மக்கள்மெய் தீண்டல் உடற்கின்பம் மற்றுஅவர்

குறள் 65
மக்கள்மெய் தீண்டல் உடற்கின்பம் மற்றுஅவர்
சொற்கேட்டல் இன்பம் செவிக்கு
[அறத்துப்பால், இல்லறவியல், மக்கட்பேறு]

பொருள்
மக்கள் - மானுடவினம்; ஐம்பொறியுணர்வோடுமனவறிவுடையஉயிர்கள்; பிள்ளைகள்.

மெய் - உண்மை; உடல்; உயிர்; உணர்ச்சி; மார்பு; ஒற்றெழுத்து

தீண்டல் - - தீண்டுதல்; பிறப்பு இறப்பு முதலியவற்றால் உண்டாவதாகத் கருதப்படும் தீட்டு; மாதவிடாய்; வயல்.

தீண்டுதல் - தொடுதல்; பற்றுதல்; பாம்புமுதலியனகடித்தல்; அடித்தல்; தீட்டுப்படுத்துதல்.

உடற்கு - உடல் -  உடம்பு; மெய்யெழுத்து பிறவி உயிர்நிலை சாதனம் பொன் பொருள் ஆடையின்கரையொழிந்தபகுதி; மாறுபாடு

இன்பம் - மனமகிழ்ச்சி; இனிமை ஒன்பான்சுவைகளுள்ஒன்று; சிற்றின்பம், காமம் திருமணம் நூற்பயன்களுள்ஒன்று.

மற்று - ஓர்அசைநிலை; பிறிதின்பொருட்குறிப்பு; வினைமாற்றுக்குறிப்பு; மறுபடியும்; பின்; காண்க:மற்றப்படி.

அவர் - அவன், அவள்என்பதன்பன்மைச்சொல்; ஒருவரைக்குறிக்கும்பன்மைச்சொல்.

சொல் - மொழி; பேச்சு; பழமொழி; உறுதிமொழி; புகழ்; மந்திரம்; சாபம்; கட்டளை; புத்திமதி; பெயர்ச்சொல்; வினைச்சொல்; இடைச்சொல், உரிச்சொல்என்னும்நால்வகைமொழிகள்; தமிழ்மொழியில்உள்ளஇயற்சொல், திரிசொல், திசைச்சொல், வடசொல்எனநால்வகைப்பட்டமொழிகள்; நாடகவரங்கில்பேசப்படும்உட்சொல், புறச்சொல்; ஆகாசச்சொல்என்பன; சத்தம்; நாமகள்; பேசச்செய்வதானகள்; நெல்.

கேட்டல் - செவிக்குப்புலனாகுதல்; பாடங்கேட்டல்; வினாவல்; விசாரித்தல்; வேண்டுதல்; கேள்விப்படுதல்; கொடுக்கச்சொல்லுதல்; தண்டித்தல்; இரத்தல்; நோய்முதலியனநீக்குதல்; விலைகேட்டல்; ஏற்றுக்கொள்ளுதல்; பொறுத்தல்; தணிதல்; கீழ்ப்படிதல்; ஒலிஎட்டுதல்; செவியாற்கேட்குதல்; அனுமதிபெறுதல்.

இன்பம் - மனமகிழ்ச்சி; இனிமை ஒன்பான்சுவைகளுள்ஒன்று; சிற்றின்பம், காமம் திருமணம் நூற்பயன்களுள்ஒன்று.

செவிக்கு - செவி - காது; கேட்கை; பாத்திரத்தின்காதுவளையம்; வீணையின்முறுக்காணி; ஓரங்குலமழை.

முழுப்பொருள் 
பருவம் அடைந்தபின்பு (அல்லது திருமணம் முடிந்தபின்பு) ஆணும் பெண்ணும் உடலை தழுவிக்கொள்வது, தீண்டிக்கொள்வது உடலினால் காமத்தினால் ஏற்படக்கூடிய ஒன்று. சிறிது காலம் இருக்கும். பிறகு இருக்காது. 

