காதலர் இல்வழி மாலை கொலைக்களத்து

குறள் 1224
காதலர் இல்வழி மாலை கொலைக்களத்து
ஏதிலர் போல வரும்
[காமத்துப்பால், கற்பியல், பொழுதுகண்டிரங்கல்]

பொருள்
காதலர் - தலைவன்

இல் - இடம்; வீடு இல்லறம் மனைவி மருதமுல்லைநிலங்களின்தலைவியர்; குடி இராசி தேற்றாங்கொட்டை இன்மை சாவு எதிர்மறைஇடைநிலை; ஐந்தாம்வேற்றுமைஉருபு; ஏழாம்வேற்றுமைஉருபு
இல்  - இல்லை 

வழி - நெறி; காரணம்; கழுவாய்; வழிபாடு; ஒழுக்கம்; முறைமை; பின்சந்ததி; மரபு; மகன்; சுற்றம்; உடன்பிறந்தான்; பரம்பரை; நூல்வந்தநெறி; சுவடு; பின்னானது; வழக்கு; பழைமை; மலைப்பக்கம்; இடம்; திரட்சி; வரம்; பின்பு; வினையெச்சவிகுதி; ஏழனுருபு.

மாலை - அந்திப்பொழுது; இரவு; இருள்; சமயம்; குற்றம்; மரகதக்குற்றவகை; இயல்பு; குணம்; தொடுக்கப்பட்டது; தொடுத்தபூந்தொடை; மாதரணிவடம்; நூல்வகை; வரிசை; பாசம்; விறலி; பெண்.

கொலைக் -  உயிர்வதை, உயிரைஉடம்பினின்றுநீக்கல்.

களத்து - களம் - நெற்களம்; போர்க்களம்; இடம்; சபை; வேள்விச்சாலை; களர்நிலம்; உள்ளம்; கொட்டகை; கருமை; மனைவி; மஞ்சு; கழுத்து; இன்னோசை

ஏதிலர் - அயலார்; பகைவர்; பரத்தையர்

போல - ஓர்உவமவுருபு

வரும் - வரும் ; வந்து சேரும்

முழுப்பொருள்
முன்பெல்லாம் காதலர் என்னுடன் இருக்கும் பொழுது மாலை பொழுது எனக்கு அவ்வளவு இணக்கமாக இருந்தது. எங்கள் காதலையும் உறவையும் வளர்த்துவிட்டது. ஆனால் அவர் என்னை பிரிந்திருக்கும் பொழுது இந்த மாலைப்பொழுது என்னை பகைவர் கொலைக்களத்துக்கு வாளேந்திச்சென்று கொலைச் செய்யக் கிளம்பிச்செல்வதுபோல் என்னை வதைக்க வருகிறது.

இந்த மாலை பொழுதுக்கு இப்படி ஒரு முகமா ? என்னை வதைக்கிறதே. இது ஒருவகையில் தலைவனை குறிப்பதாகவும் சொல்லலாம். தன்னிடம் இருந்து பொழுது தன்னை மகிழ்ச்சியடைய செய்த தலைவன் இப்பொழுது பிரிந்து தன்னை வதைக்கிறான். ஆதலால் தலைவனுக்கும் இரு முகம் இருக்கிறது என்று தலைவி நினைக்கிறாள் என்று நாம் விளங்கிக்கொள்ளலாம்.

மேலும்: அஷோக் உரை

ஒப்புமை
”கொலை குறித்தன்ன மாலை” (அகநா 364:13)
“ஒன்றே யெயிற்ற தொருபெரும்பேய் விழுங்க அங்காந்து
நின்றாற் போல நிழல்உமிழ்ந்து நெடுவெண் திங்கள் எயிறிலங்க
இன்றே குருதி வான்வாய் அங்காந் தென்னை விழுங்குவான்
அன்றே வந்த திம்மாலை அளியேன் ஆவி யாதாங்கொல்” (சீவக 1660)

பரிமேலழகர் உரை
(இதுவும் அது.) மாலை - காதலர் உள்ள பொழுதெல்லாம் என் உயிர் தளிர்ப்ப வந்த மாலை; காதலர் இல்வழி - அவர் இல்லாத இப்பொழுது; கொலைக்களத்து ஏதிலர் போல வரும் - அஃது ஒழிந்து நிற்றலே அன்றிக் கொல்லுங்களரியில் கொலைஞர் வருமாறுபோல அவ்வுயிரைக் கோடற்கு வாராநின்றது. (ஏதிலர் - அருள் யாதுமில்லார். 'முன்னெல்லாம் எனக்கு நட்பாய் இன்பஞ்செய்து வந்த பொழுதும், இன்று என்மேற் பகையாய்த் துன்பஞ்செய்து வாரா நின்றது. இனி யான் ஆற்றுமாறு என்னை'? என்பதாம்.).

மணக்குடவர் உரை
காதரில்லாதவிடத்து இம்மாலைப்பொழுது கொலைக் களத்துப் பகைவரைப்போல வரும். இது மாலைக்காலத்து நோய் மிகுதற்குக் காரணமென்னை யென்ற தோழிக்குத் தலைமகள் காரணங்கூறியது.

மு.வரதராசனார் உரை
காதலர் இல்லாத இப்போது, கொலை செய்யும் இடத்தில் பகைவர் வருவது போல் மாலைப்பொழுது ( என் உயிரைக் கொள்ள) வருகின்றது.

சாலமன் பாப்பையா உரை
அவர் என்னைப் பிரியாமல் என்னுடன் இருந்தபோது எல்லாம் என் உயிர் வளர வந்த இந்த மாலைப் பொழுது, அவர் என்னைப் பிரிந்து இருக்கும் இப்போது, கொலைக் காலத்திற்கு வரும் கொலையாளிகள் போலக் கருணை இல்லாமல் வருகிறது.

No comments:

Post a Comment