முற்றியும் முற்றா தெறிந்தும் அறைப்படுத்தும்

குறள் 747
முற்றியும் முற்றா தெறிந்தும் அறைப்படுத்தும்
பற்றற் கரியது அரண்
[பொருட்பால், அரணியல், அரண்]

பொருள்
முற்றியும் - முற்றுதல் - முதிர்தல்; முழுவளர்ச்சிபெறுதல்; முதுமையாதல்; பெருகுதல்; வைரங்கொள்ளுதல்; தங்குதல்; நிறைவேறுதல்; முடிதல்; இறத்தல்; போலுதல்; செய்துமுடித்தல்; அழித்தல்; சூழ்தல்; வளைத்தல்; அடைதல்; மேற்கொள்ளுதல்; தேர்தல்.

முற்றாது - முதிராத, பெருகாது, அழியாது, முடியாது

எறிந்தும் - எறிதல்  - உதைத்தல்; வீசுதல்; வெட்டுதல்; முறித்தல்; அறுத்தல்; பறித்தல்; அழித்தல்; ஓட்டுதல்; குத்தல்; அடித்தல்.

எறித்தல் - ஒளிவீசுதல்; வெயிற்காலம்; தைத்தல்; உறைத்தல்; பரத்தல்.

அறைப்  - அடி; மோதுகை; வெட்டுகை; ஓசை சொல் விடை அலை உள்வீடு வீடு பெட்டியின்உட்பகுதி; வகுத்தஇடம்; பிள்ளைபெறும்அறை; சதுரங்கம்முதலியவற்றின்கட்டம்; மலைக்குகை சுரங்கம் பாத்தி வஞ்சனை பாறை அம்மி சல்லி துண்டம் பாசறை அறுகை

படுத்தும் - படுதல் - உண்டாதல்; தோன்றுதல்; உதித்தல்; நிகழ்தல்; மனத்தில்தோற்றுதல்; பூத்தல்; ஒன்றன்மீதுஒன்றுஉறுதல்; மொய்த்தல்; அகப்படுதல்; புகுதல்; பெய்தல்; பெரிதாதல்; மேன்மையடைதல்; அழிதல்; சாதல்; மறைதல்; புண்காய்தல்; சாய்தல்; வாடுதல்; துன்பமடைதல்; தொங்குதல்; ஒலித்தல்; பாய்தல்; புதைக்கப்படுதல்; உடன்படுதல்; ஒத்தல்; பொறுத்தல்; முட்டுதல்.

பற்றற்கு - பற்றுதல் - பிடித்தல்; பயனறுதல்; ஊன்றிப்பிடித்தல்; ஏற்றுக்கொள்ளுதல்; மனத்துக்கொள்ளுதல்; தொடுதல்; உணர்தல்; தொடர்தல்; நிறம்பிடித்தல்; தீமுதலியனமூளுதல்; தகுதியாதல்; ஒட்டுதல்; பொருந்துதல்; போதியதாதல்; உறைத்தல்; உண்டாதல்; பொறுத்தல்.

அரியது - அருமை; பசுமை; அரியதன்மை; பெருமை கடினம் எளிதிற்கிட்டாமை; சிறுமை இன்மை; அரிது 

அரண் - பாதுகாப்பு, காவல் கோட்டை சுற்றுமதில் காவற்காடு கவசம் வேலாயுதம் செருப்பு அழகு அச்சம்

முழுப்பொருள் 
பகைவர்கள் எல்லைகளில் முற்றுகையிட்டும் (சூழ்ந்தும்), போர் புரிந்தும், போர் கருவிகளால் உடைத்தெரிய முயன்றும், வஞ்சனை என்னும் சூழ்ச்சியை கொண்டும் (அதாவது உள்ளிருப்போரைக் கொண்டே வஞ்சத்தாலும் வீழ்த்த பகைவர்கள் முயல்வர்) ஒரு நாட்டை கைப்பற்ற முடியவில்லையென்றால் அத்தகைய கடுமையான அரணே/பாதுகாப்பே அரணாகும்.

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை:
முற்றியும் - புகலொடு போக்கு ஒழியும் வகை நெருங்கிச் சூழ்ந்தும்; முற்றாது எறிந்தும் - அங்ஙனம் சூழாது நெகிழ்ந்த இடன் நோக்கி ஒருமுகமாகப் பொருதும்; அறைப்படுத்தும் - அகத்தோரை அவர் தெளிந்தோரை விட்டுக் கீழறுத்துத் திறப்பித்தும்; பற்றற்கு அரியது அரண் - புறத்தோரால் கொள்ளுதற்கு அரியதே அரணாவது. (இம் மூன்று உபாயத்துள்ளும் முதலாவது எல்லாப் பொருளும்உடைமையானும், ஏனைய நலலாளுடைமையானும் வாயாவாயின.).

மணக்குடவர் உரை
சூழவிட்டும், சூழவிடாதே ஒருபக்கமாகப் போர் செய்தும், அரணிலுள்ளாரைக் கீழறுத்தும் இம்மூன்றினாலும் கொள்ளுதற்கு அரியது அரணாவது.

மு.வரதராசனார் உரை
முற்றுகையிட்டும் முற்றுகையிடாமல் போர் செய்தும், வஞ்சனை செய்தும் எப்படியும் பகைவரால் கைப்பற்ற முடியாத அருமை உடையது அரண் ஆகும்.

சாலமன் பாப்பையா உரை:
முழுவதுமாகச் சூழ்ந்து கொண்டாலும் சூழாமல் வலு இழந்த இடத்தில் நெருங்கிப் போரிட்டாலும் உள்ளிருப்போரில் சிலரை ஐந்தாம் படை ஆக்கினாலும், பகைவரால் கைப்பற்றுவதற்கு அரியதே அரண்.

No comments:

Post a Comment