அறிவுரு வாராய்ந்த கல்விஇம் மூன்றன்

குறள் 684
அறிவுரு வாராய்ந்த கல்விஇம் மூன்றன்
செறிவுடையான் செல்க வினைக்கு
[பொருட்பால், அமைச்சியல், தூது]

பொருள் 
அறிவு - ஞானம்; புத்தி பொறியுணர்வு; அறியவேண்டியவை; கல்வி ஆன்மா

உரு - வடிவழகு; தெய்வத்திருமேனி; நிறம் அச்சம் அட்டை பலமுறைசொல்லுகை; பருமை தோணி உடல் எலுமிச்சை இசைப்பாடல்; நோய் உருவமுள்ளது; உளியாற்செய்தசிற்பவேலை; தாலிமுதலியவற்றில்கோக்கும்உரு; தன்மை அகலம்

உருவு - உருவம்; வடிவு அழகு அச்சம்

ஆராய்ந்த - ஆராய்தல் - சோதித்தல்; சூழ்தல் தேடுதல் சுருதிசேர்த்தல்

கல்வி - அறிவு; வித்தை; கற்கை; கற்கும்நூல்; பயிற்சி.

இம் மூன்றன் -   இவை மூன்றிலும்

செறிவு நெருக்கம்; மிகுதி; கூட்டம்; உறவு; பொந்து; கலப்பு; உள்ளீடு; தன்னடக்கம்; எல்லைகடவாநிலைமை; நெகிழிசையின்மையாகியசெய்யுட்குணம்.

உடையான் - உடையவன்; உரிமைக்காரன் அரசன் தலைவன் கடவுள்

செல்க - செல்லுதல் - நிகழ்தல்; வீழ்தல்; ஆதல்; பரவுதல்; பயனுறுதல்; நிலைத்திருத்தல்; செலாவணியாதல்; வேண்டியதாதல்; பொருந்துதல்; விரும்பிஏற்றுக்கொள்ளப்படுதல்; அடைதற்குரியதாதல்; கழிதல்; தணிதல்; கெடுதல்; இறத்தல்; கிட்டுதல்; அடைதல்; போதல்.

வினைக்கு - வினை - தொழில்; நல்வினைதீவினைஎனஇருவகைப்பட்டமுன்னைவினை; வினைச்சொல்; செய்தற்குரியது; பரிகாரச்செயல்; முயற்சி; போர்; வஞ்சகம்; தந்திரம்; கருத்து; தொந்தரவு; சீழ்; இரண்டைக்குறிக்கும்குழூஉக்குறி.

முழுப்பொருள் 
ஆழ்ந்த விஸ்தாரமான அறிவு, எல்லோராலும் விரும்பக்கூடிய தோற்றப்பொலிவு(முகமலர்ச்சி), ஆராய்ந்த (கற்க கசடற பெற்ற) கல்வி (அதாவது, எது ஒன்றையும் சுயமாக ஆராய்ந்து அறிந்துக்கொள்ளும் திறன் மற்றும் பயிற்சி) ஆகிய மூன்றிலும் செறிவு உடையவன் தூதிற்கு செல்ல வேண்டும்.

செறிவு உடையவன் என்றால் அறிவு, தோற்றப்பொலிவு, கல்வி ஆகியவற்றில் செறிவு என்ற கருத்தில் மட்டும் அல்லாமல் பிறருடன் தன்னடக்கத்துடன் நெருங்கிப் பழகி தூதருக்கு உண்டான எல்லையைத் தாண்டாமல்  தூதிற்கு சென்று வெற்றிபெறக்கூடியவன் என்று பொருள். (காண்க: செறிவு பொருள்)

பகைவரும் கண்டு வியக்கும் தோற்றப்பொலிவுடையவர்களாக அனுமனும், கிருஷ்ணனும் இருந்ததை இதிகாசங்கள் பலவிடங்களில் சொல்லுகின்றன.

மேலும் அஷோக் உரை 

பரிமேலழகர் உரை
அறிவு - இயற்கையாகிய அறிவும்; உரு - கண்டார் விரும்பும் தோற்றப்பொலிவும்; ஆராய்ந்த கல்வி - பலரோடு பலகாலும் ஆராயப்பட்ட கல்வியும் என; இம்மூன்றன் செறிவு உடையான் - நன்கு மதித்தற்கு ஏதுவாய இம்மூன்றனது கூட்டத்தை உடையான்; வினைக்குச் செல்க-வேற்று வேந்தரிடைத் தூது வினைக்குச் செல்க. (இம்மூன்றும் ஒருவன்பாற் கூடுதல் அரிது ஆகலின், 'செறிவுடையான்'என்றார். இவற்றான் நன்கு மதிப்புடையனாகவே, வினை இனிது முடியும் என்பது கருத்து.).

மணக்குடவர் உரை
அறிவும், வடிவும், தெரிந்த கல்வியுமாகிய இம் மூன்றினது அடக்கமுடையவன் வினைக்குச் செல்க. அறிவு- இயற்கையறிவு.

மு.வரதராசனார் உரை
இயற்கை அறிவு, விரும்பத்தக்கத் தோற்றம், ஆராய்ச்சி உடையக் கல்வி ஆகிய இம் மூன்றின் பொருத்தம் உடையவன் தூது உரைக்கும் தொழிலுக்குச் செல்லலாம்.

சாலமன் பாப்பையா உரை
இயல்பான நல்லறிவு, காண்பவர் விரும்பும் தோற்றம், பலரோடும் பலகாலமும் ஆராய்ந்த கல்வி இம்மூன்றையும் நிறையப் பெற்றுச் சொல்ல வேண்டியதைத் தானே எண்ணிச் சொல்லும் திறம் படைத்தவன் தூதர் பணிக்குச் செல்க

No comments:

Post a Comment