செறிதொடி செய்திறந்த கள்ளம் உறுதுயர்

குறள் 1275
செறிதொடி செய்திறந்த கள்ளம் உறுதுயர்
தீர்க்கும் மருந்தொன்று உடைத்து
[காமத்துப்பால், கற்பியல், குறிப்பறிவுறுத்தல்]

பொருள்
செறி - நெருக்கம்

தொடி - வளைவு; கைவளை; தோள்வளை; வீரவளை; சுற்றுவட்டம்; பூண்

செய்து - செய்தல் - இயற்றுதல்; உண்டாக்கல்; சம்பாதித்தல்; ஒத்தல்.

இறந்த - இறத்தல் கடத்தல்; கழிதல் நெறிகடந்துசெல்லுதல்; சாதல் மிகுதல் வழக்குவீழ்தல்; நீங்குதல்

கள்ளம் - வஞ்சகம்; பொய்; களவு; குற்றம்; அவிச்சை; புண்ணிலுள்ளஅசறு.

உறு - மிகுதி; மிக்க; பகை; போர்.

துயர் - துன்பம்; அரசர்க்குஉரியசூதுமுதலாகியவிதனம்.

தீர்க்கும் - தீர்த்தல் - விடுதல்; முடித்தல்; போக்குதல்; அழித்தல்; கொல்லுதல்; தீர்ப்புச்செய்தல்; நன்றாகப்புடைத்தல்; கடன்முதலியனஒழித்தல்; மனைவியைவிலக்குதல்.-

மருந்து - அமுதம்; ஔடதம்; பரிகாரம்; வசியமருந்து; சோறு; குடிதண்ணீர்; இனிமை; வெடிமருந்து; முள்ளுக்கடம்பு; புதற்புல்என்னும்புல்வகை.

ஒன்று - ஒன்று

உடைத்து - உடைதல் - இருக்கும்

முழுப்பொருள்
நெருக்கமாக சிலபல வளையல்களை அணிந்த என் காதலி என்னிடம் ஆசையாக இருக்கும் பொழுது அவள் கள்ளமாக செய்த (செய்து உணர்த்திய) குறிப்பை நினைக்கையில் என்னை மிக வருத்தும் துன்பங்கள் எல்லாம் குணமாகிவிடுகின்றன. அந்த குறிப்பை துன்பங்களைத் தீர்க்கும் மருந்தாகவே கருதுகிறேன். எனக்கு அது இனிமையை சேர்க்கிறது. அவளே என் மருந்து.

பி.கு: "காதல் கொண்டேன்" திரைப்படத்தில் வினோத் (தனுஷ்) கதாபாத்திரம் தன் பால்யத்தில் பல துன்பங்களை அனுபவிக்கும். அவன் விரும்பும் அவன் கல்லூரித்தோழி அவனுடைய துன்பங்களையெல்லாம் ஆற்றும் மருந்தாக அவன் எண்ணுவான். அவனுடைய சர்ச் பாதர்(church father) அவனிடம் அதை கூறுவார்.
Youtube Link (from 1:13:00 to 1:15:00)

மேலும்: அஷோக் உரை

ஒப்புமை
”...................நாண்விட்
டருந்துயர் உழந்த காலை
மருந்தெனப் படூஉம் மடவோ ளையே” (நற் 384:9-11)

பரிமேலழகர் உரை
(இதுவும் அது.) செறி தொடி செய்து இறந்த கள்ளம் - நெருங்கிய வளைகளையுடையாள் என்கண் இல்லாததொன்றனை உட்கொண்டு அது காரணமாக என்னை மறைத்துப் போன குறிப்பு; உறுதுயர் தீர்க்கும் மருந்து ஒன்று உடைத்து - என் மிக்க துயரைத் தீர்க்கும் மருந்தாவதொன்றனை உடைத்து. (உட்கொண்டது - பிரிவு. கள்ளம் - ஆகுபெயர். மறைத்தற் குறிபபுத் தானும் உடன்போக்கு உட்கொண்டது. உறுதுயர் - நன்று செய்யத் தீங்கு விளைதலானும் அதுதான் தீர்திறம் பெறாமையானும் உளதாயது. மருந்து - அப்பிரிவின்மை தோழியால் தெளிவித்தல். 'நீ அது செய்தல் வேண்டும்' என்பதாம்.).

மணக்குடவர் உரை
செறிந்தவளையினை யுடையாள் செய்து அகன்ற களவு நீ உற்றதொரு துன்பத்தைத் தீர்ப்பதொரு மருந்தாதலை உடைத்து. தோழி மெலிதாகச் சொல்லிக் குறைநயப்பித்தவழி, கேளாரைப்போலத் தலைமகள் அகன்ற செவ்வியுள் எதிர்ப்பட்ட தலைமகற்கு நின்குறை முடியும்; நீ இவ்விடைச்செல் லென்று தோழி கூறியது.

மு.வரதராசனார் உரை
காதலி என்னை நோக்கி செய்து விட்டுச் சென்ற கள்ளமான குறிப்பு, என் மிக்க துயரத்தைத் தீர்க்கும் மருந்து ஒன்று உடையதாக இருக்கின்றது.

சாலமன் பாப்பையா உரை
நெருங்கி வளையல்களை அணிந்த என் மனைவி நான் மட்டுமே அறிய மறைத்துக் காட்டும் ஒரு குறிப்பில் என் பெருங்கவலையைத் தீர்க்கும் மருந்து ஒன்றும் உண்டு.

No comments:

Post a Comment