உறாஅ தவர்க்கண்ட கண்ணும்

குறள் 1292
உறாஅ தவர்க்கண்ட கண்ணும் அவரைச்
செறாஅரெனச் சேறியென் நெஞ்சு
[காமத்துப்பால், கற்பியல், நெஞ்சொடுபுலத்தல்]

பொருள்
உறாஅ  - உறாவொற்றி - urā-v-oṟṟi   n. id. +. ஆneg. +. Irredeemable mortgage; மீளாவொற்றி. பணத்துக்கு உறாவொற்றியாக வேண்டினநிலம்

உறாஅதவர்க் - பணத்துக்காக வேண்டி பிரிந்து சென்றவரை

கண்ட - காணுதல் - அறிதல்; காண்டல்; சந்தித்தல்; செய்தல்; வணங்குதல்.

கண்ணும் - கண் - விழி; கண்ணோட்டம்; பீலிக்கண்; கணு; மரக்கணு; தொளை; மூங்கில்முரசடிக்குமிடம்; மூட்டுவாய்; பெருமை; இடம்; ஏழனுருபு; அறிவு; பற்றுக்கோடு; உடம்பு; அசை; உடலூக்கம்.

அவரைச் - அவர் - அவன், அவள்என்பதன்பன்மைச்சொல்; ஒருவரைக்குறிக்கும்பன்மைச்சொல்.

செற்றல் - ceṟṟl   v. noun. Hating, detesting, வெறுப்பு. 2. Killing, கொல்லல். 3. Narrow ing, நெருக்கல்; [ex செற்று, v.] (p.)

செறாஅர் - வெறுக்க மாட்டார்

எனச் - என்னுடைய; என்ன; என்று; ஓர்உவமவுருபு.

சேறி - செல்கிறது

என் - என்னுடைய

நெஞ்சு - மனம்; இதயம்; மார்பு; நடு; திண்ணக்கம்; தொண்டை; துணிவு.

முழுப்பொருள்
தன்னை விட பணம் முக்கியம் என்று எண்ணி தன்னை பிரிந்து சென்ற காதலனை பற்றிய உண்மை அறிந்துள்ளது என் உள்ளம். காதலனுக்கு நம்மிடத்தில் அன்பு இல்லை என்று அறிந்த பின்னும் அவரை காண செல்கிறது என் நெஞ்சு ஏனெனில் காதலர் அவர் என்னை வெறுக்கமாட்டார் என்று நினைக்கிறது என் நெஞ்சம். காதலன் தன்னை வெறுக்கக்கூடாது என்பதை சொல்லாமல் சொல்லும் குறள்.

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
(இதுவும் அது.) என் நெஞ்சு - என் நெஞ்சே; உறாதவர்க்கண்ட கண்ணும் - மேலும் நம்மாட்டு அன்புடையராகாதவரை உள்ளவாறு அறிந்த இடத்தும்; செறார் என அவரைச் சேறி - நாம் சென்றால் வெகுளார் என்பது பற்றி நீ அவர் மாட்டுச் செல்லாநின்றாய், இப்பெற்றியது மேலும் ஓர் அறியாமையுண்டோ? ('அவரை' என்பது வேற்றுமை மயக்கம் 'பழங்கண்ணோட்டம்பற்றி வெகுளார் என்பது கந்தாகச் சென்றாய், நீ கருதியது முடியுமோ'? என்பதாம்.).

மணக்குடவர் உரை
என்னெஞ்சே! நீ அன்புறாதாரைக் கண்ட விடத்தும் செற்றம் நீங்குவாரென அவர்மாட்டுச் செல்லாநின்றாய். இது தலைமகள் தலைமகன்மாட்டுச் செல்லக் கருதிய நெஞ்சோடு புலந்து கூறியது

மு.வரதராசனார் உரை
என் நெஞசே! நம்மேல் அன்பு கொள்ளாத காதலரைக் கண்டபோதும், அவர் வெறுக்கமாட்டார் என்று எண்ணி அவரிடம் செல்கின்றாயே!.

சாலமன் பாப்பையா உரை
என் நெஞ்சே! என்மீது அன்பு இல்லாதவரை உள்ளபடியே நீ அறிந்திருந்தும் நாம் போனால் அவர் கோபப்படமாட்டார் என்று எண்ணி நீ அவரிடமே செல்லுகின்றாய்!.

No comments:

Post a Comment