தன்னுடைய குழந்தைகளை ஆரத்தழுவுதல் இயல்பாய் மனதில் இருந்து நடக்கக்கூடிய ஒன்றாகும். அது எல்லாக்காலங்களிலும் இருக்கும். அது நம் உடலுக்கு தருவது இன்பமாகும். அதே குழந்தைகள் வளரும் பொழுது ஓசைகளையும் சொற்களையும் கேட்பதும் வளர்ந்தபின்பு செறிவான பேச்சுக்களாக கேட்பதும் செவிகளுக்கு இன்பத்தை தரும்.

'அள்ளி அணத்திடவே என்முன்னே ஆடிவருந்தேனே’, ‘உச்சிதனை முகந்தால் கருவம் ஓங்கிவளருதடி’, ‘உன்னைத்தழுவிடிலோ கண்ணம்மா உன்மத்தம் ஆகுதடி’ என்றெல்லாம் பாரதியார், உள்ளத்தில் பொங்கிவரக்கூடிய தாயன்பிலே (வாத்ஸல்யம்), கண்ணனை, கண்ணம்மாவாக பாடியிருப்பார். உன்மத்தம் என்பது சாதாரண வழக்கிலே கூறுவதுபோல ஒரு கிறக்கதையும், மயக்கத்தையும் கொடுப்பது. தன்படைப்பைத் தானே உச்சிமுகந்துகொள்ளும் ஒரு அனுபவம். இது பெற்றோர்களுக்கே உண்டான ஒத்துக்கொள்ளக்கூடிய, தற்பெருமை என்று சொல்லமுடியாத ஒரு மகிழ்ச்சி நிலை! தத்தித் தளர்நடையிட்டு வரும் குழந்தைகளை, வாரியணைத்து நெஞ்சாரத் தழுவுதல், குழந்தைகளுக்குப் பாதுகாப்பு உணர்வை அளிக்கும், பெற்றோர்களுக்கு பாச நெகிழ்வைத்தரும்.

ஒப்புமை
”அத்தத்தா என்னும்நின்
தேமொழி கேட்டல் இனிது” (கலி 80:14-5)

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
உடற்கு இன்பம் மக்கள்மெய் தீண்டல் - ஒருவன் மெய்க்கு இன்பமாவது மக்களது மெய்யைத் தீண்டுதல்; செவிக்கு இன்பம் அவர் சொல் கேட்டல் - செவிக்கு இன்பமாவது அவரது சொல்லைக் கேட்டல். ('மற்று' வினைமாற்று. மக்களது மழலைச் சொல்லே அன்றி அவர் கற்றறிவுடையராய்ச் சொல்லுஞ் சொல்லும் இன்பமாகலின், பொதுப்படச் 'சொல்' என்றார். 'தீண்டல்', 'கேட்டல்' என்னும் காரணப்பெயர்கள் ஈண்டுக் காரியங்கள்மேல் நின்றன.).

மணக்குடவர் உரை
தம்மக்கள் தமதுடம்பினைச் சார்தல் தம்முடம்பிற் கின்பமாம்: அவர் சொற்களைக் கேட்டல் செவிக்கின்பமாம்.

மு.வரதராசனார் உரை
மக்களின் உடம்பைத் தொடுதல் உடம்பிற்கு இன்பம் தருவதாகும்: அம் மக்களின் மழலைச் சொற்களைக் கேட்டால் செவிக்கு இன்பம் தருவதாகும்.

சாலமன் பாப்பையா உரை
பெற்ற பிள்ளைகளின் உடலைத் தழுவுவது உடலுக்கு இன்பம். அவர்களின் பேச்சைக் கேட்பது காதிற்கு இன்பம்.

குறளும் பொருளும் - பா.ராகவன் உரை
குழந்தைகள் ஓர் இன்பப் பொதி.

No comments:

Post a Comment