விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கே

குறள் 16
விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கே
பசும்புல் தலைகாண்பு அரிது.
[அறத்துப்பால், பாயிரவியல், வான்சிறப்பு]

பொருள்
விசும்பின் - விசும்பு - வானம்; தேவலோகம்; மேகம்; திசை; வீம்பு; செருக்கு.

துளி  - திவலை; மழை; ஒருசொட்டுஅளவு; சிறிதளவு; நஞ்சு; பெண்ணாமை; துளித்தல்.

வீழின்  - வீழ்தல் -  ஆசை; ஆசைப்பெருக்கம்; மேவல்; வீழுதல்; காண்க:விழுதல்; நீங்குதல்.

அல்லால் - மற்றபட்டி, இல்லாமல்

மற்று  - ஓர்அசைநிலை; பிறிதின்பொருட்குறிப்பு; வினைமாற்றுக்குறிப்பு; மறுபடியும்; பின்; காண்க:மற்றப்படி.

ஆங்கே - அங்கே

பசும்புல்  - பச்சைப்புல்; விளைபயிர்.

தலை - சிரம்; முதல்; சிறந்தது; வானம்; இடம்; உயர்ந்தோன்; தலைவன்; உச்சி; நுனி; முடிவு; ஒப்பு; ஆள்; தலைமயிர்; ஏழாம்வேற்றுமைஉருபு; ஓர்இடைச்சொல்; மேலே; தபால்கடிதத்தில்ஒட்டும்முத்திரைத்தலை; தலையோடு.

காண்பு - காட்சி, காணுதல்.

அரிது - aritu   s. Difficulty, unattainable ness, rareness, preciousness, அருமை.

முழுப்பொருள்
வானத்தில் இருந்து மேகங்களின் துளிகள் மழையாக பூமியின் நிலத்தில் விழாமல் போனால் என்ன ஆகும்? அந்த நிலத்தில் பசும்புல்கள் கூட முளைக்காது. ஆதலால் நாம் அவற்றை நிலத்தின் மேல் பார்ப்பது அரிதாகிவிடும். பசும்புல்லிற்கு தேவையான தண்ணீர் சிறிதளவு தான் வேண்டும். அது நிலத்தின் மேற்பரப்பில் ஒரு சில அங்குலம் இருந்தால் கூட போதும். அப்படிப்பட்ட பசும்புல்லிற்கு தேவையான நீரே கிடைக்கவில்லையென்றால் நிலத்தடி நீரினை நம்பியுள்ள மரங்கள் செடிகள் எல்லாம் எப்படி உயிர்வாழும்? குளங்களிலும் ஆறுகளிலும் எப்படி தண்ணீர் நிரம்பும். அதனை நம்பியுள்ள விலங்குகள் எப்படி தண்ணீர் பருகும் ? 

இந்த பசும்புல்களும் செடிகளும் மரங்களும் நீர்நிலைகளும் இல்லையென்றால் விலங்குகள் எப்படி நிழலார வாழும், உணவு உட்கொள்ளும்? பறவைகள் மரத்தில் காய்க்கும் பழங்களையம் விலங்குகளின் ஊனையும் நம்புகின்றன. அவை எப்படி உயிர்வாழும்? செடிகளையும் விலங்குகளின் மாமிசத்தையும் உணவுக்காக நம்பும் மனிதர்கள் எப்படி உயிர்வாழ்வார்கள் ?

ஆதலால் எல்லா ஜீவராசிகளும் மழையை நம்பியே உள்ளன. மழை அரிதானால் பசும்புல் உட்பட எல்லா ஜீவராசிகளும் அரிதாகும். 

1) ”இவையெல்லாம் இங்கே எப்போதுமிருக்கும். இப்படியே இருக்கும். இங்கே பிறந்து இறப்பவர்களும், வந்து செல்வனவும், முளைத்து மறைவனவும் கூட அந்த அழியாமையில் எஞ்சியிருக்கும். ”

2) மாரியும் மலையும் முனிந்தால் மானுடர் என்ன செய்வார்.....

