இனைத்துணைத் தென்பதொன் றில்லை விருந்தின்

குறள் 87
இனைத்துணைத் தென்பதொன் றில்லை விருந்தின்
துணைத்துணை வேள்விப் பயன்
[அறத்துப்பால், இல்லறவியல், விருந்தோம்பல்]

பொருள்
இனைத் - iṉai   adj. of this degree (in respect of size or quantity) இன்ன; இத்தனை வருத்தம்

துணைத்து - துணை - அளவு; இணை, ஒப்பு; ஆதரவு, உதவி; உதவுவோன்; காப்பு; கூட்டு; இரண்டு; இரட்டை; கணவன்; மனைவி; உடன்பிறப்பு; புணர்ச்சி; வரை; ஆயுதமுனை; அம்பு; நட்பினன்(ள்).

என்பது - என்று அறியப்படுவதெல்லாம்

ஒன்று - ஒன்றுஎன்னும்எண்; மதிப்பிற்குரியபொருள்; வீடுபேறு; ஒற்றுமை; வாய்மை; அறம்; அஃறிணையொருமை.

இல்லை - உண்டுஎன்பதன்எதிர்மறை; இன்மைப்பொருளைஉணர்த்திஐம்பால்மூவிடத்திலும்வரும்ஒருகுறிப்புவினைமுற்று; சாதலைஉணர்த்திஐம்பால்மூவிடத்திலும்வரும்ஒருகுறிப்புவினைமுற்று.

விருந்தின் - விருந்து - புதியராய்வருபவரைஉணவளித்துப்போற்றுதல்; காண்க:விருந்தினன்; புதுமை; நூலுக்குரியஎண்வகைவனப்புகளுள்ஒன்று.

துணைத் - அளவு; இணை, ஒப்பு; ஆதரவு, உதவி; உதவுவோன்; காப்பு; கூட்டு; இரண்டு; இரட்டை; கணவன்; மனைவி; உடன்பிறப்பு; புணர்ச்சி; வரை; ஆயுதமுனை; அம்பு; நட்பினன்(ள்).

துணை - அளவு; இணை, ஒப்பு; ஆதரவு, உதவி; உதவுவோன்; காப்பு; கூட்டு; இரண்டு; இரட்டை; கணவன்; மனைவி; உடன்பிறப்பு; புணர்ச்சி; வரை; ஆயுதமுனை; அம்பு; நட்பினன்(ள்).

வேள்விப் - யாகம்; ஓமகுண்டம்; பூசனை; கலியாணம்; ஈகை; புண்ணியம்; காண்க:களவேள்வி; மகநாள்.

பயன் - பலன்; வினைப்பயன்; சொற்பொருள்; செல்வம்; பழம்; அகலம்; சாறு; பால்; வாவி; அமுதம்; நீர்.

முழுப்பொருள்
ஒரு இல்வாழ்வான் ஐந்து வேள்விகளை செய்யவேண்டும் என்று அறநூல்கள் கூறுகின்றன. 1. ப்ரம்ம/ப்ரஹ்ம வேள்வி (பரம்பொருளை  (மூலக்கடவுள்) தேடிச் செய்யப்படுகிற வேள்வி) 2. தேவ வேள்வி (தேவர்களுக்காகச் செய்யப்படுகிற வேள்வி) (அக்னி வளர்த்து நவதானியம் வளர்த்து செய்ய படுவது. அக்நி மாசற்றது. ஆதலால் தான் அக்நி மூலம் தேவர்களுக்கு உணவு அளிக்கிறோம்) 3. பிதுர் வேள்வி (மூதாதையர்கள் செய்யப்படும் வேள்வி) 4. (பஞ்ச) பூத வேள்வி (காக்கை உணவளித்தால் கூட பஞ்ச பூதங்களுக்கு உணவளித்து திருப்தி பண்ணுவது போல் ஆகும் 5. மானுடர் வேள்வி (அதாவது விருந்து. மானுடர்களுக்கா செய்வது).


