பொய்யாமை அன்ன புகழில்லை எய்யாமை

குறள் 296
பொய்யாமை அன்ன புகழில்லை எய்யாமை
எல்லா அறமுந் தரும்
[அறத்துப்பால், துறவறவியல், வாய்மை]

பொருள்
பொய்யாமை - poyyāmai   n. id + id. 1.Being truthful; பொய் சொல்லாமை. பொய்யாமையன்ன புகழில்லை (குறள், 296). 2. Impartiality;நடுநிலைமை. பொய்யாமை நுவலுநின் செங்கோல்(கலித். 99).

அன்ன - அத்தன்மையானவை; ஓர் அஃறிணைப் பன்மைக்குறிப்பு வினைமுற்று; ஓர்உவமஉருபு.

புகழ் - துதி; கீர்த்தி; அருஞ்செயல்; அகத்தி; வாகை

இல்லை - இருக்காது, தங்காது

எய்யாமை - அறியாமை

எல்லா - முழுதும்; விளிப்பெயர்; முன்னிலைப்பெயர்.

அறமும் - அறம்  - தருமம்; புண்ணியம் அறச்சாலை தருமதேவதை யமன் தகுதியானது; சமயம் ஞானம் நோன்பு இதம் இன்பம் தீப்பயன்உண்டாக்கும்சொல்.

தரும் - கொடுக்கும்

முழுப்பொருள்
பொய் சொல்லாமல் ஒருவன் தன் வாழ்வில் வாழ்வானென்றால் அவனுக்கு அதுப்போல புகழ்/பெருமை தருவது வேறில்லை. அந்த வாய்மையை அவன் வாழ்நாள் எல்லாம் கடைப்பிடிப்பான் என்றால் அவனை அறியாமலே அறம் அவனுக்கு தருகின்ற எல்லா பயனும் (தருமம் தலைகாக்கும்) வந்து சேரும்.

சமுதாயத்தை உயர்வு நோக்கி நகர்த்துகின்ற கருவிகள் இந்த அறங்கள். அதனால் தான் திருவள்ளுவர் இவற்றையெல்லாம் பல தடவை கூறுகிறார்.

மேலும்: அஷோக் உரை

ஒப்புமை
”வாய்மையின் வழா அது மன்னுயிர் ஓம்புநர்க்
கியாவதும் உண்டோ எய்தா அரும்பொருள்” (சிலப் 11:158-9)

“பொய்கடிந் தறத்தின் வாழ்வார்” (பெரிய.திருநீல.2)

பரிமேலழகர் உரை
பொய்யாமை அன்ன புகழ் இல்லை - ஒருவனுக்கு இம்மைக்குப் பொய்யாமையை ஒத்த புகழ்க் காரணம் இல்லை. எய்யாமை எல்லா அறமும் தரும் - மறுமைக்கு மெய் வருந்தாமல் அவனுக்கு எல்லா அறங்களையும தானே கொடுக்கும். ('புகழ்' ஈண்டு ஆகுபெயர். இல்லத்திற்குப் பொருள் கூட்டல் முதலியவற்றானும், துறவறத்திற்கு உண்ணாமை முதலியவற்றானும் வருந்தல் வேணடுமன்றே? அவ்வருத்தங்கள் புகுதாமல் அவ்விருவகைப் பயனையும் தானே தரும் என்பார், 'எய்யாமை எல்லா அறமும் தரும்' என்றார்.).

மணக்குடவர் உரை
பொய்யாமையை யுடையன் என்பதனோடு ஒத்த புகழ் வேறொன்றில்லை; பொய்யாமையானது அவனறியாமல் தானே எல்லா அறங்களையுங் கொடுக்குமாதலான்.

மு.வரதராசனார் உரை
ஒருவனுக்கு பொய் இல்லாமல் வாழ்தலை விடப் புகழ் நிலை வேறொன்றும் இல்லை, அஃது அவன் அறியாமலேயெ அவனுக்கு எல்லா அறமும் கொடுக்கும்.

சாலமன் பாப்பையா உரை
பொய் சொல்லாமல் இருப்பது போலப் புகழ் தருவது இல்லை. அது அவன் அறியாமலேயே அவனுக்கு எல்லாப் புண்ணியங்களையும் தரும்.

No comments:

Post a Comment