3) மூன்றுபொன்னும் முனிந்துவிட்டால் மிச்சம் ஏதுமுண்டோ

ஒப்புமை
”பயிர் காட்டும் புயல்” (சம்பந்தர்.திருவெண்காடு 1)
“பைங்கூழ்க்கு வானே யன்ன” (பெரிய.சண்டேச 24)

மேலும்: அஷோக் உரை

எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய அறத்தாறிது கட்டுரையில் இருந்து
குலஅறம் என்பது அடுத்த கட்டத்துக்கு போகும் தருணங்களை நான் தரிசித்திருக்கிறேன். இரண்டு நிகழ்ச்சிகள் எனக்கு ஞாபகம் வருகின்றன. அய்யப்பண்ணன் வேளிமலை அடிவாரத்தில் விவசாயம் செய்வதற்காக போவார். சாலையிலிருந்து அங்கு போவதற்கு கிட்டத்தட்ட பத்து கிலோமீட்டர் வரை இருக்கும். தண்ணீர் தவிர அங்கு வேறு எதுவும் கிடைக்காது. தூக்கு பாத்திரத்தில் சோறோடு போவார். அங்கு வைத்துவிட்டு வயலுக்குள் இறங்கி வேலை பார்ப்பார். சோறுதான் இருக்கிறதே, சாப்பிடலாம் என்று எண்ணி சோறு இருப்பதனாலேயே பசியை ஒத்திப்போடும் மனநிலை வரும். விவசாய வேலை அப்படிப்பட்டது முடிக்கவே தோன்றாது. சாப்பிடலாம் சாப்பிடலாம் என்று ஒத்திப்போட்டு பசி ஏறிக்கொண்டே இருந்தது. கிட்டத்தட்ட கொலை வெறி பசி அடையும்வரை விட்டுவிட்டார். பசி தாங்க முடியாமல் ஆனபின் மண்வெட்டியை வைத்துவிட்டு வந்தார்.

ஒருநாய் அவருடைய தூக்குபோணியில் இருந்த உணவை சாப்பிட்டுக் கொண்டிருந்தது. அவர் மண்வெட்டியை காலால் மிதித்தபடி குச்சியை எடுத்தார் அடிப்பதற்கு. ஆனால் மனம் நெகிழ்ந்துவிட்டது. அவர் என்னிடம் சொன்னார். “தம்பி க்ளக் க்ளக்ன்னு சத்தம் கேட்டுது. அம்புட்டு பசி அதுக்கு. நமக்கு தெரிஞ்ச பசிதானே அதுக்கும் தெரியுது அந்த பசி சத்தத்துக்கு கண்ல தண்ணி வந்து போட்டுது பாத்துக்குங்க. சாப்டுட்டு போ மக்கான்னு சொல்லிட்டேன்”

இது தான் குல அறத்திலிருந்து அடுத்த கட்டமாக ஒரு பெரிய அறம் நோக்கி போகும் பயணம். மானுட அறம். உயிர்களைத் தழுவி விரியும் அறம் இது. இன்னொரு நிகழ்ச்சி. அதுவும் அய்யப்பண்ணன்தான். அந்த வருடம் மழை தவறிவிட்டது. அவர் சொன்னார் “எப்படி மழை பெய்யும்? மழையை நாம விக்க தானே செய்யுறோம்?” நான் “என்ன சொல்கிறீர்கள்?” என்று கேட்டேன்.

அவர் விளக்கினார். உணவுக்காக வாழ்வுக்காக விவசாயம் பண்ணும்போது மழைக்கு நாம் நியாயம் செய்கிறோம். ஆனால் அந்த மழையைப் பயன்படுத்தி விவசாயம் செய்து வணிகப்பொருளாக மாற்றி ரப்பராகவோ இன்னொன்றாகவோ ஆக்கி விற்கும்போது மழையை விற்கிறோம். மழையை விற்றால் மனிதனுக்கும் மழைக்குமான ஒர் ஒப்பந்தம் ரத்து செய்யப்படுகிறது. எதன் பொருட்டு மண்ணில் விழவேண்டுமோ அந்த ஒப்பந்தத்தை ரத்து செய்கிறாய் நீ. விற்க ஆரம்பிக்கிறாய். அதனால் அது பெய்யாது. பெய்யவில்லை என்றால் நீ போய் தெய்வத்திடம் கேட்கக்கூடாது. இது ஒரு அறம். இப்படிப்பட்ட அறங்களால் தான் வாழ்க்கை உருவாகிவந்திருக்கிறது.

