ஒருமை மகளிரே போலப் பெருமையும்

குறள் 974
ஒருமை மகளிரே போலப் பெருமையும்
தன்னைத்தான் கொண்டொழுகின் உண்டு
[பொருட்பால், குடியியல், பெருமை]

பொருள் 
ஒருமை - ஒரேதன்மை; ஒற்றுமை; தனிமை; ஒப்பற்றதன்மை; மனமொருமிக்கை; ஒருமையெண்; மெய்ம்மை; ஒருபிறப்பு; இறையுணர்வு; வீடுபேறு.

மகளிரே - மகளிர் - பெண்டிர்

போல - ஓர்உவமவுருபு

பெருமையும்பெருமை - மாட்சிமை; மிகுதி; பருமை; புகழ்; வல்லமை; அகந்தை; அருமை.

தன்னைத் - தலைவன்; தமையன்; தமக்கை; தாய்.

தான் - படர்க்கைஒருமைப்பெயர்; தேற்றச்சொல்; அசைச்சொல்; முழுப்புடைவை; குழம்பில்போடப்படும்காய்கறித்துண்டம்; 'அதுவின்றிஇஃதுஒன்று'என்றுபொருள்படுவதோர்இடைச்சொல்.

கொண்டு - முதல்; குறித்து; மூன்றாம்வேற்றுமைச்சொல்லுருபு; ஓர்அசைநிலை.

ஒழுகின்ஒழுகுதல் - நீர்பாய்தல்; நீர்ப்பொருள்சொட்டுதல்; ஓடுதல்; பரத்தல்; ஒழுங்குபடுதல்; நடத்தல்; நீளுதல்; வளர்தல்; போதல்; பெருகியோடுதல்.

உண்டு - உள்ள தன்மையை உணர்த்தும் ஐம்பால் மூவிடத்திற்கும் உரிய ஒரு குறிப்பு வினைமுற்றுச்சொல்; ஓர் உவம உருபு; அற்பத்தைக் குறிக்கும் சொல்; ஊன்றுகோல்

முழுப்பொருள் 
தன் கணவரை மட்டும் நினைத்து உடலாலும் உள்ளதாலும் கணவரிடம் மட்டும் உறவு வைத்துக்கொள்ளும் பெண்களுக்கு கற்பு என்னும் சிறப்பு உண்டு. அவ்வொழுக்கத்தில் இருந்த தவறினால் அவர்களுடைய சிறப்பும் விலகிவிடும். அதுபோல் ஒவ்வொருவரும் தன்னை அறநெறிகளில் இருந்து வழுவாது நடந்துக்கொள்ள வேண்டும். அவ்வாறு ஒருவர் வாழ்வை ஒழுகினால் அவருக்கு பெருமை என்னும் மாட்சிமை உண்டு. ஒருதடவை தவறினாலும் அந்த மாட்சிமை விலகிவிடும். மறுபடியும் சேராது.

சீதையின் தூய்மையை அனுமன் கண்டு வியப்பதை கம்பர் காட்சிப்படலத்தில் மிகவும் அழகாகக் கூறுகிறார், படிக்கும் வகையிலேயே பொருள் விளங்கும் சிறப்போடு! அப்பாடல்.

தருமமே காத்ததோ? சனகன் நல் வினைக்
கருமமே காத்ததோ? கற்பின் காவலோ?
அருமையே! அருமையே! யார் இது ஆற்றுவார்?
ஒருமையே, எம்மனோர்க்கு, உரைக்கற்பாலதோ? (கம்ப.காட்சி.75)

நாலடியார் பாடலொன்றும், தம்மை ஒழுக்க நிலையில் நிறுத்தித் தற்காத்துக்கொள்வோரைப் பற்றி இவ்வாறு கூறுகிறது.

நன்னிலைக்கண் தன்னை நிறுப்பானும், தன்னை
நிலைகலக்கிக் கீழிடு வானும் நிலையினும்
மேன்மே லுயர்த்து நிறுப்பானும், தன்னைத்
தலையாகச் செய்வானும் தான். (நாலடி 248)


சிறந்த நிலையில் தன்னை நிலை நிறுத்திக் கொள்வோனும், முன் நிலையையுங் குலையச் செய்து தன்னைக் கீழ்நிலைக்கண் தாழ்த்திக் கொள்வோனும், தான் முன் நிறுத்திக்கொண்ட சி றந்த நிலையினும் மேன்மேல் உயர்ந்த நிலையில் தன்னை மேம்படுத்தி நிலை செய்து தன்னை அனைவரினும் தலைமையுடையோனாகச் செய்து கொள்வோனும், தானேயாவன்.

மேலும் அஷோக் உரை 

பரிமேலழகர் உரை
ஒருமை மகளிரே போல - கவராத மனத்தினையுடைய மகளிர் நிறையின் வழுவாமல் தம்மைத்தாம் காத்துக்கொண்டொழுகுமாறு போல; பெருமையும் தன்னைத்தான் கொண்டு ஒழுகின் உண்டு - பெருமைக்குணனும் ஒருவன் நிறையின் வழுவாமல் தன்னைத்தான் காத்துக்கொண்டு ஒழுகுவானாயின் அவன்கண் உண்டாம். (பொருளின் தொழில், உவமையினும் வந்தது. கற்புண்டாதல் தோன்ற நின்றமையின், உம்மை எச்ச உம்மை. ஒழுகுதல் - மனம் மொழி மெய்களை ஒடுக்கி, ஒப்புரவு முதலிய செய்து போதல். இதனால், அஃது உளதாமாறு கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
கவராத மனத்தினையுடைய மகளிர் நிறையின் வழுவாமல் தம்மைத் தாம் காத்துக்கொண்டொழுகுமாறு போலப் பெருமைக் குணனும் ஒருவன் நிறையின் வழுவாமல் தன்னைத்தான் காத்துக் கொண்டொழுகுவானாயின் அவன்கண் உண்டாம்.

மு.வரதராசனார் உரை
ஒரு தன்மையான கற்புடைய மகளிரைப்போல் பெருமைப் பண்பும் ஒருவன் தன்னைத் தான் காத்துக் கொண்டு நடந்தால் உளதாகும்.

சாலமன் பாப்பையா உரை
தன் கணவனை அன்றிப் பிறரிடம் மனத்தாலும் உறவு கொள்ளாத பெண்களின் சிறப்பைப் போல,சிறந்து நெறிகளிலிருந்து தவறி விடாமல் தன்னைக் காத்துக்கொண்டு வாழ்பவனுக்கே பெருமை உண்டு.

No comments:

Post a Comment