அதனால் தான் விருந்தை வேள்வி என்று கூறுகிறார் திருவள்ளுவர். மனிதனை பேணுபவன் மானுடத்தை பேணுகிறான். சமூகத்தை பேணுகிறான்.

மனிதன் எதை கொடுத்தாலும் போதும் என்று சொல்ல மாட்டான். பணம், புகழ், வீடு, வாசல் என்று எந்த ஒரு பொருட்ச்செல்வம் கொடுத்தாலும் அவன் மனம் அவ்வளவு எளிதாக நிறைவடையாத. ஆனால் மனிதன் நிறைவடையும் ஓர் இடம் உணவு. போதும் என்று வயிறும் மனமும் உணவிற்கு மட்டுமே சொல்லும். அதுவே உணவின் சிறப்பு என்றும் கூறலாம். ஆதலால் ஒருவரை மன நிறைவு அடைய செய்து பார்க்க கூடிய ஆற்றல் விருந்திற்கு உண்டு. 

விருந்தினர்களுக்கு விருந்து அளித்து ஓம்புவது அறம். ஆனால் அவ்விருந்தின் பயன் இவ்வளவு தான் என்று வரையறை செய்யமுடியாத அளவிற்கு அதற்கு பயன் உண்டு. விருந்தும் ஒருவித வேள்வியே. வேள்வி எப்படி அதற்கான அவிஸ் மற்றும் நெய்யினை கொடுக்கும் தோறும் உண்டுகொண்டே இருக்கோமோ அதுபோல் விருந்தில் மக்கள் உண்டுகொண்டே இருப்பார்கள். உணவு வேண்டி நிற்கும் மக்களுக்கு உலகில் பஞ்சமில்லை. ஆதலால் விருந்தின் பயன் வேள்வியின் பயன் போன்றது. விருந்தில் உதவுவோன் பசியாக இருப்போர்க்கு உணவளித்து பசியாற்றி உதவுகிறானா என்பதை பொருத்தே விருந்தின் பயன் அமையும். விருந்தின் தகுதி அதாவது தேவையானவர்களுக்கு உணவளிக்கிறோமா என்பதை பொருத்தது ஆகும்.

விருந்தின் பயன் விருந்துக்கு வந்தோரின் தகுதியை பொருத்தே என்பது பொருந்தாது என்பது எண்ணம். 

ஆனால் மற்ற உரைகள் விருந்து பயன் விருந்தை பெறுபவனின் சால்பை பொருத்தது ஆகும் என்று கூறுகின்றன. அவ்வாறு எடுத்துக்கொண்டால் எப்படி என்று பார்ப்போம்.  இது எப்படி என்றால் உதவி செய்யும் பொழுது நாம் கொடுக்கும் ஐந்து ரூபாய் (அல்லது ஐந்து டாலர் / வோன்)  அல்ல புண்ணியம். நாம் யாருக்கு கொடுக்கிறோம் அவரின் தகுதிக்கு ஏற்றவாறே புண்ணியம். அது விருந்துக்கும் பொருந்தும் என்கிறார் திருவள்ளுவர். விருந்தை பெறுவோரின் தகுதியை பொருத்தே விருந்தின் பயனும் அமையும்.

கிருஷ்ணன் ஒரு அரக்கியிடம் இருந்து தாய்ப்பால் உண்டப்பிறகு அவ்வரக்கிக்கு புகழ் கிட்டியது அல்லவா?

ஆதி சங்கரரின் வாழ்விலிருந்து ஒரு நிகழ்ச்சி. அவர் ஒரு வயதான வறிய மூதாட்டிக்கு, அவள் வறியவளாக இருந்தாலும், வாயிலில் “ பிட்சை”க்காக நின்ற அந்தணச் சிறுவனுக்கு தன்னிடமிருந்த ஒரே நெல்லிக்கனியை ஈந்த கனிவுக்காக பொன்மாரி பொழிவித்ததும், அதன்காரணமாக கனகதாரை என்கிற கவியமுதம் பொழிந்ததும் நிகழ்ச்சி என்பதைவிட நெகிழ்ச்சி என்பதே சரி.

