அன்பின் விழையார் பொருள்விழையும்

குறள் 911
அன்பின் விழையார் பொருள்விழையும் ஆய்தொடியார்
இன்சொல் இழுக்குத் தரும்
[பொருட்பால், நட்பியல், வரைவின்மகளிர்]

பொருள்

அன்பின் - அன்பு -  தொடர்புடையோர் மாட்டு உண்டாகும்பற்று; நேயம் அருள் பக்தி

விழைதல் - மிகவிரும்புதல்; மதித்தல்; நெருங்கிப்பழகுதல்.

விழையார் - விழையாதவர், விரும்பாதவர் 

பொருள் - சொற்பொருள்; செய்தி; உண்மைக்கருத்து; செய்கை; தத்துவம்; மெய்ம்மை; நன்குமதிக்கப்படுவது; அறிவு; கொள்கை; அறம்; பயன்; வீடுபேறு; கடவுள்; பலபண்டம்; பொன்; மகன்; தந்திரம்; முலை; உவமேயம்; அருத்தாபத்தி; அகமும்புறமுமாகியதிணைப்பொருள்கள்; அர்த்தசாத்திரம்; தலைமை.

விழையும் - விரும்புகின்றனர் 

ஆய் - அழகு; நுண்மை சிறுமை மென்மை வருத்தம் இடைச்சாதி; தாய் கடைவள்ளல்களுள்ஒருவன்; மலம் பொன் அருவருப்புக்குறிப்பு; முன்னிலைஒருமைவினைமுற்றுவிகுதி; ஏவலொருமைவிகுதி; ஆக ஒருவிளியுருபு

தொடி - வளைவு; கைவளை; தோள்வளை; வீரவளை; சுற்றுவட்டம்; பூண்.

ஆய்தொடி - அழகிய வளையல் 
ஆய்தொடியார் - அழகிய வளையலை அணியும் பெண் மகளீர் 

இன் - இனிய; ஐந்தாம்வேற்றுமைஉருபு; சாரியை இறந்தகாலஇடைநிலை.

சொல் - மொழி; பேச்சு; பழமொழி; உறுதிமொழி; புகழ்; மந்திரம்; சாபம்; கட்டளை; புத்திமதி; பெயர்ச்சொல்; வினைச்சொல்; இடைச்சொல், உரிச்சொல்என்னும்நால்வகைமொழிகள்; தமிழ்மொழியில்உள்ளஇயற்சொல், திரிசொல், திசைச்சொல், வடசொல்எனநால்வகைப்பட்டமொழிகள்; நாடகவரங்கில்பேசப்படும்உட்சொல், புறச்சொல்; ஆகாசச்சொல்என்பன; சத்தம்; நாமகள்; பேசச்செய்வதானகள்; நெல்.

இழுக்குத்  - குற்றம்; பொல்லாங்கு நிந்தை தாழ்வு மறதி வழுக்கு தவறு

தரும் - கொடுக்கும் 

முழுப்பொருள்
மனதால் அன்பையும் உறவையும் விரும்பாது நம்மிடம் இருக்கும் பொருளையும் செல்வத்தையும் மட்டுமே விரும்பி பழகக்கூடிய  அழகிய விலைமாதுக்களின் (பெண்கள்) இனிய சொற்கள் நமக்கு துன்பத்தையே தரும். பொருள் நம்மிடம் இருந்து சென்றபின் நம்மிடம் இருந்தும் இந்த பெண்கள் நம்மை விட்டு விலகிவிடுவார்கள். இவர்களின் சொற்கள் எல்லாம் மற்றவரிடம் இருக்கும் பணத்திற்கும் பொருளுக்கும் தான். இவர்களின் இனிமையான சொற்களில் மயங்கி இருந்தால் நாம் நம் பொருளை இழப்போம், உடல் நலத்தை இழப்போம், நாம் ஆற்ற வேண்டிய கடமையில் இருந்து விலகுவோம், நம்மை இவ்வுலகம் வெட்கச்செய்யும், அதனால் நமக்கும் மனவருத்தம் ஏற்பட்டும் கவலை உண்டாகும். ஆகா மொத்தம் நமக்கு துன்பமே. விலைமாதுக்களுடன் உறவு தீதே. 


