அற்கா இயல்பிற்றுச் செல்வம் அதுபெற்றால்

குறள் 333
அற்கா இயல்பிற்றுச் செல்வம் அதுபெற்றால்
அற்குப ஆங்கே செயல்
[அறத்துப்பால், துறவறவியல், நிலையாமை]

பொருள்
அற்கா - அற்காமை - நிலையாமை

இயல்பு - தன்மை; இலக்கணம் ஒழுக்கம் நற்குணம் நேர்மை முறை வரலாறு பிரமாணம்பத்தனுள்ஒன்று.

இற்று - இத்தன்மைத்து; ஒருசாரியை.

செல்வம் -   கல்வி; அழகு; செழிப்பு; நுகர்ச்சி; துறக்கம்; ஐசுவரியம்; மகளிரின்கொஞ்சற்பேச்சு.

அது - அஃது; அஃறிணைஒருமைச்சுட்டுப்பெயர்; ஆறாம்வேற்றுமைஒறுமையுருபு.

பெற்றால் - பெறுதல் - அடைதல்; பிள்ளைபெறுதல்; பிறப்பித்தல்; அறிதல்; விலைத்தகுதியுடையதாதல்.

அற்குப - அற்கு-தல் - aṟku-   5 v. intr. அல்கு Tobe permanent, to remain, endure; நிலைபெறுதல் அற்கா வியல்பிற்றுச் செல்வம் (குறள், 333).  

ஆங்கே - அங்கே

செயல் -  தொழில்; பொருள்தேடுகை; இழைப்புவேலை; வேலைப்பாடு; காவல்; ஒழுக்கம்; வலிமை; செல்வாக்கு; செய்யல்நிலைமை; சேறு.

முழுப்பொருள்
செல்வம் நிலையில்லா தன்மை வாய்ந்தது. ஆதலால் பெற கடினமான அச்செல்வம் கிடைத்தால் நிலைத்த அறங்களை (அற செயல்களை) காலம் தாழ்த்தாமல் செல்வம் பெற்ற உடனே (அது செல்லும் முன்) செய்துவிடு. ஏனெனில் அறம் செய்தால் தருமம் / புண்ணியம் பெருகும், வீடுபேறுக்கு அருகில் மெல்ல மெல்ல கூட்டிக்கொண்டு செல்லும். ஆதலால் வீடுபேறினை விரைவில் அடைய வழிவகுக்கும்.

"காற்று உள்ளே தூற்றிக்கொள்" என்பது நினைவுக்கு வருகிறது. ஆனால் அறச்செயல்களுக்கு செய்.

கம்பநாடர் செல்வத்தின் நிலையாமையை, 
“கச்சையங் கடகரிக் கழுத்தின் கண்ணுறப் 
பிச்சமும், கவிகையும் பெய்யும் இன்னிழல் 
நிச்சயம் அன்று” என்று மந்திரப் படலத்தில் (26)  தயரதன் வாய்மொழியாகக் கூறுவார். நாலடியாரில் வரும் கீழ்கண்ட பாடல்கள் முற்றுக் கருத்தையும் சொல்லுவதைப் பார்க்கலாம். எளிமையானக் கருத்தை படித்த அளவிலேயே புரிந்துகொள்ளும்படியான பாடல்கள் இவை

”துகடீர் பெருஞ்செல்வம் தோன்றியக்கால் தொட்டுப்
பகடு நடந்தகூழ் பல்லாரோ டுண்க
அகடுற யார்மாட்டும் நில்லாது செல்வம்
சகடக்கால் போல வரும்” (நாலடி 2)

”யானை எருத்தம் பொலியக் குடைநிழற்கீழ்ச்
சேனைத் தலைவராய்ச் சென்றோரும் – ஏனை
வினைஉலப்ப வேறாகி வீழ்வர்தாம் கொண்ட
மனையாளை மாற்றார் கொள” (நாலடி 3)
நின்றன நின்றன நில்லா எனவுணர்ந்து
ஒன்றின ஒன்றின வல்லே செயின்செய்க
சென்றன சென்றன வாழ்நாள் செறுத்துடன்
வந்தது வந்தது கூற்று.

”கிழவர் இன்னேர் என்னாது பொருள்தான்
பழவினை மருங்கின் பெயர்புபெயர் புறையும்” (கலி 21:10)

“நில்லாது செல்வம் நிலவார் உடம்படைந்தார்
செல்லா தொருங்கென்று சிந்தித்து - நல்லார்
அருளுளம் புரிகுவ ராயின்
இருளறு சிவகதி எய்தலோ எளிதே” (யா.வி.55.மேற்)

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
அற்கா இயல்பிற்றுச் செல்வம் - நில்லாத இயல்பினையுடைத்துச் செல்வம், அது பெற்றால் அற்குப ஆங்கே செயல் - அதனைப் பெற்றால் அதனால் செய்யப்படும் அறங்களை அப்பெற்ற பொழுதே செய்க. ('அல்கா' என்பது திரிந்து நின்றது. ஊழுள்ளவழியல்லது துறந்தாரால் பெறப்படாமையின், அது பெற்றால் என்றும் அஃது இல்வழி நில்லாமையின் 'ஆங்கே' என்றும் கூறினார். அதனால் செய்யப்படும் அறங்களாவன: பயன் நோக்காது செய்யப்படும் கடவுட் பூசையும், தானமும் முதலாயின. அவை ஞான ஏதுவாய் வீடு பயத்தலின் அவற்றை 'அல்குப' என்றும் 'செயல்' என்றும் கூறினார். இவை இரண்டு பாட்டானும் செல்வம் நிலையாமை கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
நில்லாத வியல்பை யுடைத்துச் செல்வம்; அதனைப் பெற்றால் அப்பொழுதே நிற்பனவாகிய அறங்களைச் செய்க. நிலையாமை மூன்று வகைப்படும்: செல்வ நிலையாமை, இளமை நிலையாமை, யாக்கை நிலையாமை என.

மு.வரதராசனார் உரை
செல்வம் நிலைக்காத இயல்பை உடையது, அத்தகைய செல்வத்தைப்பெற்றால், பெற்ற அப்போதே நிலையான அறங்களைச் செய்ய வேண்டும்.

சாலமன் பாப்பையா உரை
நிலையாத இயல்பினை உடையது செல்வம்; அது கிடைத்தால் நிலையான அறங்களைச் செய்க.

No comments:

Post a Comment