இது வாயிலில் உணவென்று வந்தவருக்கு, வறுமையிலும் தன்னிடமிருந்த ஒன்றைத் தந்த மூதாட்டியின் வரலாறு. 

இராமாயணத்தில் வரும் சபரியின் விருந்தோம்பும் பண்பு அவளுக்கு வீட்டுப்பேற்றினை அளித்தது.

சிறுதொண்டர் சிவனடியாருக்குப் பிள்ளைக்கறி சமைத்த நிகழ்ச்சி. அவ்வில்லத்தினரின் விருந்தோம்பும் பண்பு அவர்களுக்கு இறைவனின் பதத்தினைத் தந்தது

கம்பராமாயணப்பாடல் மிக எளிதாக வாமன அவதாரத்தில் மகாபலிச் சக்ரவர்த்தியின் கொடைக்குச் சமமாக வாமனன் உயர்ந்து, வளர்ந்து நின்றதை குறிக்கும் விதமாக இவ்வாறு எழுதுகிறான்.

“கயம் தரு நறும் புனல் கையில் தீண்டலும்.
பயந்தவர்களும் இகழ் குறளன். பார்த்து எதிர்
வியந்தவர் வெருக் கொள. விசும்பின் ஓங்கினான்
உயர்ந்தவர்க்கு உதவிய உதவி ஒப்பவே

மேலும்: அஷோக் உரை

சமிபத்தில் எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களின் “அன்னம்” சிறுகதை வாசித்தேன். அதில் ஒரு பகுதி கீழே. இப்பகுதிகளும் விருந்தோம்பலை வேள்விக்கு நிகராக விவரிக்கபட்டுள்ளது

என்னை ஒரு கொட்டகையில் அமர வைத்தனர். கொஞ்ச நேரத்தில் வாழைப்பழமும் இளநீரும் வந்தது.

பதினொரு மணிக்கெல்லாம் அங்கே சாப்பாடு ஆரம்பித்துவிட்டது. பெரிய பந்தல்போட்டு வரிசையாக உட்காரவைத்து ஆட்டுப்பிரியாணியும் ஆட்டுக்கறியும் பரிமாறினார்கள். மக்கள் வரிசையாக உள்ளே போனார்கள்.

நான் அப்போது கவனித்த ஒன்று இருந்தது, அதைப்போன்ற ஒன்றை அதற்குப்பிறகு கூட பார்த்ததில்லை. கறுத்தசாகிப் பந்தல் வாசலில் நின்று ஒவ்வொருவரையாக மூன்றுமுறை கட்டித்தழுவி உள்ளே அனுப்பினார். எல்லாரிடமும் ஒருசில சொல்லாவது பேசினார். சின்னப்பையன்களின் தலையை தட்டினார். பெண்களுக்கு தனி பந்தி. அங்கே அவருடைய பீவி அனைவரையும் வரவேற்றார்.

அங்கே எவருக்கும் தனிப்பந்தி இல்லை. எவருக்கும் எந்த வேறுபாடும் இல்லை. பளபளக்கும் பியூக் காரில் வந்தவர்களும், நடந்து வந்தவர்களும், முஸ்லீம்களும், இந்துக்களும், ஆற்றுக்கரையில் வாழும் புலையர்களும் ஓரிரு மலைக்குறவர்களும் எல்லாரும் ஒரே வரிசையில் சேர்ந்து அமர்ந்து சாப்பிட்டனர். அவர்களுடன் அமர்ந்துதான் கறுத்த சாகிப்பும் சாப்பிட்டார்.

அந்த விருந்தை நான் ஒரு பழைய மரத்தொட்டிமேல் ஏறி நின்று பார்த்துக் கொண்டிருந்தேன். மனிதர்கள் சாப்பிடுவது ஒரு யாகமாக நிகழமுடியும் என்று அப்போதுதான் பார்த்தேன். நான் பல யாகங்களை பார்த்திருக்கிறேன். அங்கே மனிதர்கள் குறுக்கும் நெடுக்குமாக பிரிக்கப்பட்டிருப்பார்கள்.

