எச்சம்என்று என்எண்ணும் கொல்லோ ஒருவரால்

குறள் 1004
எச்சம்என்று என்எண்ணும் கொல்லோ ஒருவரால்
நச்சப் படாஅ தவன்
[பொருட்பால், குடியியல், நன்றியில்செல்வம்]

பொருள்
எச்சம் - எஞ்சிநிற்பது, மிச்சம்; கால்வழி, மக்கள்; மகன்; எச்சில்; பறவைமலம்; ஒருமணப்பண்டம்; குறைவு; பிறப்பிலேவரும்குறை:குருடு, ஊமை, செவிடு, கூன், குறள், மா, மருள், உறுப்பில்பிண்டம்என்னும்எட்டுவகைஊனம்; எக்கியம், வேள்விசெல்வம்; முன்னோர்வைப்பு; தொக்கிநிற்பது; உருபுமுற்றுஎச்சங்கள்கொண்டுமுடியும்பெயர்வினைகள்; பெயரெச்சவினையெச்சங்கள்.

என்று -எந்தநாள், எப்போது, என்றைக்கு; என்றுசொல்லி; ஓர்இடைச்சொல்; சூரியன்.

என் - என்ன; வினாவினைக்குறிப்பு; ஐயக்கிளவி; இகழ்ச்சிக்குறிப்பு; 'எது'அல்லது'எதை'எனப்பொருள்படும்இடைச்சொல்; தன்மைஒருமைச்சொல்; யான்என்பதுவேற்றுமைப்பொருளில்அடையும்திரிபு; ஓர்அசைச்சொல்.

எண்ணும்  - எண்ணுதல் - எண்ணல், நினைத்தல்; ஆலோசித்தல்; மதித்தல்; தியானித்தல்; முடிவுசெய்தல்; கணக்கிடுதல்; மதிப்பிடுதல்; துய்த்தல்.

கொல்லோ - கொல் - இரும்பு; உலோகம்; கொலைத்தொழில்; வருத்தம்; கொல்லன்; கொல்லன்தொழில்; கதவில்தைக்கும்இரும்பு; குறுக்குத்தாழ்; ஐயப்பொருள்தரும்ஓர்இடைச்சொல்; ஓர்அசைநிலை.

ஒருவர் - ஓராள்; ஒருவன்;  அல்லதுஒருத்தியைச்சிறப்புப்பற்றிப்பன்மையில்வழங்கும்பெயர், மரியாதைப்பன்மை.

ஒருவரால் - ஒருவர் - ஒருவரினால் 

நச்சு - ஆசை; 'விரும்பப்படும்பொருள்; தொந்தரவு; அலப்பல்; தாமதம்; சிறிய.

நச்சுதல் - விரும்புதல்; அலப்புதல்; தொந்தரவுசெய்தல்.

நச்சப் படாதவன்  - விரும்பப்படாதவன் 

முழுப்பொருள்
தனது என்று நினைத்து எதனையும் (பொருள், கல்வி, உணவு, செல்வம்) பிறர்க்கு வழங்காதவன், பகிராதவனை இவ்வுலக மக்கள் விரும்பமாட்டார்கள். இப்படி பிறரால் விரும்பப்படாதவன் தான் இறந்த பிறகு தனது புகழ் என்று எதுவும் எஞ்சியிருக்காது என்று எண்ணுவான் (வருந்துவான்). ஏனெனில் பிறர்க்கு உதவாதவனுக்கு புகழென ஏதுமில்லை.

மேலும்: அஷோக் உரை


பரிமேலழகர் உரை
ஒருவரான் நச்சப்படாதவன் - ஒரு பொருளும் ஈந்தறியாமையின் ஒருவராலும் நச்சப்படுதல் இல்லாதவன்; எச்சம் என்று என் எண்ணுங்கொல் - தான் இறந்தவழி ஈண்டு ஒழிந்து நிற்பதாக யாதனைக் கருதுமோ? (ஈண்டு ஒழிந்து நிற்கும் புகழ் ஈவான் மேலன்றி நில்லாமையின்,அவனுக்கு அதனோடு யாதும் இயைபு இல்லைஎன்பார், 'என் எண்ணுங்கொல்லோ' என்றார். ஓகாரம் - அசை. இவைமூன்று பாட்டானும் பிறர்க்குப் பயன்படலின்மை கூறப்பட்டது.) .

மணக்குடவர் உரை
ஒருவராலும் நச்சப்படாத செல்வமுடையவன், தனக்குப் பின்பு நிற்பதென்று யாதினை எண்ணுமோ?. இது புகழில்லையா மென்றது.

மு.வரதராசனார் உரை
பிறர்க்கு உதவியாக வாழாதக் காரணத்தால் ஒருவராலும் விரும்பப்படாதவன் , தான் இறந்த பிறகு எஞ்சி நிற்பது என்று எதனை எண்ணுவானே.

சாலமன் பாப்பையா உரை
பிறர்க்கு ஏதும் வழங்காதவன் ஆதலால் எவராலும் விரும்பப்படாத அவன், தன் காலத்திற்குப் பின் தன்னை நினைவுபடுத்தி நிற்கப்போவது என்று எதை எண்ணுவான்?.

No comments:

Post a Comment