குடிமடிந்து குற்றம் பெருகும் மடிமடிந்து

குறள் 604
குடிமடிந்து குற்றம் பெருகும் மடிமடிந்து
மாண்ட உஞற்றி லவர்க்கு
[பொருட்பால், அரசியல், மடியின்மை]

பொருள்
குடி - பருகுகை; மதுபானம்; மதுவுண்டமயக்கம்; புருவம்; குடியானவன்; குடியிருப்போன்; ஆட்சிக்குட்பட்டகுடிகள்; குடும்பம்; குலம்; வீடு; ஊர்; வாழிடம்.

மடிந்து - மடிதல் - மடங்குதல்; நுனிமழுங்குதல்; தலைசாய்தல்; வீழ்தல்; வாடுதல்; சுருளுதல்; முயற்சிஅறுதல்; தூங்குதல்; சுருங்குதல்; ஊக்கங்குறைதல்; அழிதல்; சாதல்; தானியங்கேடுறுதல்; திரண்டுசெல்லுதல்; கொப்புளம்உடைதல்; மறத்தல்.

குற்றம் - பிழை; பழி; துன்பம்; உடற்குறை; தீங்கு; அபராதம்; தீட்டு

பெருகும் - பெருகுதல் - அளவுமிகுதல்; நீர்மிகுந்தெழுதல்; நிறைதல்; வளர்தல்; முதிர்தல்; ஆக்கம்தருதல்; கேடுறுதல்; மங்கலநாண்அற்றுவிழுதல்; விளக்கணைதல்.

மடி - மடங்குகை; வயிற்றுமடிப்பு; வயிறு; அரை; மடித்ததொடையின்மேற்பாகம்; ஆடை; தாள்முதலியவற்றின்மடிப்பு; பைபோன்றமுந்திச்சுருக்கு; வலைவகை; பசுமுதலியவற்றின்முலையிடம்; அடக்கம்; தனிமை; சோம்பல்; சோம்பலுடையவன்; நோய்; மீன்வலையோடுசேர்ந்தபெரும்பை; கேடு; பகை; பொய்; தீநாற்றம்; ஆடைவகை; தீட்டில்லாநிலை; இரட்டைக்கட்டுமரம்; சோறு; தாழை; தாழைவிழுது; மடங்கு.

மடிந்துமடிதல் - மடங்குதல்; நுனிமழுங்குதல்; தலைசாய்தல்; வீழ்தல்; வாடுதல்; சுருளுதல்; முயற்சிஅறுதல்; தூங்குதல்; சுருங்குதல்; ஊக்கங்குறைதல்; அழிதல்; சாதல்; தானியங்கேடுறுதல்; திரண்டுசெல்லுதல்; கொப்புளம்உடைதல்; மறத்தல்.

மாண்ட -  மாண்(ணு)-தல் - மாட்சிமைப்படுதல், மிகுதல், நன்றாதல்,
மாண்-. Beinggreat, being worthy; மாட்சியாகை; மாண்டூகம்(One of the thirty-two Upanishads. See உபநிடதம்.),
மாண்டல் - மாட்சிமைப்படுதல்; இறத்தல்

உஞற்று -  ஊக்கம்; முயற்சி; இழுக்கு; வழக்கு.

இலவர்க்கு - இல்லாதவர்க்கு

முழுப்பொருள்
ஒருவர் எத்தகைய தலைசிறந்தவராய் இருப்பினும் அவ்வளவு மாட்சியை பெற்றிருப்பினும் அவர் சோம்பலில் மூழ்கி தன்னை மழுக்கிக்கொண்டு எந்த ஒரு சிறந்த முயற்சியும் ஊக்கமும் அற்று எந்த ஒரு செயலையும் முயலாதவராயின் அவருடைய குடியான குடும்பம் புகழ் செல்வம் ஆகியவை குன்றி அழிந்து குற்றங்களும் துன்பங்களும் பெருகிவிடும்.

ஆதலால் செயலற்று முயற்சியற்று இருப்பது செல்வம் அழிவதற்கும் குற்றம் பெருகுவதற்கும் வழிவகுக்கும். ஆதலால் சோம்பித் திரியாதே என்கிறார் திருவள்ளுவர்.

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
மடி மடிந்து மாண்ட உஞற்று இலவர்க்கு - மடியின்கண்ணே வீழ்தலான் திருந்திய முயற்சி இலராயினார்க்கு; குடி மடிந்து குற்றம் பெருகும் - குடியும் மடிந்து குற்றமும் பல்கும்.
('மடிந்து' எனத் திரிந்து நின்ற வினையெச்சம் 'இலவர்' என்னுங் குறிப்பு வினைப்பெயர் கொண்டது. குற்றங்கள் முன்னர்க் கூறுப. இவை நான்கு பாட்டானும் மடியின் தீமை கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
குடியுங் கெட்டுக் குற்றமும் மிகும்; சோம்பின்கண்ணே பொருந்தி மாட்சிமைப்பட்ட முயற்சி யில்லாதார்க்கு. இது பிறாரால் இகழப்படுவ ரென்றது.

மு.வரதராசனார் உரை
சோம்பலில் அகப்பட்டு சிறந்த முயற்சி இல்லாதவராய் வாழ்கின்றவர்க்கு குடியின் பெருமை அழிந்து குற்றம் பெருகும்.

சாலமன் பாப்பையா உரை
சோம்பலில் வீழ்வதால் சிறந்தவற்றையேச் செய்யும் முயற்சியே இல்லாதவரின் குடும்பமும் அழியும் குற்றமும் பெருகும்.

No comments:

Post a Comment