இதிலிருந்து தான் பெரிய அறங்கள் உருவாகி வந்திருக்கின்றன. சமூக அறம், தவறுகள் சரிகள் சார்ந்த அறங்கள், உருவாகி வந்துள்ளன. ஆனால் திருப்பி திருப்பி நமக்குத் தெரியாத ஒரு விஷயம் இருக்கிறது. ஒரு பேரறத்தான் ஒருவன் தருமத்தின் குரலில் பேசும்போது நம் அன்றாட தர்க்க புத்திக்கு அது அபத்தமாக இருக்கிறது ஆனால் அது சரியாகவும் இருக்கும்.

உங்களுக்குத் தெரிந்திருக்கும், இந்தியாவின் மதக்கலவரங்கள் நடந்த காலத்தில் ஒருவன் வந்து காந்தியிடம் சொல்கிறான். ‘ “என் மனைவியையும் நான்கு குழந்தைகளையும் இஸ்லாமியர்கள் கொலை செய்துவிட்டார்கள். நான் ஐந்து இஸ்லாமியர்களைக் கொலை செய்துவிட்டு வந்திருக்கிறேன். இன்னும் கொல்வேன். நீங்கள் என்ன செய்ய முடியும்?” என்று. அப்போது காந்தி சொல்கிறார் “இன்னும் நூறு இஸ்லாமியர்களைக் கொன்றாலும் உன் தீ அடங்காது. ஒரு இஸ்லாமியக் குழந்தையை எடுத்து நீ வளர். உன் குழந்தையாக அதை நினை. அப்போது தான் உன்னுடைய தீ அடங்கும்”.

நடைமுறையில் அபத்தமான ஒரு பதில் அது. ஆனால் அதைவிட சரியான பதில் இருக்கமுடியாது. அவ்வளவுதான் அட்டன்பரோவின் காந்தி சினிமாவில் இக்காட்சி வருகிறது. உண்மையிலேயே அவர் அப்படிச் செய்து பிற்காலத்தில் புகழ்பெற்ற சமூக சேவகராகவும் ஞானியாகவும் அறியப்பட்டார் என்று ஒரு செய்தி உண்டு..

எப்போதும் அறத்தின் குரல் கிளம்பி வரும்போது அது சமகால பிழைப்புவாத சிந்தனைக்கும் நாம் யோசித்திருக்கும் நூற்றுக்கணக்கான அன்றாட விஷயங்களுக்கும் முரண்பாடாக தெரியும். கொஞ்சம் பைத்தியக்காரத்தனமாக வீட்டு வாசலுக்குப் பதிலாக கூரையில் ஒரு ஜன்னலைத் திறந்து விட்டதாக தோன்றும். ஏனெனில் அது மிகவும் தொன்மையானது. மிகவும் பழைமையானது. எப்போதாவது நம் புனைகதைகளில் அந்தத் தருணம் வரும்போதுதான் நமக்கு ஒரு மெய்சிலிர்ப்பு வருகிறது.

நாஞ்சில் நாடனின் ஒரு பிரபலமான கதை உண்டு. இவர் கோவையில் ஒரு பஸ்ஸில் ஏறுகிறார். அந்த பஸ் மானந்தவாடிக்கு போகிறது. அந்த பஸ் ஏறும் காட்சியே அவர் பிரமாதமாக சொல்கிறார். பஸ்ஸில் நூறு பேர்தான் போக முடியுமெனில் முந்நூறு பேர் காத்திருக்கிறார்கள். பஸ் வந்தவுடன் நானூறு பேர் ஏறிவிட்டார்கள். எப்படி ஏறினார்கள் என்று தெரியாது. முழுவதும் ஆட்கள்.

டிரைவர் வந்து உட்காரும்போதே அந்தக் கூட்டத்தை பார்த்து கடுப்பாகிவிடுகிறான். வண்டியே ஒரு பக்கம் சரிந்திருக்கிறது. அவனே ஒரு பக்கம்சரிந்து உக்கார்ந்துதான் ஓட்டுகிறான். பிறகு கெட்ட வார்த்தையாக திட்டிக் கொண்டே இருக்கிறான். சத்தம் போட்டுக்கொண்டே இருக்கிறார்கள் மக்கள்.. எரிச்சலின் உச்சத்தில் அந்த வண்டி போய்க்கொண்டிருக்கிறது. மானந்தவாடியை தாண்டும்போது ஒரு பெரிய மலைப்பாம்பு சாலையை மிக மெதுவாக கடந்து போகிறது. எதையாவது சாப்பிட்டிருக்குமோ அல்லது கர்ப்பிணியோ தெரியவில்லை என்கிறார் ஆசிரியர். மிக மெதுவாக கடந்து போகிறது அது. டிரைவர் வண்டியை நிறுத்திட்டு தலையை வெளியே நீட்டி மலையாளத்தில் ‘ஒந்நு போ மோளே வேகம்’ என்கிறான். மகளே கொஞ்சம் வேகமாப்போ என்று.

