நல்குரவு என்னும் இடும்பையுள் பல்குரைத்

குறள் 1045
நல்குரவு என்னும் இடும்பையுள் பல்குரைத்
துன்பங்கள் சென்று படும்
[பொருட்பால், குடியியல், நல்குரவு]

பொருள்
நல்குரவு - வறுமை

என்னும் - யாவும், எல்லாம்; என்றுசொல்லப்படும்; யாதும்; சிறிதும்

இடும்பையுள் - துன்பம்; தீமை; நோய்; வறுமை; அச்சம்.

பல் - எயிறு; ஒன்றுக்குமேற்பட்டவை; யானை, பன்றிமுதலியவற்றின்கொம்பு; நங்கூரநாக்கு; சக்கரம்; வாள்முதலியவற்றின்பல்போன்றகூர்; சீப்புப்பல்; வெள்ளைப்பூண்டுமுதலியவற்றின்தனித்தனிஉள்ளீடு; தேங்காய்உள்ளீட்டின்சிறுதுண்டு.

குரைத் - ஒலி; பெருமை; பரப்பு; அசைநிலை; இசைநிறை; குதிரை

துன்பங்கள் - மனவருத்தம்; மெய்வருத்தம்; நோய்; கெடுதி; வறுமை.

சென்று - செல்லும்  ; செல்லுதல் - நிகழ்தல்; வீழ்தல்; ஆதல்; பரவுதல்; பயனுறுதல்; நிலைத்திருத்தல்; செலாவணியாதல்; வேண்டியதாதல்; பொருந்துதல்; விரும்பிஏற்றுக்கொள்ளப்படுதல்; அடைதற்குரியதாதல்; கழிதல்; தணிதல்; கெடுதல்; இறத்தல்; கிட்டுதல்; அடைதல்; போதல்.

படும் - படுதல் - உண்டாதல்; தோன்றுதல்; உதித்தல்; நிகழ்தல்; மனத்தில்தோற்றுதல்; பூத்தல்; ஒன்றன்மீதுஒன்றுஉறுதல்; மொய்த்தல்; அகப்படுதல்; புகுதல்; பெய்தல்; பெரிதாதல்; மேன்மையடைதல்; அழிதல்; சாதல்; மறைதல்; புண்காய்தல்; சாய்தல்; வாடுதல்; துன்பமடைதல்; தொங்குதல்; ஒலித்தல்; பாய்தல்; புதைக்கப்படுதல்; உடன்படுதல்; ஒத்தல்; பொறுத்தல்; முட்டுதல்.

முழுப்பொருள்
வறுமை எத்தகையது தெரியுமா? வறுமை என்பது துன்ப நிலை மட்டும் அன்று. வறுமை என்பது பல வேறு வகையான துன்பங்கள் அனைத்தும் வந்து சேர்ந்து மேலும் துன்பத்தை தரக்கூடியது. பல வேறு வகையான துன்பங்கள் என்றால் மனவருத்தம், உடல் வருத்தம், நோய், இகழ்ச்சி, சோர்வு என்று இன்னும் பல வேறு கேடுகள் உள்ளடங்கும். குற்றங்கள் செய்ய தூண்டுவது. குற்றம் புரிந்தால் அதற்கு தண்டனையும் உண்டு. அதுவும் துன்பமே.

ஆதலால் வறுமை வரமால் பாதுகாத்துக்கொள்ள வேண்டும். வறுமை நிலை அடைந்தால் அதில் இருந்து விரைவில் வெளியே வர ஆவனவற்றை செய்யவேண்டும்.  வறுமையில் இருப்போர் வெளியே வர தன் கையினை கொடுத்து உதவ வேண்டும்.

வறுமை ஒரு கொடிய வியாதி. அது, உடம்பையும், மனதையும், ஆத்மாவையும் நலிந்து போகச் செய்துவிடுகிறது” என்று வைக்கம் முகம்மது பஷீர் கூறுகிறார்.

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
நல்குரவு என்னும் இடும்பையுள் - நல்குரவு என்று சொல்லப்படும் துன்பம் ஒன்றனுள்ளே; பல் துன்பங்கள் சென்றுபடும் - பல துன்பங்களும் வந்து விளையும். (குரை - இசை நிறை. செலவு - விரைவின்கண் வந்தது. துன்பமுந் தானும் உடனே நிகழ்தலின் நல்குரவைத் துன்பமாக்கியும் அத்துன்பமடியாகச் செல்வர் கடை நோக்கிச் சேறல் துன்பமும், அவரைக் காண்டல் துன்பமும், கண்டால் மறுத்துழி நிகழும் துன்பமும், மறாவழியும் அவர் கொடுத்தது வாங்கல் துன்பமும், அது கொடுவந்து நுகர்வன கூட்டல் துன்பமும் முதலாயின நாள்தொறும் வேறுவேறாக வருதலின், எல்லாத் துன்பங்களும் உளவாம் என்றும் கூறினார். இவை ஐந்து பாட்டானும் நல்குரவின் கொடுமை கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
வறுமை யெனப்படும் இடும்பையுள் பலவாகிய வன்மையுடைய துன்பங்கள் வந்து சோர்வுபடும். இது துன்பங்கள் சென்றுளவாமென்றது. பல்குரைத் துன்பம்- இரப்பார்க்கு உரைக்கத் துன்பம்.

மு.வரதராசனார் உரை
வறுமை என்று சொல்லப்படும் துன்ப நிலையினுள் பலவகையாக வேறுபட்டுள்ள எல்லாத் துன்பங்களும் சென்று விளைந்திடும்.

சாலமன் பாப்பையா உரை
இல்லாமை என்னும் துன்பத்திற்குள் எல்லா வகைத் துன்பங்களும் அடங்கும்.

No comments:

Post a Comment