கொல்லா நலத்தது நோன்மை பிறர்தீமை

குறள் 984
கொல்லா நலத்தது நோன்மை பிறர்தீமை
சொல்லா நலத்தது சால்பு
[பொருட்பால், குடியியல், சான்றாண்மை]

பொருள்
கொலை - உயிர்வதை, உயிரைஉடம்பினின்றுநீக்கல்.
கொல்லா - எந்தஒரு நோக்கத்திற்காகவும் அல்லது தன்னுடைய சுயநலனுக்காகவும் பிற உயிர்களை மனிதர்களை கொலை செய்யாது இருத்தல் 

நலத்தது - நலத்தல் , நலமாதல்; விரும்புதல்.

நோன்மை - பொறுமை; வலிமை; பெருந்தன்மை; தவம்.

பிறர் - அயலார்

தீமை - கொடுமை; குற்றம்; பாவச்செயல்; குறும்பு; இறப்பு; முதலியன.

சொல்லா - சொல்லாமல் 

நலத்தது - நலத்தல் , நலமாதல்; விரும்புதல்.,

சால்பு - மேன்மை; நற்குணம்; சான்றாண்மை; தன்மை; மனவமைதி; கல்வி.

முழுப்பொருள்
பிறரை கொல்லுவது (கொலை செய்வது) என்பது தீயச்செயல். அது எவ்விதத்திலும் பயனளிக்காது. ஆதலால் பிறரை கொல்லாது இருப்பதே நன்மை பயக்கும். பிறரை கொல்லாமல் உயிருடன் விடுவதற்கு பொறுமையும் பெருந்தன்மையும் வேண்டும். அதுவே வலிமை ஆகும். கொல்வது வலிமைக்கு அறிகுறி அல்ல. ஆதலால் வலிமை, பெருந்தன்மை, தவம்(நோன்மை) என்பது ஓருயிரையும் கொல்லாத அறவாழ்க்கையாகும்.  

அதுப்போல பிறர் செய்த தீமைகளை கொடுமைகளை குற்றங்களை பிறரிடம் சொல்லாது இருப்பது அவர்களிடமே சொல்லிக்காட்டாமல் இருப்பது நன்மை அளிக்கும். அதுவே சான்றோரின் பண்பாகும். 

புறங்குறாமை பற்றிப்பேசிய வள்ளுவர் இங்கே ஏன் அதை  போன்றே சொல்ல வேண்டும்? 1. இங்கு சான்றோரின் பண்பாக அதை நெறிப்படுத்துகிறார். 2. இங்கே தீமைகளை சொல்லாதே என்கிறார். பிறரிடம் என்றோ சம்மதப்பட்டவரிடம் நேரடியாகவோகூட சொல்லாதே. ஏனெனில் சிலர் மற்றவர்கள் செய்த குற்றத்தை குத்தி காண்பித்து அவர்களை துன்புறுத்துவார்கள். அது தவறு. பிறரிடம் சொல்வதும் தவறு. அது சான்றோர் பண்பு ஆகாது. அப்படி பிறரிடம் சொல்வதானால் அல்லது குத்தி காண்பிப்பதனால் ஒரு பயனும் இல்லை. அவர்கள் சினத்தையே சம்பாதிப்பார்கள். அவர்கள் மனம்திருந்த மாட்டார்கள். 

அப்படி என்றால் ஒரு அலுவகத்தில் குற்றங்களை சுட்டிகாட்டாமல் இருக்கலாமா?  பல பேர் சம்மந்தபட்ட ஒரு நிறுவனத்தில், ஒரு செயலில் குற்றங்களை ஆராய்ந்து சொல்வதும் மிக அவசியம். இல்லையெனில் அதனால் ஏற்படும் விளைவுகள் மிக அதிகம். அதனால் தனி நபர்மீது தாக்குதல் செய்யாமல் பிரச்சனைகளையும்  அதனை சரி செய்யாவிட்டால் வரக்கூடிய விளைவுகளையும் மட்டும் நயமாக எடுத்துக்கூறவும். 

கொன்றை வேந்தனில், “நோன்பென்பது கொன்று தின்னாமை” என்பார் ஔவையார்.


மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
நோன்மை கொல்லா நலத்தது - பிற அறங்களும் வேண்டுமாயினும், தவம் ஓர் உயிரையும் கொல்லாத அறத்தின் கண்ணதாம்; சால்பு பிறர் தீமை சொல்லா நலத்தது - அது போலப் பிற குணங்களும் வேண்டுமாயினும் சால்பு பிறர் குற்றத்தைச் சொல்லாத குணத்தின் கண்ணதாம். (நலம் என்னும் ஆகுபெயர்ப் பொருள் இரண்டனையும், தலைமை தோன்ற, இவ்விரண்டற்கும் அதிகாரமாக்கிக் கூறினார். தவத்திற்குக் கொல்லா வரம் சிறந்தாற்போலச் சால்பிற்குப் பிறர் குற்றம் சொல்லாக் குணம் சிறந்தது என்பதாம்.).

மணக்குடவர் உரை
தவத்துக்கு உறுப்பான சீலங்கள் பல உண்டாயினும் கொல்லாத நலத்தையுடையது தவம். அதுபோலச் சாண்றாண்மைக்கு உறுப்பான நற்குணங்கள் பல உண்டாயினும் பிறர் பழியைச் சொல்லாத நலத்தையுடையது சால்பு.

மு.வரதராசனார் உரை
தவம் ஓர் உயிரையும் கொல்லாத அறத்தை அடிப்படையாகக் கொண்டது, சால்பு பிறருடையத் தீமையை எடுத்துச் சொல்லாத நற்பண்பை அடிப்படையாகக் கொண்டது.

சாலமன் பாப்பையா உரை
பிற உயிர்களைக் கொல்லாதிருப்பது தனத்திற்கு அழகு; பிறர் குறைகளைப் பேசாதிருப்பது சான்றாண்மைக்கு அழகு.

No comments:

Post a Comment