காதன்மை கந்தா அறிவறியார்த் தேறுதல்

குறள் 507
காதன்மை கந்தா அறிவறியார்த் தேறுதல்
பேதைமை எல்லாந் தரும்
[பொருட்பால், அரசியல், தெரிந்துதெளிதல்]

பொருள்
காதன்மை - - காதல், 1.Affection, attachment; அன்பு. காதன்மை கந்தா (குறள்.507); 2.Desire; ஆசை, 3.lust, passion, விரகம்
காதல் - அன்பு; காமவிச்சை; பத்தி; வேட்கை; ஆவல்; மகன்; சிற்றிலக்கியவகையுள்ஒன்று; கொல்லுதல்; தறித்தல்; ஆந்தைக்குரல்.

கந்தா - கந்து - தூண்; யானைகட்டும்தறி; ஆதீண்டுகுற்றி; தெய்வம்உறையும்தூண்; பற்றுக்கோடு; யாக்கையின்மூட்டு; சந்து; கழுத்தடி; வண்டியுளிரும்பு; வண்டிஇருசு; வண்டி; மாடுபிணைக்குந்தும்பு; வைக்கோல்வரம்பு; பொலிப்புறத்தடையும்பதர்.

அறிவு -  ஞானம்; புத்தி; பொறியுணர்வு; அறியவேண்டியவை; கல்வி; ஆன்மா, ஆடூஉக்குணம், உணர்வு, கல்வி மற்றும் அனுபவத்தால் கிடைக்கும் செயல் திறன் (அல்லது) தகவலறிவு., புரிந்து கொள்ளுதல்.

அறிந்து - உணர்தல்; நினைத்தல் மதித்தல் பயிலுதல் அனுபவித்தல் உறுதிசெய்தல்; புதிதாய்க்கண்டுபிடித்தல்.
அறியார்த் -  அறிய மாட்டார்கள்

தேறுதல் - தெளிதல்; நீர்தெளிதல்; துணிதல்; ஆறுதல்; பலித்தல்; மனத்திண்மையுறுதல்; முதிர்தல்; செழித்தல்; தேர்ச்சியடைதல்; தங்கல்; கூடுதல்; சோறுமுதலியனவிறைத்தல்; நம்புதல்; மயக்கம்தெளிதல்.

பேதைமை - உய்த்துணராமை; மடமை, அவிவேகம், பேதமை, அறிவின்மை

எல்லாம் - ellām   n. [T. K. ella, M. ellām.]1. Whole; முழுதும் (திருக்கோ. 351. உரை ) 2.All, personal as well as impersonal. அவர்கள்எல்லாம் போனார்கள்; அவை எல்லாம் போயின.

தரும் - -  ellām   n. [T. K. ella, M. ellām.]1. Whole; முழுதும் (திருக்கோ. 351. உரை ) 2.All, personal as well as impersonal. அவர்கள்எல்லாம் போனார்கள்; அவை எல்லாம் போயின.  

முழுப்பொருள்
ஒரு செயலில் ஒருவரை சேர்த்துக்கொள்வதற்கு அவர் மீது கொண்ட அன்போ அல்லது நட்போ காரணமாக அமைய கூடாது. அதனை மீறி அன்பின் காரணமாக தகுதியும் அனுபமும் அல்லாத ஒருவரை அச்செயலில் ஈடுபடுத்தினால் அது பேதைமை. அந்த முட்டாள்தனத்திற்கான விளைவுகள் கேடாக அமையும். அதனை அனுபவிக்க நேரிடும். அடிப்படையில் உணர்ச்சி பூர்வமாக முடிவுகளை எடுக்க கூடாது என்பதை திருவள்ளுவர் கூறுவதையும் காண்க. இதனை MBA (வணிக நிர்வாக மேலாண்மை) பாடங்களில் emotional decisions கூடாது என்பர். 

ஆனால் நாம் அன்பின் காரணாமாக பல தொழில்களில் தந்தை தன்னுடைய மகனை தொழிலில் ஈடுபடுத்துகிறார். சிலர் மாமன், மச்சான், நண்பன் என்று பலரை தொழிலில் சேர்த்துக்கொள்கிறார்கள். மேலோட்டமாக பார்த்தால் தவறில்லை. பிறருக்கு உதவுவது போல் தான் அது.  ஆனால் தன் மகன், மாமன், மச்சான், நண்பனின் தகுதி என்ன என்று பார்க்க வேண்டும். தகுதிக்கும் திறத்திற்கும் ஏற்றார்ப்போல் அவர்களை கடைநிலைகளில் (ஆரம்ப நிலை. உதாரணமாக குமாஸ்தா/clerk, விற்பனையாளர்/salesman) அல்லது இடை நிலைகளில் (மேற்பார்வையாளர் / supervisor, காசாளர் / cashier, நிர்வாகளார்/manager) அல்லது உயர் நிலைகளில் (உப பொது நிர்வாக ஆளர் /assistant  general  manager) அமர்த்த வேண்டும்.  அவர்கள் வாடிக்கையாளரை வணிகத்தை தொழிலை அங்காடியை அவற்றின் இயங்கு முறைகளை கற்றுக்கொள்கிறார்களா என்று பார்க்க வேண்டும். அவர்கள் அதில் தேர்ந்து இருந்தால் மட்டுமே அவர்களிடம் முக்கியமான பொறுப்புகளை கொடுக்க வேண்டும். இல்லையேல் ஒட்டுமொத்த நிர்வாகமே விளைவுகளை சந்திக்க கூடும். ஒருவர் மீது கொண்ட அன்பினால் அந்நிர்வாகத்தை நம்பிய பலரின் எதிர்காலம் கெடுதலை அனுபவிக்கும். 