இந்த இடத்தில் அவன் ஒரு டிரைவராக அல்லாமல் ஒரு ஆதிவாசியாக மாறி பல்லாயிரம் வருட பழமையான ஒரு பண்பாட்டுக்குள்ள போய்விடுகிறான். இந்த மாற்றத்தை இந்த தொன்மையை மாறாத ஒன்றை சுட்டிக் காட்டும்போது தான் இலக்கியப்படைப்புகள் அமரத்துவம் கொள்கின்றன.

நான் சில ஆண்டுகளுக்கு முன் நமீபியா போயிருந்தேன். என்னை டேவிட் கெம்பித்தா- என்கிற கருப்பினத்தை சேர்ந்த வழிகாட்டி இளைஞன் அழைத்துச் சென்றான். ஓர் இடத்தில் மணல்மேல் ஒரு டிசைனை பார்த்தேன். ”இது என்ன?” என்று கேட்டேன். ”இது வைட் லேடி, காட்டுகிறேன்” என்று மணலில் தோண்ட ஆரம்பித்தான். அங்கு எச்சிலால் ஆன ஒரு குழாய் போல மணலுக்குள் இறங்கிச் சென்று அங்கு ஒரு சிறிய குடுவை மாதிரி சென்று முடிந்தது. அதிலிருந்து வெள்ளை நிறத்தில் ஒரு சிலந்தியை எடுத்து எனக்கு காட்டினான். ”இதன் பேர்தான் வைட் லேடி. இவள் இரவில் தான் வேட்டையாடுவாள்.பகலில் உள்ள உக்காந்திருப்பாள். அழகானவள். அதனால தான் இவளுக்கு வைட் லேடி என்று பெயர்” என்று விளக்கம் சொன்னான்.

கொஞ்ச நேரத்தில் கிளம்பினோம். அவன் அதே ஆழத்திற்கு மண்ணைத் தோண்டி அதைப்போட்டு மண்ணை மூடினான். ”ஏன்?” என்று கேட்டேன். “இவளை வெளியே போட்டால் பத்து நிமிஷம் கூட வெயில் தாங்காது. இறந்துவிடுவாள். உள்ளே போட்டால் குளிராக இருக்கும். அங்கு தான் அவள் உயிருடன் இருக்க முடியும்” என்று சொன்னான். நான் சொன்னேன் ”நீங்கள் எல்லாம் வேட்டைக்காரர்கள்தானே? இதைக் கொன்றால் உங்களுக்கு என்ன?”

அவன் சொன்னான். ”அதை நான் சாப்பிட முடியும் என்றால் ஒன்றுமில்லை. வெறுமே கொன்று போட்டுவிட்டு போவதை ஒரு ஆப்பிரிக்க பழங்குடி செய்யக்கூடாது”. அதைக் கொன்று போட்டுவிட்டு போவதற்கு வெள்ளைக்காரர்கள், இந்தியர்கள் போன்ற நாகரீக மனிதர்களால் தான் முடியும். அவர்களால் முடியாது. அவர்களுடையது பல்லாயிரம் வருடத் தொன்மைகொண்ட வேட்டைப்பண்பாடு.

நெடுங்காலமாக ஒரு பண்பாட்டிலிருந்து நாம் விலகி விலகி வந்துவிட்டோம். மீண்டும் குல அறத்திலிருந்து நாம் பாடங்களை கற்றுக் கொள்ள வேண்டியிருக்கிறது. இதுதான் அறம் என்பதின் அடிப்படை. இங்கிருந்துதான் அறம் தொடர்பான எல்லா வார்த்தைகளும் வந்திருக்கிறது இங்கிருந்து தான் எல்லாமே தொடங்குகிறது. அறம் வலியுறுத்தல் என்ற பெயரில் வள்ளுவர் எழுதிய எல்லா பாடல்களையும் இன்றைய நவீன மாணவனுக்கு சொல்லி புரியவைப்பது கடினம் ஆனால் ஒரு பழங்குடியிடம் சொல்லிபுரியவைப்பது சுலபம்.

விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கே
பசும்புல் தலைகாண்பு அரிது

மிக சாதாரணமாக பொருள் அளிக்கும் ஒரு குறள் அது. ஆனால் விசும்பு என்பது வானம் அல்ல. பெருவெளி. ஸ்பேஸ். அது கனிந்துவிழுந்தால்தான் பசும்புல். உணவின் முதல் வடிவம் உருவாகிறது. புல் என்பது ஜடப்பொருள் உனவாகும் முதற்பரிணாமம். அன்னத்தின் கண்கண்ட வடிவம். ஆகவே தான் புல் வணக்கத்துக்குரியதாக வேதத்தில் சொல்லப்படுகிறது. ஏனெனில் நெல்லும் ஒரு வகையான புல்தான். இந்த பூமியை முழுக்கத் தழுவியிருக்கும் ஒன்று புல். எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் மோசமான இடத்திலிருந்தும் புல் வந்துவிடும். புல்லில் இருந்து தான் அனைத்தும் ஆரம்பிக்கிறது. ஒன்று புல்லை சாப்பிடுவோம். அல்லது புல்லை சாப்பிடுவதைச் சாப்பிடுவோம். அது முளைக்க விசும்பிலிருந்து ஓர் ஆணை வரவேண்டும். அய்யப்பண்னன் சொன்னது அதுதானே?

அறம் என்கிற வார்த்தையை தமிழில் எப்படியெல்லாம் பயன்படுத்தியிருக்கிறோம் என்று பார்த்தால் அது மாறிக்கொண்டு வருவதைப்பார்க்கலாம். சங்க காலத்து அறம் என்பது பொதுவாக ஒரு குடியோ ஒரு குடும்பமோ மரபுக்கடமையாகக் கொள்ளும் ஒன்றைத் தான் சுட்டிக் காட்டுகிறது. இல்லறம், துறவறம் என அறங்கள் இரண்டு. அதன் பிறகு பௌத்தம் வந்தது, சமணம் வந்தது. அவர்கள் அறம் என்பதை பிரபஞ்ச அறமாக மாற்றினார்கள். இங்கிருக்கும் ஒரு பசும்புல்லில் இருந்து விசும்பை திறந்து காட்டினார்கள். அதன் பின் அறம் என்பது மிகப்பெரிய வார்த்தை. அது பிரபஞ்ச நெறி.

பரிமேலழகர் உரை
விசும்பின் துளி வீழின் அல்லால் - மேகத்தின் துளி வீழின் காண்பது அல்லது; மற்று ஆங்கே பசும்புல் தலை காண்பது அரிது - வீழாதாயின் அப்பொழுதே பசும்புல்லினது தலையையும் காண்டல் அரிது. ('விசும்பு' ஆகு பெயர். 'மற்று' வினைமாற்றின்கண் வந்தது. இழிவு சிறப்பு உம்மை விகாரத்தால்தொக்கது. ஓர் அறிவு உயிரும் இல்லை என்பதாம்.).

மணக்குடவர் உரை
வானின்று துளிவீழினல்லது அவ்விடத்துப் பசுத்த புல்லினது தோற்றமுங் காண்டல் அரிது. ஆங்கென்பதனை அசையாக்கினு மமையும். இஃது ஓரறிவுயிருங் கெடுமென்றது.

மு.வரதராசனார் உரை
வானத்திலிருந்து மழைத்துளி வீழ்ந்தால் அல்லாமல், உலகத்தில் ஓரறிவுயிராகிய பசும்புல்லின் தலையையும் காண முடியாது.

சாலமன் பாப்பையா உரை
மேகத்திலிருந்து மழைத்துளி விழாது போனால், பசும்புல்லின் நுனியைக்கூட இங்கே காண்பது அரிதாகிவிடும்.

குறளும் பொருளும் - பா.ராகவன் உரை
புல் முளைக்கவும் மழை வேண்டும்.

No comments:

Post a Comment