அறிவிலான் நெஞ்சுவந்து ஈதல்

குறள் 842
அறிவிலான் நெஞ்சுவந்து ஈதல் பிறிதியாதும்
இல்லை பெறுவான் தவம்
[பொருட்பால், நட்பியல், புல்லறிவாண்மை]

பொருள்

புல்லறிவாண்மை - அறிவின்மை

அறிவு - ஞானம்; புத்தி பொறியுணர்வு; அறியவேண்டியவை; கல்வி ஆன்மா

இலான் - இல்லாதவன்

நெஞ்சு - மனம்; இதயம்; மார்பு; நடு; திண்ணக்கம்; தொண்டை; துணிவு.

உவந்து - உவத்தல் - மகிழ்தல்; விரும்புதல்; பிரியமாதல்; அன்புசெய்தல்

ஈதல் - கொடுத்தல்; வறியவருக்குத்தருதல்; சொரிதல் படிப்பித்தல்

பிறிது - வேறானது; மற்றது

யாதும் - Anything and everything; anything; எதுவும்.

இல்லை -உண்டுஎன்பதன்எதிர்மறை; இன்மைப்பொருளைஉணர்த்திஐம்பால்மூவிடத்திலும்வரும்ஒருகுறிப்புவினைமுற்று; சாதலைஉணர்த்திஐம்பால்மூவிடத்திலும்வரும்ஒருகுறிப்புவினைமுற்று.

பெறுவான் - பெறுதல் - அடைதல்; பிள்ளைபெறுதல்; பிறப்பித்தல்; அறிதல்; விலைத்தகுதியுடையதாதல்.

தவம் - பற்றுநீங்கியவழிபாடு; புண்ணியம்; இல்லறம்; கற்பு; தோத்திரம்; தவத்தைப்பற்றிக்கூறும்கலம்பகஉறுப்பு; வெப்பம்; காட்டுத்தீ.

முழுப்பொருள்
அறிவில்லாதவன் கற்காதவன் மனம் மகிழ்ந்து விரும்பி மற்ற ஒருவனுக்கு அளிக்கும் பொருளோ அல்லது உதவியோ அல்லது உணவோ எதுவாக ஆயினும் அதற்கு காரணம் அவன் அல்லவே அல்ல. அதற்கு காரணம் பெறுகின்றவன் செய்த புண்ணியம் அல்லது தவம்.

இது அறிவில்லாதவர்களை ஏளனம் செய்வது போல தோன்றும் குறள். இதனை மற்றொரு மாதிரியும் பார்க்கலாம். அதாவது பிறருக்கு உதவி செய்யும் பொழுது அது தன்னால் என்று நினைத்தால் அது அறிவிலித்தனம். ஏனெனில் அது அவ்வுதவியை பெறுகின்றவரின் புண்ணியத்தினால் ஆன செயல். ஈதவர் வெறும் கருவி மட்டுமே. அத்தகைய பணிவு வேண்டும் அறிவுடையோருக்கு அப்படி இல்லையென்றால் அது அறிவின்மையே.

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
அறிவிலான் நெஞ்சு உவந்து ஈதல் - புல்லறிவுடையான் ஒருவனுக்கு மனம் உவந்து ஒன்று கொடுத்தல் கூடிற்றாயின்; பெறுவான் தவம் பிறிது யாதும் இல்லை - அதற்குக் காரணம் பெறுகின்றவன் நல்வினையே, வேறொன்றும் இல்லை. (ஒரோ வழி நெஞ்சு உவந்து ஈதல் கூடலின் 'புல்லறிவாளரும் நல்வினை செய்ப' என்பார்க்குப் 'பெறுவான் வீழ் பொருள் எய்தியான் போல்வதல்லது, இம்மை நோக்கியாக மறுமை நோக்கியாக ஈகின்றார் அல்லர்' எனக் கூறியவாறு. கூடிற்றாயின், அதற்குக் காரணம் என்னும் சொற்கள் அவாய் நிலையான் வந்தன. இதனான், அஃதுடையார் தம்மாட்டு நல்லன செய்தலறியாமை கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
அறிவில்லாதான் அரிதாக எண்ணின மறைப் பொருளைச் சோரவிடுவன்; அதுவேயன்றித் தனக்குத்தானே பெரிய துன்பத்தினையும் செய்துகொள்ளுவன். சோரவிடுதல்- பிறர்க்குச் சொல்லுதல். இது பொருட்கேடும் உயிர்க்கேடும் தானே செய்யுமென்றது.

மு.வரதராசனார் உரை
அறிவில்லாதவவன் மனம் மகிழ்ந்து ஒரு பொருளைக் கொடுத்தலுக்கு காரணம், வேறொன்றும் இல்லை, அப் பொருளைப் பெறுகின்றவனுடைய நல்வினையே ஆகும்.

சாலமன் பாப்பையா உரை
அறிவற்றவன் மனம் மகிழ்ந்து ஒன்றைப் பிறர்க்குத் தந்தால், அது பெறுகின்றவன் செய்த நல்வினையே.

No comments:

Post a Comment