருந்தால் பறந்து போகும் என்றார். உப்பு, உறைப்பு தவிர்த்தால் கை, கால் வலி போகும் என்றார்.

'வறுமை வரும்போது உள்ளம் கெடுவதில்லை நச்சுத் தன்மை தான் கெடுக்கின்றது. வளமான வாழ்வினை வாழ்கின்றவர்கள் தான் சூழ்ச்சியால் வஞ்சனையால் ஏமாற்றுகின்றனர். இயற்கை வாழ்வில் வறுமையில்லை. ஒரு வாழைப்பழம், ஒரு துண்டு தேங்காய போதும், குறைத்து உண்பது வாழை வளப்படுத்தும். இதைத்தான் திருமூலர் “உண்டி சுருங்கில் உபாயம் பலஉள” என்கிறார்.

’மனிதன் தேவைக்கு அதிகமாக உண்கிறான். ஆசைப் பேய் பிடித்து அலைகிறான். ஒருவருக்கொருவர் ஏமாற்ற நினைக்கின்றனர். தூய நீர், தூய காற்று ஒருவனை நல்லவனாக்குகிறது. நல்ல சூழலில் சான்றோர்களுடன் வாழ்பவர் நல்லவர். காரம், உப்பு, இறைச்சி, மீன், முட்டை, சமைத்த அல்லது எண்ணெயில் பொரித்த உணவுகள் ஆகா. மனிதன் எதை உண்கிறானோ அதுவாகவே ஆகிவிடுகிறான். எனவே அடிப்படை மாற்றம் தேவை. உள்ளத்தை, உணர்வைக் கெடுக்கின்ற உணவைத் தவிர்த்தல் வேண்டும். மதுப்பானம், காபி, தேநீர் விடுவிக்கப்படல் வேண்டும்.” என்றார்.


No comments:

Post a Comment