இலங்கிழாய் இன்று மறப்பின்என்

குறள் 1262
இலங்கிழாய் இன்று மறப்பின்என் தோள்மேல்
கலங்கழியும் காரிகை நீத்து
[காமத்துப்பால், கற்பியல், அவர்வயின்விதும்பல்]

பொருள்
இலங்கு - ilangku   III. v. i. shine, glitter, be bright, ஒளிசெய்.
இழை - நூல்; நூலிழை அணிகலன் கையிற்கட்டுங்காப்பு.
இலங்குதல் - ஒளிசெய்தல்; விளக்கமாகத்தெரிதல்.

இலங்கிழாய் - ஒளிமின்னும் அழகிய அணிகலன் அணிந்த தோழியே

இன்று - இலை; இந்தநாள்; ஓரசைச்சொல்.

மறத்தல் - அயர்த்தல்; அசட்டைபண்ணல்; ஒழிதல்; நினைவின்றிப்போதல்; பொச்சாப்பு.

மறப்பின் - மறந்தால்

என் - என்ன; வினாவினைக்குறிப்பு; ஐயக்கிளவி; இகழ்ச்சிக்குறிப்பு; 'எது'அல்லது'எதை'எனப்பொருள்படும்இடைச்சொல்; தன்மைஒருமைச்சொல்; யான்என்பதுவேற்றுமைப்பொருளில்அடையும்திரிபு; ஓர்அசைச்சொல்.
தோள்மேல்

கலம் - உண்கலம்; பாண்டம்; குப்பி; கப்பல்; இரேவதி; அணிகலன்; யாழ்; கலப்பை; ஆயுதம்; ஓலைப்பாத்திரம்; ஒருமுகத்தலளவை; பந்தி; வில்லங்கம்.

கழியும் - கழிதல் -மிகுதல்; கடந்துபோதல்; நடத்தல்; குறைபடுதல்; அழிதல்; ஒழிதல்; சாதல்; முடிவடைதல்; வருந்துதல்; மலம்முதலியனவெளிப்படுதல்; அச்சங்கொள்ளுதல்.

காரிகை - பெண்; அழகு; அலங்காரம்; கட்டளைக்கலித்துறை; ஓர்யாப்பிலக்கணநூல்; ஒருநிறை; வாதனை.

நீத்து - நீத்தல் - பிரிதல்; துறத்தல்; தள்ளுதல்; இழித்தல்; வெறுத்தல்; விடுதல்; நீங்குதல்.

முழுப்பொருள்
தலைவனை பிரிந்த தலைவி தனக்குத்தானே கூறிக்கொள்கிறாள்: ஒளிமின்னும் அழகிய அணிகலன் அணிந்தவளே, இன்று நீ உன் காதலரை மறந்தால் பின்பு உன் தோள்மேல் உள்ள அணிகலங்கள் நீங்கி உன் அழகும் நீங்கிவிடும். தலைவி தனக்கு தான் சொல்லிக்கொள்கிறாள் தலைவியே தலைவனை நினைத்துக்கொண்டு இருப்பதே உனக்கு அழகு என்று. தலைவனை மறந்தால் அழகெல்லாம் நீங்கிவிடும்.

பி.கு: தலைவிக்கு தலைவனின் நினைப்பு இல்லை என்றால் அவள் அணிகலனும் அவளுடன் இருக்காதாம். தலைவிக்கு தலைவன் நினைப்பு இல்லை என்றால் அவளுக்கு அழகும் இல்லையாம். அப்படியா ? தலைவனை மறந்துவிட்டால் அவள் அழகில்லாதவளாகிவிடுவாளா என்ன ?

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
(ஆற்றாமை மிகுதலின் இடையின்றி நினைக்கற்பாலை யல்லை; சிறிது மறக்கல் வேண்டும், என்ற தோழிக்குச் சொல்லியது.) இலங்கு இழாய் - விளங்காநின்ற இழையினை யுடையாய்; இன்று மறப்பின் - காதலரை இன்று யான் மறப்பேனாயின்; மேல் காரிகை நீத்து என்தோள் கலங்கழியும் - மேலும் காரிகை என்னை நீப்ப என் தோள்கள் வளை கழல்வனவாம். ('இலங்கிழாய்' என்பது 'இதற்கு நீ யாதும் பரியலை' என்னும் குறிப்பிற்று. இன்று - யான் இறந்துபடுகின்ற இன்று. மேலும் - மறுபிறப்பினும். எச்ச உம்மை விகாரத்தால் தொக்கது. 'நீப்ப' என்பது , 'நீத்து' எனத் திரிந்து நின்றது. கழியும் என்னும் இடத்து நிகழ் பொருளின் தொழில் இடத்தின்மேல் நின்றது. 'இவ்வெல்லைக்கண் நினைந்தால் மறுமைக்கண் அவரை எய்தி இன்புறலாம், அதனான் மறக்கற்பாலேன் அல்லேன'்,என்பதாம்.).

மணக்குடவர் உரை
இலங்கிய இழையையுடையவளே! யான் இன்று அவரை மறப்பேனாயின் பண்டை மெல்லிய என்னுடைய தோள்கள் தம்மழகினை நீக்கி வளை முதலான அணிகலங்களையும் கழலவிடும். இலங்கிழாய் என்றவதனால் வருத்தமில்லாதவளே என்று விளித்தாளென்பது கொள்ளப்படும்.

மு.வரதராசனார் உரை
தோழி! காதலரின் பிரிவால்துன்புற்று வருந்துகின்ற இன்றும் அவரை மறந்து விட்டால், அழகு கெட்டு என் தோள் மேல் அணிந்துள்ள அணிகள் கழலுமாறு நேரும்.

சாலமன் பாப்பையா உரை
ஒளிரும் நகை அணிந்தவனே! என் காதலரை நான் இன்று மறந்தால் என்னைவிட்டு அழகு மிகுதியும் நீங்க, என் தோளும் வளையல்களை இழக்கும்.

No comments:

Post a Comment