குறிக்கொண்டு நோக்காமை அல்லால் ஒருகண்

குறள் 1095
குறிக்கொண்டு நோக்காமை அல்லால் ஒருகண்
சிறக்கணித்தாள் போல நகும்
[காமத்துப்பால், களவியல், குறிப்பறிதல்]

பொருள்
குறி - அடையாளம்; இலக்கு; குறியிடம்; நினைத்தஇடம்; நோக்கம்; குறிப்பு; மதக்கொள்கை; முன்ன்றிந்துகூறும்நிமித்தம்; சபை; முறை; காலம்; ஒழுக்கம்; ஆண்பெண்குறி; அடி; இலக்கணம்.

குறிப்பு - அறிகுறி; உட்கருத்து; மனத்தால் உணரப்படுவது; ஒன்பது வகைச் சுவைகளினால் உண்டாகும் மனநிலை; மன ஒருமை; குறிப்புக்குறி; சைகை; கூரியஅறிவு; சுருக்கம்; ஓசை; நிறம் முதலிய பொருளைக்குறிப்பது; வெளிப்படையாக அல்லது பொருளுணர்த்துஞ்சொல்; அடையாளம்; கைக்குறிப்பு; ஏடு; சாதகம்; சிறப்பியல்பு; இலக்கு.

கொண்டு - முதல்; குறித்து; மூன்றாம்வேற்றுமைச்சொல்லுருபு; ஓர்அசைநிலை.

கொள்ளுதல் - எடுத்துக்கொள்ளுதல்; பெறுதல்; விலைக்குவாங்குதல்; உரிமையாகக்கொள்ளுதல்; மணம்செய்துகொள்ளுதல்; கவர்தல்; உள்ளேகொள்ளுதல்; முகத்தல்; கற்றுக்கொள்ளுதல்; கருதுதல்; நன்குமதித்தல்; கொண்டாடுதல்; அங்கீகரித்தல்; மேற்கொள்ளதல்; மனம்பொறுத்தல்; ஒத்தல்; பொருந்துதல்; உடலிற்காயம்படுதல்; எதிர்மறைஏவலொருமைவினையொடுசேர்க்கப்படும்ஓர்அசை.

நோக்குதல் - பார்த்தல்; கருதுதல்; கவனித்தல்; திருத்துதல்; பாதுகாத்தல்; அருளுதல்; ஒத்தல்; ஒப்பிட்டுப்பார்த்தல்; படித்தல்; விரும்புதல்; கண்காணித்தல்.

நோக்காமை - நோக்காது இருத்தல்

அல்லால் - மற்றபட்டி

ஒரு - ஒன்றுஎன்பதன்திரிபு; ஒற்றை; ஒப்பற்ற; ஆடு; அழிஞ்சில்.

கண் - விழி; கண்ணோட்டம்; பீலிக்கண்; கணு; மரக்கணு; தொளை; மூங்கில்முரசடிக்குமிடம்; மூட்டுவாய்; பெருமை; இடம்; ஏழனுருபு; அறிவு; பற்றுக்கோடு; உடம்பு; அசை; உடலூக்கம்.

சிறக்கணி - ciṟakkaṇi   VI. v. i diminish, குறை; 2. cast a side look, கடைக்கண்ணால் பார்; v. t. reduce, சுருக்கு.

சிறக்கணித்தல் - கண்ணைச்சுருக்கிப்பார்த்தல்; கடைக்கண்ணாற்பார்த்தல்; அவமதித்தல்.

சிறக்கணித்தாள் - கண்களைச் சுருக்கிப் பார்த்தாள்

போல - ஓர்உவமவுருபு

நகும் - நகு-தல்
naku-   6 v. [T. K. nagu.] intr.1. To laugh, smile; சிரித்தல் நகுதற்பொருட்டன்று நட்டல் (குறள், 784). 2. To rejoice;மகிழ்தல். மெய்வேல் பறியா நகும் (குறள், 774). 3. Tobloom, as a flower; மலர்தல் நக்க கண்போ னெய்தல் (ஐங்குறு. 151). 4. To open or expand;கட்டவிழ்தல். நக்கலர் துழாய் நாறிணர்க் கண்ணியை(பரிபா. 4, 58). 5. To shine, glitter; பிரகாசித்தல் பொன்னக்கன்ன சடை (தேவா. 644, 1). 6.To hoot, as an owl; to sing, as a bird; புள்ளிசைத்தல். நட்பகலுங் கூகை நகும் (பு. வெ 3, 4).--tr.1. To despise; அவமதித்தல் ஈகென்பவனை நகுவானும் (திரிகடு. 74). 2. To surpass, overcome,defeat; தாழ்த்துதல் மானக்க நோக்கின் மடவார்(சீவக. 1866).

முழுப்பொருள்
தலைவி தலைவனை நேராகப் பார்த்து இவ்வுலகிற்கு அப்பட்டமாய்த் தெரியும் அளவிற்குப் பார்க்கமாட்டாள். அப்படி நேராகப் பார்ப்பது தெரிந்துவிட்டால் குறிப்பு வெளிப்படையாகிவிடுமே. குறிப்பு வெளிப்படையாக இருக்க கூடாதல்லவா?  ஆதலால் அவளுடைய ஒருகண்ணால் (கடைக்கண்ணை) கண்ணைச்  சுருக்கிப் பார்த்து உள்ளுக்குள் மகிழ்வாள். இத்தகைய நுட்பமானக் குறிப்புகளை தலைவன் கவனிக்க வேண்டும். அப்படி இருந்தால் தான் தலைவியை உணர முடியும்.  பெண்ணின் நாணத்தைப் பலவிதமாக கண்டு அனுபவித்தாற் போன்று வள்ளுவன் எழுதிய மற்றுமொரு குறள்

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
(இதுவும் அது.) குறிக்கொண்டு நோக்காமை அல்லால் - நேரே குறிக்கொண்டு நோக்காத் துணையல்ல; ஒருகண் சிறக்கணித்தாள் போல நகும் - ஒரு கண்ணைச் சிறங்கணித்தாள் போல என்னை நோக்கிப் பின் தன்னுள்ளே மகிழா நிற்கும். (சிறக்கணித்தாள் என்பது செய்யுள் விகாரம், சிறங்கணித்தல்: சுருங்குதல். அதுதானும் வெளிப்பட நிகழாமையின், 'போல'என்றான். 'நோக்கி' என்பது சொல்லெச்சம். இனிஇவளை எய்துதல் ஒருதலை என்பது குறிப்பெச்சம்.).

மணக்குடவர் உரை
குறித்துக் கொண்டு நோக்காமை யல்லது ஒருகால் உடம்பட்டாள் போல நகா நின்றாள். அஃதாவது காமக்குறிப்புடையார்போல நகுதல். அது வெளிப்பட நில்லாமையின் போல என்றார். இது தன்குறிப்புத் தோன்றாமல் நகுதல் உடன்படுதலாமென்றது.

மு.வரதராசனார் உரை
என்னை நேராகக் குறித்துப் பார்க்காத அத் தன்மையே அல்லாமல், ஒரு கண்ணைச் சுருக்கினவள் போல் என்னைப் பார்த்து தனக்குள் மகிழ்வாள்.

சாலமன் பாப்பையா உரை
நேரே பார்க்காமல் ஒரு கண்ணை மட்டும் சுருக்கி பார்ப்பவள் போல என்னைப் பார்த்துப் பார்த்துப் பிறகு தனக்குள் தானே மகிழ்வாள்.

No comments:

Post a Comment