மறைப்பேன்மன் காமத்தை யானோ குறிப்பின்றித்

குறள் 1253
மறைப்பேன்மன் காமத்தை யானோ குறிப்பின்றித்
தும்மல்போல் தோன்றி விடும்
[காமத்துப்பால், கற்பியல்,  நிறையழிதல்]

பொருள்
மறைப்பேன் - மறைத்தல் - மறையச்செய்தல்; மூடுதல்; தீதுவாராமற்காத்தல்.

மறைதல் - ஒளிந்துகொள்ளுதல்; தோன்றாமற்போதல்.

மன் - ஓர்அசைநிலை; எதிர்காலங்காட்டும்இடைநிலை; ஒழியிசைக்குறிப்பு; பிறிதொன்றாகைக்குறிப்பு; மிகுதிக்குறிப்பு; ஆக்கக்குறிப்பு; கழிவுக்குறிப்பு; நிலைபேற்றுக்குறிப்பு; ஒருபெயர்விகுதி; அரசன்; வீரன்; தலைவன்; கணவன்; உத்தரட்டாதிநாள்; பெருமை; இழிவு; மந்திரம்; மணங்கு.

காமத்தை - காமம் - ஆசை, அன்பு, விருப்பம்; இன்பம்; புணர்ச்சியின்பம்; காமநீர்; ஊர்; குடி; இறை.

யானோ - யான் - தன்மையொருமைப்பெயர்

குறிப்பு - அறிகுறி; உட்கருத்து; மனத்தால் உணரப்படுவது; ஒன்பது வகைச் சுவைகளினால் உண்டாகும் மனநிலை; மன ஒருமை; குறிப்புக்குறி; சைகை; கூரியஅறிவு; சுருக்கம்; ஓசை; நிறம் முதலிய பொருளைக்குறிப்பது; வெளிப்படையாக அல்லது பொருளுணர்த்துஞ்சொல்; அடையாளம்; கைக்குறிப்பு; ஏடு; சாதகம்; சிறப்பியல்பு; இலக்கு.

இன்றித் - இல்லை, இல்லாமல்

தும்மல் - தும்முதல்; மூச்சு.

போல் - ஓர்உவமவுருபு; பொய்; ஓர்அசைச்சொல்; உள்ளீடில்லாதது; பதர்; மூங்கில்; வெற்றி; படை; வாள்.

தோன்றிவிடும் - தோன்றுதல் - கண்காணவெளிப்படல்; அறியப்படுதல்; பிறத்தல்; முளைத்தல்; விளங்குதல்; நிலைகொள்ளுதல்; வருதல்; சாரியைமுதலியனசொற்களிடையேவருதல்; உண்டாதல்

முழுப்பொருள்
தலைவி தலைவன் மேல் உள்ள காமத்தை(காதலை) மறைக்கவேண்டும் என்று நினைக்கிறாள். ஆனால் இந்த காமமோ (காதலோ) குறிப்பே இல்லாமல் வந்துவிடுகிறது இந்த தும்மலைப்போல். தலைவியை சுற்றியிருப்பவர்களுக்குத் தெரிந்துவிடுகிறது. 

தும்மல் உள்ளுக்குள் இருந்தால் அசௌகர்யத்தை கொடுக்கும். அதனால் அது வெளிவந்துவிடும். அதுபோல் இந்த காமம் அசௌகர்யத்தை கொடுத்து வெளிவந்துவிடுகிறதுபோலும். காதல் வந்தப்பிறகு அதனை எண்ணங்களால் வெல்லமுடியாதுபோலும் அது செய்வதையும் தடுக்கமுடியாதுபோலும். 

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
(மகளிர் காமம் மறைக்கப்படும், என்றாட்குச் சொல்லியது.) காமத்தை யான் மறைப்பேன் - இக்காமத்தை யான் என்னுள்ளே மறைக்கக் கருதுவேன்; குறிப்பு இன்றித் தும்மல் போல் தோன்றிவிடும் - அதனாலென், இஃது என் கருத்தின் வாராது தும்மல் போல் வெளிப்பட்டே விடாநின்றது. ('மன்' ஒழியிசைக் கண் வந்தது. ஓகாரம் இரங்கற்கண் வந்தது. 'தும்மல் அடங்காதாற் போல அடங்குகின்றதில்லை' என்பதாம்.).

மணக்குடவர் உரை
காமத்தை யான் அடக்கக்கருதுவேன்: அவ்வாறு செய்யவும். அது தும்மல் தோன்றுமாறுபோல என் குறிப்பின்றியும் தோன்றாநின்றது. இது தலைமகள் நிறையழிந்து கூறிய சொற்கேட்டு இவ்வாறு செய்யாது இதனை மறைத்தல் வேண்டுமென்ற தோழிக்கு அவள் கூறியது.

மு.வரதராசனார் உரை
யான் காமத்தை என்னுள்‌ளே மறைக்க முயல்வேன்; ஆனால் அதுவே என் குறிப்பின்படி நிற்காமல் தும்மல் போல் தானே வெளிப்பட்டு விடுகிறது.

சாலமன் பாப்பையா உரை
என் காதல் ஆசையை நான் மறைக்கவே எண்ணுவேன்; ஆனால், அது எனக்கும் தெரியாமல் தும்மலைப் போல் வெளிப்பட்டு விடுகிறது.

No comments:

Post a Comment