புறநானூற்று வரிகள், “தீதில் நெஞ்சத்துக் காதல் கொள்ளாப் பல்லிருங் கூந்தல் மகளிர் ஒல்லா முயக்கிடைக் குழைகஎன் தாரே” என்கிறது வரைவில் மகளிரை.

ஏறக்குறைய சமகால நீதி நூலான நாலடியாரும் பலவாறு இவர்களது இயல்பைக் கூறுகிறது. அது, 
“அவரன்பும் வாரி அறவே அறும்” என்றும், 

“அவரன்பும் கையற்ற போதே அறும்” என்றும், 

அங்கோட் டகலல்கல் ஆயிழையாள் நம்மோடு 
செங்கோடு பாய்துமே என்றாள்மன் -செங்கோட்டின் 
மேற்காணம் இன்மையான் மேவா தொழிந்தாளே 
காற்கால்நோய் காட்டிக் கலுழ்ந்து” என்றும்

கொடுப்பது ஒன்றில்லாரைக் கொய் தளிரன்னார் 
விடுப்பர் தங்கையால் தொழுது” என்றும் 

”ஆணமில் நெஞ்சத்து அணிநீலக் கண்ணார்க்குக்
காணமில் லாதார் கடுவனையர்” என்றும் கூறுகிறது.


மணிமேகலை இவ்வாறு கூறுகிறது
“நறுந்தா துண்டு நயனில் காலை
வறும்பூத் துறக்கும் வண்டு போல்குவம்”

“வண்டிற் றுறக்கும் கொண்டி மகளிரை” 

“பருகு வாரிற் புல்லிப் பயங்கள் மாறத் துறக்கும்
முருகு விம்மு குழலார்” (சீவக 1415)

“கள்ளுறு செவ்வாய் கணிகைகாண் கைகேயி
உள்ளுறு காத லிலள்போலென் றுள்ளழிந்தார்” (கம்ப. நகர்நீங்கு. 109)


மேலும்: அஷோக் உரை


பரிமேலழகர் உரை
அன்பின் விழையார் பொருள் விழையும் ஆய் தொடியார் - ஒருவனை அன்புபற்றி விழையாது பொருள்பற்றி விழையும் மகளிர்; இன்சொல் இழுக்குத் தரும் - அது கையுறும் துணையும் தாம் அன்பு பற்றி விழைந்தாராகச் சொல்லும் இனிய சொல் அவனுக்குப் பின் இன்னாமையைப் பயக்கும். (பொருள் என்புழி 'இன்' விகாரத்தால் தொக்கது. ஆய்ந்த தொடியினையுடையார் என்றதனாலும், இனிய சொல் என்றதனாலும், அவர் கருவி கூறப்பட்டது. அச்சொல் அப்பொழுதைக்கு இனிதுபோன்று பின் வறுமை பயத்தலின் அது கொள்ளற்க என்பதாம்.).

மணக்குடவர் உரை
அன்பால் கலத்தலின்றிப் பொருளால் கலக்கும் ஆய்தொடியார் சொல்லும் இன்சொல், பின்பு கேட்டினைத் தரும்.

மு.வரதராசனார் உரை
அன் பினால் விரும்பாமல் பொருள் காரணமாக விரும்புகின்ற பொது மகளிர் பேசுகின்ற இனிய சொல், ஒருவனுக்கு துன்பத்தைக் கொடுக்கும்.

சாலமன் பாப்பையா உரை
அன்பால் நம்மை விரும்பாது, பொருள் பெறவே விரும்பும் பாலியல் தொழிலாளரின் இனிய சொற்கள் துன்பமே தரும்.

No comments:

Post a Comment