மடிமடிக் கொண்டொழுகும் பேதை

குறள் 603
மடிமடிக் கொண்டொழுகும் பேதை பிறந்த
குடிமடியும் தன்னினும் முந்து
[பொருட்பால், அரசியல், மடியின்மை]

பொருள்
மடி - மடங்குகை; வயிற்றுமடிப்பு; வயிறு; அரை; மடித்ததொடையின்மேற்பாகம்; ஆடை; தாள்முதலியவற்றின்மடிப்பு; பைபோன்றமுந்திச்சுருக்கு; வலைவகை; பசுமுதலியவற்றின்முலையிடம்; அடக்கம்; தனிமை; சோம்பல்; சோம்பலுடையவன்; நோய்; மீன்வலையோடுசேர்ந்தபெரும்பை; கேடு; பகை; பொய்; தீநாற்றம்; ஆடைவகை; தீட்டில்லாநிலை; இரட்டைக்கட்டுமரம்; சோறு; தாழை; தாழைவிழுது; மடங்கு.

மடிக் - மடங்குகை; வயிற்றுமடிப்பு; வயிறு; அரை; மடித்ததொடையின்மேற்பாகம்; ஆடை; தாள்முதலியவற்றின்மடிப்பு; பைபோன்றமுந்திச்சுருக்கு; வலைவகை; பசுமுதலியவற்றின்முலையிடம்; அடக்கம்; தனிமை; சோம்பல்; சோம்பலுடையவன்; நோய்; மீன்வலையோடுசேர்ந்தபெரும்பை; கேடு; பகை; பொய்; தீநாற்றம்; ஆடைவகை; தீட்டில்லாநிலை; இரட்டைக்கட்டுமரம்; சோறு; தாழை; தாழைவிழுது; மடங்கு.

கொண்டு - முதல்; குறித்து; மூன்றாம்வேற்றுமைச்சொல்லுருபு; ஓர்அசைநிலை.

ஒழுகும் - ஒழுகுதல் - நீர்பாய்தல்; நீர்ப்பொருள்சொட்டுதல்; ஓடுதல்; பரத்தல்; ஒழுங்குபடுதல்; நடத்தல்; நீளுதல்; வளர்தல்; போதல்; பெருகியோடுதல்.

பேதை - அறிவிலி; பெண்; பாலைநிலப்பெண்; ஐந்துவயதுமுதல்ஏழுவயதுவரையுள்ளபருவத்துப்பெண்; வறிஞன்; அலி; கள்.

பிறந்த - பிறவி; பிறப்பு; பாவம்; துன்பம்; பிறந்தகம்; இயல்பு.

குடி - பருகுகை; மதுபானம்; மதுவுண்டமயக்கம்; புருவம்; குடியானவன்; குடியிருப்போன்; ஆட்சிக்குட்பட்டகுடிகள்; குடும்பம்; குலம்; வீடு; ஊர்; வாழிடம்.

மடியும் - மடிதல் - மடங்குதல்; நுனிமழுங்குதல்; தலைசாய்தல்; வீழ்தல்; வாடுதல்; சுருளுதல்; முயற்சிஅறுதல்; தூங்குதல்; சுருங்குதல்; ஊக்கங்குறைதல்; அழிதல்; சாதல்; தானியங்கேடுறுதல்; திரண்டுசெல்லுதல்; கொப்புளம்உடைதல்; மறத்தல்.

தன் - தான்என்னும்சொல்வேற்றுமையுருபைஏற்குமிடத்துப்பெறும்திரிபு.
இனும் - இன்னும் - இவ்வளவுகாலம்சென்றும்; மறுபடியும் மேலும் அன்றியும்

முந்து - முற்காலம்; ஆதி; முன்பு; வெண்ணாரை.

முழுப்பொருள்
சோம்பல் எனப்படுவது ஒரு நோய். அது அழிவையே தரும். அத்தகைய சோம்பலை தன்னுள்ளே வைத்துக்கொண்டு வாழ்க்கையை கடக்கும் ஒருவன் பேதை. அறிவில்லாதவன். பொறுப்பற்றவன். இந்த சோம்பலினால் அனைத்தையும் (தன்நம்பிக்கை, செல்வம், உறவுகள், உடல் ஆரோக்கியம்,  உற்சாகம், சான்றோர் உறவுகள், நண்பர்கள்) இழப்பான். இவனுடைய சோம்பலினால்/இவனால் இவன் பிறந்த குடும்பமானது இவனுக்கு முன்பே அழிந்துவிடும். அதவாது இவனால் தன் குடும்பம் அழிந்துக்கொண்டு இருக்கிறது என்று கூட உணர்ந்துக்கொள்ள முடியாத அளவுக்கு அவன் சோம்பித்திரிகிறான். சோம்பல் அவ்வளவு கொடியது. ஆதலால் சோம்பலை விட்டுவிடுங்கள் என்று சொல்லாமல் சொல்கிறார் திருவள்ளுவர்.