சாகிபின் பந்தியில் உணவு அள்ளி அள்ளி பரிமாறப்பட்டது. ஒருவர் கூட கேட்கும்படி ஆகவில்லை. வெறிகொண்டவர்கள் போல சாப்பிட்டுக் கொண்டே இருந்தார்கள். பின்பக்கம் ஒரு பெரிய சமையல் கொட்டகை. அங்கே பனம்பாயில் பிரியாணியை அள்ளி அள்ளி கொட்டினார்கள். குன்றுபோல. ஆமாம், ஆளுயர அன்னமலைகள். ஆவிபறந்தது அவற்றில். நாயர்சார், அது கார்த்தவீர்யார்ஜுன மகாப்பிரபுவின் அன்னசபை போல் இருந்தது.

சற்றுநேரத்தில் அங்கே இருந்த ஒரு மங்களூர் பிராமணன் ஒரு சம்புடத்தில் எனக்கு சாப்பாடு கொண்டு வந்தான். சோறு குழம்பு கறிகள். “மன்னிக்கவேண்டும், கண்டிப்பாக நெய்போட்ட பருப்புப் பாயசம் வேண்டும் என்று கறுத்தசாகிப் சொன்னார். ஆகவே கொஞ்சம் தாமதமாகிவிட்டது” என்று அவன் சொன்னான்.

ஒவ்வொருவரும் கறுத்த சாகிப்பிடம் விடைபெற்றுக் கொண்டார்கள். நான் அவரிடம் விடைபெறும்போது “சாப்பிட்டீர்களா?” என்று கேட்டார்.

“ஆமாம், நல்ல சாப்பாடு” என்று சொன்னேன்.

“நீங்கள் பிரியாணிக்குப் பதிலாக பாயசம்தான் சாப்பிடுவீர்கள் என்று சொன்னார்கள்” என்றார்.

நான் புன்னகைத்தேன். அவர் என்னைத் தழுவி விடைஅளித்தார். நான் திரும்பச் செல்லும்போது அந்த இடவழி, அந்த சாலை, அந்த தோப்புகள் எல்லாமே எனக்கு இனிய இடங்களாக ஆகிவிட்டன. இன்றுவரை அப்படித்தான்.

அன்று தொடங்கியது அந்த உறவு. அவர் வீட்டிலும் சுற்றியிருக்கும் இடங்களிலுமாக அன்றைக்கு பதினெட்டு நம்பர்கள் இருந்தன. ஆகவே வாரமொரு முறையாவது போக வேண்டியிருக்கும். எப்போதுமே நான் போனது அவருக்கு ஒரு உதவியைச் செய்யத்தான் என்று அவர் பேசுவார். என்னை நண்பனாக நடத்துவார். அவர் பணம் தருவது அவருக்கே தெரியாது என்று எனக்கே தோன்றும்படி இருக்கும்.

நான் கறுத்த சாகிப்பின் வீட்டில் மிகமிக விரும்பியதே அங்கே நடக்கும் மாபெரும் விருந்துகளைத்தான். எந்த விருந்தானாலும் அது எல்லாருக்குமாகத்தான். எந்தப் பந்தியானாலும் அது மனிதர்கள் அனைவருக்குமாகத்தான். மாதம் இரண்டு விருந்தாவது நடக்காமலிருக்காது. விருந்து என்று தெரிந்தாலே போய்விடுவேன். எங்காவது ஏறி நின்று மக்கள் சாப்பிடுவதை பார்த்துக் கொண்டிருப்பேன்.

மக்கள் எப்படிச் சாப்பிடுகிறார்கள்! யக்ஷகானத்தில் அன்னசம்யோகம் என்று சாப்பாட்டைச் சொல்கிறார்கள். உடலும் சாப்பாடும் அன்னம் என்றுதான் சொல்லப்படுகின்றன. அன்னம் என்றால் பிசிக்ஸில் மேட்டர் என்கிறோமே அது. அன்னம் அன்னத்தை கண்டுகொள்கிறது, அன்னம் அன்னத்துடன் இணைகிறது, அன்னம் அன்னத்தால் நிறைகிறது. பூமி மீது இருக்கும் எல்லா உயிரும் சேர்த்து ஒரே அன்னம்தான்.

