ஒன்னார்த் தெறலும் உவந்தாரை ஆக்கலும்

குறள் 264
ஒன்னார்த் தெறலும் உவந்தாரை ஆக்கலும்
எண்ணின் தவத்தான் வரும்
[அறத்துப்பால், துறவறவியல், தவம்]

பொருள்
ஒன்னார்த் - பகைவர்

தெறலும் - தெறல்  - அழித்தல்; கோபித்தல்; வருத்துதல்; வெம்மை

உவத்தல் - மகிழ்தல்; விரும்புதல்; பிரியமாதல்; அன்புசெய்தல்

உவந்தாரை - உவந்தார் -  மகிழ்ந்தவர், விரும்புவர்

ஆக்கலும் - ஆக்கல் - ஆக்குதல் - செய்தல்; படைத்தல் சமைத்தல் அமைத்துக்கொள்ளுதல்; மாற்றுதல் உயர்த்துதல்

எண்ணின் - எண்ணுதல் - எண்ணல், நினைத்தல்; ஆலோசித்தல்; மதித்தல்; தியானித்தல்; முடிவுசெய்தல்; கணக்கிடுதல்; மதிப்பிடுதல்; துய்த்தல்.

தவம் - பற்றுநீங்கியவழிபாடு; புண்ணியம்; இல்லறம்; கற்பு; தோத்திரம்; தவத்தைப்பற்றிக்கூறும்கலம்பகஉறுப்பு; வெப்பம்; காட்டுத்தீ.

தவத்தான் - தவத்தினால்

வரும் - வரும்

முழுப்பொருள்
அறத்திற்கானப் பகைவர்களை குறைத்து அறத்தை விரும்புகின்ற நண்பர்களை உறவினர்களை பெருக்க/ஆக்க வேண்டுமானால் அது தவத்தினால் முடியும். 

முற்றும் துறந்தார்க்கு பகைவர் நண்பர் என்று யாரும் இல்லை. அதனால் தான் அவர் நடுவுநிலைமையில் இருக்கின்றனர். அதனால் தான் இக்குறள் தவத்தின் மேல் கூறப்பட்டது. துறந்தார்மேல் கூறப்படவில்லை.

தவவலிமையால் தவறு செய்தவர்களுக்கு முனிவர்கள் சாபமிட்ட வரலாறுகள் புராணங்களில் ஏராளம். வருந்தி மன்னிப்பு வேண்டியவர்களுக்கு அவர்களை மன்னிக்கவும் செய்து, உயர்ந்த நிலைக்கு கொண்டு சென்ற தவவலிமையையாளர் வரலாறுகளும் ஏராளம். தன் தவவலிமையினாலே திரிசங்குவுக்கென்று தனியாக சொர்க்கத்தையே விசுவாமித்திரர் ஏற்படுத்திய புராணக்கதை எல்லோருக்கும் தெரியும்.

திரிசங்கு கதை
ஒரு பெரிய சக்ரவர்த்தி வஷிஷ்டரிடம் சென்று தன்னை உடலுடன் சொர்க்கத்துக்கு அனுப்ப சொல்கிறார். வஷிஷ்டர் அது சமநிலையை குலைத்துவிடும் முடியாது என்கிறார். இந்தச் சக்ரவர்த்தி வஷிஷ்டர் பிள்ளைகளிடம் சென்று கேட்கிறார். அவர்கள் அவனுக்கு சண்டாளனாக போ என்று சாபம் கொடுக்கின்றனர். சண்டாளனாக (இருக்கும் சக்ரவர்த்தி) விஸ்வாமித்திரரிடம் செல்கிறார். விஸ்வாமித்ரர் தன் தவவலிமையால் அந்த சக்ரவர்த்தியை நேரடியாக சொர்க்கத்திற்கு அனுப்புகிறார். ஆதலால் தவவலிமையால் ஒருவருக்கு சாபம் கொடுக்க முடியும். ஒருவருக்கு விமோச்சனமும் தவத்தால் பெற்றுத்தர முடியும்.

மேலும்: அஷோக் உரை

ஒப்புமை
கம்பராமாயண மந்திரப்படல 25 பாடலொன்றில் கம்பன் இவ்வாறு கூறுகிறான்: “இழைத்த தீவினையையும் கடக்க எண்ணுதல் தழைத்த பேரருளுடைத் தவத்தினாகுமேல்”.

“தேவ ரென்பவர் யாரும்இத் திருநகர்க் கிறைவற்
கேவல் செய்கிலார் ஏவரே... இவன் முயன்ற
தாவின் மாதவ மல்லது பிறிதொன்று தருமே” (கம்ப.ஊர்தேடு 12)

பரிமேலழகர் உரை
ஒன்னார்த் தெறலும் - அறத்திற்குப் பகையாய் அழிவு செய்தாரைக் கெடுத்தலும், உவந்தாரை ஆக்கலும் - அதனை உவந்தாரை உயர்த்தலும் ஆகிய இவ்விரண்டையும் எண்ணின் தவத்தான் வரும் - தவம் செய்வார் நினைப்பராயின், அவர் தவ வலியான் அவை அவர்க்கு உளவாம். (முற்றத் துறந்தார்க்கு ஒன்னாரும் உவந்தாரும் உண்மை கூடாமையின், தவத்திற்கு ஏற்றி உரைக்கப்பட்டது. 'எண்ணின்' என்றதனால், அவர்க்கு அவை எண்ணாமை இயல்பு என்பது பெற்றாம். ஒன்னார் பெரியராயினும், உவந்தார் சிறியராயினும், கேடும் ஆக்கமும் நினைந்த துணையானே வந்து நிற்கும் எனத் தவம் செய்வார் மேலிட்டுத் தவத்தினது ஆற்றல் கூறியவாறு.).

மணக்குடவர் உரை
இவ்விடத்துப் பகைவரை தெறுதலும், நட்டோரை யாக்குதலுமாகிய வலி ஆராயின் முன்செய்த தவத்தினாலே வரும். இது பிறரை யாக்குதலும் கெடுத்தலுந் தவத்தினாலே வருமென்றது.

மு.வரதராசனார் உரை
தீமை செய்யும் பகைவரை அடக்குதலும் நன்மை செய்யும் நண்பரை உயர்த்துதலும் நினைத்த அளவில் தவத்தின் வலிமையால் உண்டாகும்.

சாலமன் பாப்பையா உரை
பகைவர்களை மாற்றவும், நண்பர்களைப் பெருக்கவும் எண்ணினால், தவத்தால் அதைச் செய்ய முடியும்.

No comments:

Post a Comment