கருமணியிற் பாவாய்நீ போதாயாம் வீழும்

குறள் 1123
கருமணியிற் பாவாய்நீ போதாயாம் வீழும்
திருநுதற்கு இல்லை இடம்
[காமத்துப்பால், களவியல், காதற்சிறப்புரைத்தல்]

பொருள்
கருமணியின் - கண்ணின்மணி; கருகுமணி, நீலமணி;கண்ணின் கருமணி

பாவாய் - பாவை - பொம்மைபோன்றஅழகியபெண்; பதுமை; அழகியஉருவம்; கருவிழி; பெண்; குரவமலர்; காண்க:பாவைக்கூத்து; நோன்புவகை; திருவெம்பாவை; திருப்பாவை; இஞ்சிக்கிழங்கு; மதில்.

நீ  - நீ  (தலைவி)

போதாய் - போய்விடு

யாம்  - நான் - தன்மைப்பன்மைப்பெயர்

வீழும் - வீழ்தல் - ஆசை; ஆசைப்பெருக்கம்; மேவல்; வீழுதல்; காண்க:விழுதல்; நீங்குதல்.

திரு - திருமகள்; செல்வம்; சிறப்பு; அழகு; பொலிவு; நல்வினை; தெய்வத்தன்மை; பாக்கியம்; மாங்கலியம்; பழங்காலத்தலையணிவகை; சோதிடங்கூறுவோன்; மகளிர்கொங்கைமேல்தோன்றும்வீற்றுத்தெய்வம்.

நுதற்கு  - நுதல் - சொல்; நெற்றி; புருவம்; தலை; மேலிடம்.

இல்லை - உண்டுஎன்பதன்எதிர்மறை; இன்மைப்பொருளைஉணர்த்திஐம்பால்மூவிடத்திலும்வரும்ஒருகுறிப்புவினைமுற்று; சாதலைஉணர்த்திஐம்பால்மூவிடத்திலும்வரும்ஒருகுறிப்புவினைமுற்று.

இடம் - தானம்; வாய்ப்பு வீடு காரணம் வானம் விரிவு இடப்பக்கம்; அளவு ஆடையின்அகலமுழம்; பொழுது ஏற்றசமயம்; செல்வம் வலிமை மூவகையிடம்; படுக்கை தூரம் ஏழனுருபு; இராசி

முழுப்பொருள்
காதலின் நேர்மையே அதன் சிறப்பு. காதலின் நேர்மை எப்படி இருக்கும் தெரியுமா? பதில் சொல்லுகிறார் திருவள்ளுவர். காதலன் காதலியை மனதார நேர்மையாக காதிலுக்கும் பொழுது, காதலன் எதிரே ஒரு பாவை வருகிறாள். அந்தப் பாவை அவன் முன்னே இருப்பதால் அவன் கண்களில் இடம் எடுத்துக்கொள்வதனால் அவளை அவன் முன்னே இருந்து போகச்சொல்கிறான். ஏனெனில் அவன் ஆசையாக விரும்பும் அழகியப் பெண்ணின் பொலிவான நெற்றியிற்கு /முகத்திற்கு இடம் இல்லாமல் போய்விடுகிறதாம். அதாவது அவன் கண்களில் அவன் காதலியின் பொலிவான நெற்றியை கொண்ட முகத்திற்கு மட்டுமே இடம். வேறு யாருக்கும் இடம் இல்லை. அதாவது அவன் பிறரை ஏறெடுத்துக்கூட பார்க்க மாட்டானாம்.

அதுமட்டுமில்லை. தலைவி கண்முன்னே இல்லையென்றாலும் அவள் கண்முன்னே எப்பொழுதும் இருப்பதுப்போன்ற கற்பனையில் இருக்கிறான். அதுமட்டும் இன்றி இந்த கண்கள் தலைவிக்கு மட்டும் தான் சொந்தம். வேறுயாருடைய நிழல் கூட அதன் உள்ளே வருவதற்கு (அனுமதியில்லையாம் / ) இடமில்லையாம்.

பின்னாளில் பாரதியாரோ, “என் கண்ணின் பாவையன்றோ கண்ணம்மா, என்னுயிர் நின்னதன்றோ” என்று கண்ணனைக் காதலியாக பாவித்து, அவனே கண்ணின் பாவையெனவும் கூறியதற்கு முன்னோடிக் கற்பனை வள்ளுவன் செய்தது.

மேலும்: அஷோக் உரை

ஒப்புமை
“மணிவாழ் பாவை நடைகற் றன்ன’ (நற் 184:7)
“பாவை மாய்த்த பனிநீர்” (அகநா 5:21)
“கண்ணிற் கருமணியே மணியாடு பாவாய்” (அப்பர்.ஆவடுதுறை 1)

பரிமேலழகர் உரை
(இடந்தலைப்பாட்டின்கண் தலைமகள் நீக்கத்துச் சொல்லியது.) கருமணியிற் பாவாய் நீ போதாய் - என் கண்ணிற் கருமணியின்கண் உறையும் பாவாய், நீ அங்கு நின்றும் போதருவாயாக; யாம் வீழும் திருநுதற்கு இடம் இல்லை - போதராதிருத்தியாயின் எம்மால் விரும்பப்பட்ட திருநுதலையுடையாட்கு இருக்க இடமில்லையாம். ('யான் காணாது அமையாமையின் இவள் புறத்துப் போகற்பாலளன்றி என் கண்ணுள் இருக்கற்பாலள்; இருக்குங்கால் நின்னோடு ஒருங்கு இருக்க இடம் போதாமையின், நின்னினும் சிறந்த இவட்கு இடத்தைக் கொடுத்து நீ போதுவாயாக' என்பதாம்.).

மணக்குடவர் உரை
என் கண்ணுட் கருமணியகத்து நிற்கும் பாவாய்! நீ அங்கு நின்று போதுவாயாக, எம்மால் விரும்பப்பட்ட அழகிய நுதலினையுடையாட்கு இருத்தற்கிடம் போதாது.

மு.வரதராசனார் உரை
என் கண்ணின் கருமணியில் உள்ள பாவையே நீ போய் விடு, யாம் விரும்புகின்ற இவளுக்கு என் கண்ணில் இருக்க இடம் இல்லையே!.

சாலமன் பாப்பையா உரை
என் கருமணிக்குள் இருக்கும் பாவையே! நீ அதை விட்டுப் போய்விடு; நான் விரும்பும் என் மனைவிக்கு என் கண்ணுக்குள் இருக்க இடம் போதவில்லை.

No comments:

Post a Comment