காலிப்பானைகளுக்கும் குடங்களுக்கும் ஒரு பதற்றம் இருக்கிறதைப்போல தோன்றுவதில்லையா சார்? அவை வாய் திறந்து அலறுகின்றன. குருவிக்குஞ்சுகள் வாய்திறந்து எம்பிக்குதிப்பதுபோல. தண்ணீரை அள்ளி ஊற்ற ஊற்ற இன்னும் இன்னும் என்கின்றன. அதன்பின் நிறையும் ஓசை. அது ஒரு பெருமூச்சு. ஓம் என்ற ஓசை அது.

நாயர் சார், அங்கே மனிதர்கள் அப்படி சாப்பிடுவார்கள். பரவசமாக சாப்பிடுவார்கள். பட்டினிக்காரர்கள் வெறிகொண்டு அள்ளி அள்ளி சாப்பிடுவார்கள். சின்னப்பிள்ளைகள் ருசித்து ருசித்து தலையாட்டி சாப்பிடும். சில சின்னப்பிள்ளைகள் ருசியான ஒரு துண்டு கிடைத்தால் அதை எடுத்து அவற்றின் அம்மாவுக்கோ அப்பாவுக்கோ ஊட்டும் பாருங்கள் நான் கைகூப்பி அழுதுவிடுவேன். அன்னத்தைக் கொடுக்கும் மனிதனைப்போல அழகானவன் யார் சார்?

ஒரு ஐந்துவயது பெண் ஒருவயது தம்பிக்கு ஊட்டியதை பார்த்தேன். வெளியே வந்ததும் அதன் காலைத்தொட்டு வணங்கி “புவனராணியான அன்னபூரணியே, இந்த உலகத்தில் பசியை அணைத்துக்கொண்டே இரு தாயே” என்று சொல்லி கண்ணீர்விட்டேன்.

கறுத்த சாகிப் ஒருவேளைகூட தனியாகச் சாப்பிடுபவர் அல்ல. அவர் வீட்டில் எல்லாநாளும் சாதாரணமாக நூறுபேர் சாப்பிடுவார்கள். வீட்டு வேலைக்காரர்கள், படகுக்காரர்கள், தென்னை வேலைக்காரர்கள் எல்லாரும் ஒரே பந்தியாக அமர்ந்து சாப்பிடுவார்கள். சாப்பிடும் நேரத்தில் வெளியே போய் குரல் கேட்கும் தொலைவிலுள்ள அனைவரையுமே சாப்பிடக் கூப்பிடுவார்கள். காகம் கரைந்து அழைப்பது போலவே.

அந்தக்குரல் கேட்ட எவரானாலும் எந்தக்கூச்சமும் இல்லாமல் சாப்பிட வந்துவிடுவார்கள். கந்தலாடை அணிந்த பிச்சைக்காரர்களுக்குக் கூட அதே பந்திதான், அதே சாப்பாடுதான்.

அங்கே எல்லாநாளும் பிரியாணிதான். கறுத்தசாகிப் பிரியாணி தவிர வேறு உணவை ஒரு பொருட்டாக நினைத்தவரே அல்ல. பிரியாணிதான் ஆரோக்கியம், சுவை என்று அவர் உண்மையாகவே நினைத்தார். பிரியாணி சாப்பிடாததனால் நான் சீக்கிரமே செத்துவிடுவேனோ என்று மெய்யான கவலையுடன் என்னிடம் கேட்டிருக்கிறார்.

சாப்பிட்டால் அவரைப்போல சாப்பிடவேண்டும். அவர் சாப்பிடுவதை நல்ல சாப்பாட்டுராமன்கள் மூன்றுபேர் சாப்பிடலாம். ஆனால் அள்ளி அள்ளி திணித்துக்கொள்ள மாட்டார். யானை சாப்பிடுவது அப்படித்தான். நிறைய சாப்பிடும், ஆனால் சுவையறிந்து சாப்பிடும். மூங்கிலின் தளிரை முதலில் சாப்பிடும். மூங்கிலையே கடைசியாகச் சாப்பிடும்.