பரம்பரை பரம்பரையாக(தலைமுறை தலைமுறையாக) தொழில் செய்யும் செட்டியார்கள், மார்வாடிகள் தங்கள் பிள்ளைகளை உறவினர்களை ஆரம்ப நிலை வேலைகளில் இருந்தே வளர்த்து எடுப்பதை காணலாம். ஏனெனில் அவர்கள் தொழிலை தொழிலாக பார்த்தார்கள். குடும்பத்தை குடும்பமாக பார்த்தார்கள். தன் கண்ணிற்கு உறவு/அன்பு தொழிலை மறைப்பதை அனுமதிக்க கூடாது என்று உணர்ந்து இருந்தனர். 

அதேப்போல் உறவுகளை பணியில் தகுதி இல்லாமல் சேர்த்துக்கொள்ள கூடாது என்பதற்கு மட்டும் பொருந்தாது. உறவுகள் நமது நன்மைக்காக சொல்கிறார்கள் என்று அவர்கள் சொல்லும் (அரைவேக்காடு) ஆலோசனைகளை அப்படியே எடுத்துக்கொள்ள கூடாது. ஏனெனில் பல சமயம் நமது உறவுகள் செய்தித்தாள், பத்திரிகை, செவி என்று பல்வேறு வழியாக ஒன்றை கற்று இருப்பர். எதுவும் (ஆதலால் அதுவும்) எல்லைக்கு உட்பட்டது. ஆதலால் (கேள்வியால் கற்றவை) பிழையாக உணர்ந்திருக்க வாய்ப்பு உண்டு (என்பதை கேள்வி அதிகாரத்தில் பார்த்தோம்). ஆதலால் "எப்பொருள் யார்யார்வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு" என்பதற்கு ஏற்ப ஆராய்ந்து தெளிவு பெற்ற பின்பே செயல்பட வேண்டும். 

பல இடங்களில் உறவுகள் நண்பர்கள் பலர் கூட்டாக சேர்த்து துவங்கிய பல கூட்டுப் பங்காண்மைகள் (joint  venture) தோல்வி அடைவதற்கு முக்கிய காரணம் தகுதியை ஆராயாமல் அவர்கள் அன்பினால் கொண்ட பிணைப்பு அவர்கள் தொழிலில் வெற்றிபெற உதவும் அல்லது தோல்வியை சந்தித்தாலும் அது அவர்களின் உறவை பாதிக்காது என்னும் மாய நம்பிக்கையாகும். அதனால் தான் வணிகத்தை எல்லா கோணங்களிலும் செவ்வென செயல்புரிய திறன் இல்லாமல் தோற்றுப்போகின்றனர். 

பழமொழி நானூற்றுப் பாடலொன்று இவ்வாறு கூறுகிறது.

சுற்றத்தார் நட்டார் எனச்சென் றொருவரை
அற்றத்தால் தேறார் அறிவுடையார் – கொற்றப்புள்
ஊர்ந்துலகம் தாவின அண்ணலே யாயினும்
சீர்ந்தது செய்யாதா ரில். (பழமொழி 67)

வெற்றிதரும் கருடன்மேல் ஏறி வரும் திருமால் முதலியோர்களும் சீரில்லாதனவற்றைச் செய்யார். ஆகவே, சுற்றத்தார், நண்பர் என்று அவர் செய்யும் செயல்கள் நல்லன என்று ஆராயாமல் கொள்ளார் அறிவுடையார்.

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
காதன்மை கந்தா அறிவு அறியார்த் தேறுதல் - அன்பு உடைமை பற்றுக்கோடாகத் தமக்கு அறியவேண்டுவன அறியாதாரைத் தெளிதல், பேதைமை எல்லாம் தரும் - அரசனுக்கு எல்லா அறியாமையும் கொடுக்கும்
(தன்னோடு அவரிடை நின்ற அன்புபற்றி அரசன் அறிவிலார் மேல் வினையை வைப்பின், அஃது அவர் அறிவின்மையாற் கெடும், கெட்டால் அவர்க்கு உளதேயன்றி வினைக்கு உரியாரை அறியாமை, மேல் விளைவு அறியாமை முதலாக அவனுக்கு அறியாமை பலவும் உளவாம் என்பதாம்.).

மணக்குடவர் உரை
அன்புடைமையே பற்றாக, அறிவுடையாரல்லாதாரைத் தேறுதல் எல்லா அறியாமையும் தரும். அரசர் அன்புடையாரைத் தேறலாமென்பது பராசரர் மதம். இஃது இவ்வளவினால் தேறலாகாதென்றது.

மு.வரதராசனார் உரை
அறியவேண்டியவற்றை அறியாதிருப்பவரை அன்புடைமை காரணமாக நம்பித்தெளிதல், (தெளிந்தவர்க்கு) எல்லா அறியாமையும் கெடும்.

சாலமன் பாப்பையா உரை
அறியவேண்டியவற்றை அறியாதவர்களை அவர்கள் மீதுள்ள அன்பு காரணமாகப் பதவியில் அமர்த்துவது அறியாமை பலவற்றையும் தரும்.

No comments:

Post a Comment