மேலும்: அஷோக் உரை

செயல்கள் உடலால் மட்டும் ஆற்றப்படுவதில்லை. மூடிய பேழைக்குள் வைரம் ஒளிவிளையாடிக்கொண்டிருக்கிறது. உடற்குடத்திற்குள் இதயம் புரவியெனப் பாய்ந்து செல்கிறது. செயலை அஞ்சி செயலின்மையை விரும்பி ஐம்புலன்களை அடக்கி உள்ளத்தால் அனைத்தையும் இயற்றுபவனை பொய்யொழுக்கம் கொண்டவன் என்றே சொல்லவேண்டும். நிழல்கண்டு காமம் கொள்ளினும் உவகையும் துயரும் நிகரே.

கவிஞர் விக்ரமாதித்யன் - இன் ஒரு கவிதை
##வியாழக்கிழமையைத் தொலைத்தவன் 
இந்த வாரத்தில் 
வியாழக்கிழமையை தொலைத்துவிட்டான் அமர் போன வாரத்தில் 
இப்படித்தான் 
செவ்வாய்க்கிழமையைக் கெட்டுப்போக்கிவிட்டான் 
அதற்கு(ம்) முந்தைய வாரம் 
ஏதோ ஒரு நாள் (ஞாபகமில்லை)
எத்தனையோ நாள்களை 
இதுபோலத் தொலைத்திருக்கிறான்தான்

வியாழக்கிழமையைத் தொலைத்துவிட்டு
வெள்ளிக்கிழமையில் ஈடுகட்டமுடியாது
வேறு எந்த நாளிலும்கூட 
சரிசெய்ய இயலாது 
அன்று எவ்வளவு வேலைகள் 
நின்றுவிட்டன 
நித்ய பூஜை 
தவறிப்போயிற்று 
தென்முகக் கடவுளுக்கு மந்திரம் சொல்வது விடுபட்டுப்போயிற்று 
ஸ்ரீசோட்டாணிக்கரை பகவதித்தாயை பட்டினிபோடும்படி ஆயிற்று 
பல் தேய்க்கவில்லை 
குளிக்கவில்லை 
சாப்பிடவில்லை
தபால் பார்க்கவில்லை 
நல்லதண்ணீர் பிடித்துக் கொடுக்கவில்லை 
அடித்துப்போட்ட மாதிரி தூங்கியிருக்கிறான் 
அந்திப் பொழுதை 
அதிகாலையென மயங்கியிருக்கிறான் 

வியாழக்கிழமை நிச்சயம்
வருத்தப்பட்டிருக்கும் 
இன்றைக்காவது தெளிந்துவந்துவிட்டானே
என்று வெள்ளிக்கிழமை சந்தோஷப்பட்டிருக்கும் 
வரும் வாரம் 
என்ன கிழமையைத் தொலைக்கப்போகிறானோ 
தொலைத்தநாள்களிடம் மன்னிப்புக்கேட்டும் 
தீரவில்லை அமர்க்கு
நாள்களைத் தொலைப்பவனை 
யார்தான் காப்பாற்றுவது
--விக்ரமாதித்யன் 


பரிமேலழகர் உரை
மடி மடிக்கொண்டு ஒழுகும் பேதை பிறந்த குடி - விடத்தகுவதாய மடியைத் தன்னுள்ளே கொண்டு ஒழுகும் அறிவில்லாதான் பிறந்த குடி; தன்னினும் முந்து மடியும் - அவன் தன்னினும் முந்துற அழியும்.
(அழிவு தருவதனை அகத்தே கொண்டு ஒழுகுதலின் 'பேதை' என்றும்; அவனால் புறம் தரப்படுவதாகலின் 'குடி தன்னினும் முந்துற அழியும'¢ என்றும் கூறினார். ஆக்கத்திற் பிற்படினும் அழிவில் முற்படும் என்பதாம்.).

மணக்குடவர் உரை
நெஞ்சத்து மடியினாலே வினையின்கண் மடித்தலைச் செய்து ஒழுகாநின்ற அறிவிலி பிறந்தகுடி தனக்கு முன்பே கெடும்.

சோம்புடையார்க்கு உளதாகுங் குற்றம் என்னையென்றார்க்கு இது கூறப்பட்டது.

மு.வரதராசனார் உரை
அழிக்கும் இயல்புடைய சோம்பலைத் தன்னிடம் கொண்டு நடக்கும் அறிவவில்லாதவன் பிறந்த குடி அவனுக்கு முன் அழிந்துவிடும்.

சாலமன் பாப்பையா உரை
விட்டுவிட வேண்டிய சோம்பலைத் தனக்குள்ளே கொண்டு வாழும் அறிவற்றவன் பிறந்த குடும்பம் அவனுக்கும் முன்பே அழிந்துவிடும்.

No comments:

Post a Comment