கறுத்தசாகிப் சாப்பிட்டு முடித்து கைகழுவி சமையற்காரரை அழைத்துத் தோளில் கைவிட்டு தழுவி பாராட்டுவார். அவருடைய வீட்டில் வேலைபார்க்கும் சமையற்காரனையே நாள்தோறும் பாராட்டுவார். சாப்பிடும்போதே சங்கீதம் கேட்பதுபோல “பலே! பேஷ்! சபாஷ்!” என்றெல்லாம் சொல்வார். தலையை ஆட்டுவார். கையைத் தூக்கி “சுபானல்லா!” என்று வணங்குவார்.

ஒருமுறை நான் கறுத்த சாகிபிடம் சொன்னேன். “இங்கே இந்தப் பந்தியில் அமர்ந்து சாப்பிட வேண்டும் சாகிப்.”

ஒப்புமை
உறக்குந் துணையதோர் ஆலம்வித் தீண்டி
இறப்ப நிழற்பயந் தாஅங்கு - அறப்பயனும்
தான்சிறி தாயினும் தக்கார்கைப் பட்டக்கால்
வான்சிறிதாப் போர்த்து விடும்” (நாலடி 38)

“அறத்தின் ஈட்டிய ஒண்பொருள் அறவோன்
திறத்துவழிப் படூஉம் செய்கை போல”  (மணி 17:3-4

“பெருந்தவர் கைப்பெய் பிச்சையின் பயனும்
நீரும் நிலமும் காலமும் கருவியும்
சீர்பெற வித்திய வித்தின் விளைவும்
பெருகிய தென்னப் பெருவளம் சுரப்ப” (மணி 28:229-32)

“நான்மறை யாளர்கைத்
தானம் என்னத் தழைத்தது நீத்தமே” (கம்ப.ஆற்றுப் 5)

“வியந்தவர் வெருக்கொள விசும்பின் ஓங்கினான்
உயர்ந்தவர்க் குதவிய உதவி ஒப்பவே” (கம்ப.வேள்விப் 35)


பரிமேலழகர் உரை
வேள்விப்பயன் இனைத்துணைத்து என்பது ஒன்று இல்லை - விருந்தோம்பல் ஆகிய வேள்விப் பயன் இன்ன அளவிற்று என்பதோர் அளவுடைத்தன்று; விருந்தின் துணைத்துணை - அதற்கு அவ்விருந்தின் தகுதியளவே அளவு. (ஐம்பெரு வேள்வியின் ஒன்றாகலின் 'வேள்வி' என்றும், பொருள் அளவு தான் சிறிது ஆயினும் தக்கார்கைப் பட்டக்கால் , வான் சிறிதாப் போர்த்து விடும் (நாலடி.38) ஆகலின், இனைத்துணைத்து என்பது ஒன்று இல்லை என்றும் கூறினார். இதனான் இருமையும் பயத்தற்குக் காரணம் கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
விருந்தினர்க்கு அளித்ததனால் வரும் பயன் இன்ன அளவினையுடைத்தென்று சொல்லலாவது ஒன்றில்லை. அவ்விருந்தினரின் தன்மை யாதோ ரளவிற்று அத்தன்மை யளவிற்று விருந்தோம்பலின் பயன்.

மு.வரதராசனார் உரை
விருந்தோம்புதலாகிய வேள்வியின் பயன் இவ்வளவு என்று அளவு படுத்தி கூறத்தக்கது அன்று, விருந்தினரின் தகுதிக்கு ஏற்ற அளவினதாகும்.

சாலமன் பாப்பையா உரை
விருந்தினரைப் பேணுவதும் ஒரு யாகமே. அதைச் செய்வதால் வரும் நன்மை இவ்வளவு என்று அளவிட முடியாது; வரும் விருந்தினரின் தகுதி அளவுதான் நன்மையின் அளவாகும்.

குறளும் பொருளும் - பா.ராகவன் உரை
விருந்தோம்பல் நற்பலன் சேர்க்கும்.

No comments:

Post a Comment