இனம்போன்று இனமல்லார் கேண்மை

குறள் 822
இனம்போன்று இனமல்லார் கேண்மை மகளிர்
மனம்போல வேறு படும்
[பொருட்பால், நட்பியல், கூடாநட்பு]

பொருள்
இனம் - வகை; குலம் சுற்றம் சாதி கூட்டம் திரள் அரசர்க்குஉறுதிச்சுற்றம்; அமைச்சர்; உவமானம்; s. Kindred, relations, con nections, affinity, relationship, சுற்றம். 2. Class, kind, species, caste, sort, குலம். 3. Association (with persons), union, fellow ship, சம்பந்தம். 4. A company, collective body, a society, association, கூட்டம். 5. Flock, herd, shoal, swarm, திரள். 6. At tendants of kings, royal household, அரசர்க் குறுதிச்சுற்றம். See உறுதிச்சுற்றம்.

போன்று -  போல - pōla   போல்) poola போல 1. like, similar (post. + acc.) 2. as (if) (post. + conditional; post. + pt. n.) [3. inf., stem of போல் `resemble'] 

இனம் - வகை; குலம் சுற்றம் சாதி கூட்டம் திரள் அரசர்க்குஉறுதிச்சுற்றம்; அமைச்சர்; உவமானம்

அல்லார் - அல்லாதவர்கள்

கேண்மை - நட்பு; உறவு; கண்ணோட்டம்; வழக்கு.

மகளிர் - பெண்டிர்

மனம் - நெஞ்சம்; எண்ணம்; விருப்பம்; இந்துப்பு.

போல - போல - pōla   போல்) poola போல 1. like, similar (post. + acc.) 2. as (if) (post. + conditional; post. + pt. n.) [3. inf., stem of போல் `resemble'] 

வேறுபடும் - வேற்று மையுடையது

முழுப்பொருள்
நமக்கு உற்றவர்கள்போல தோன்றும் படி நடந்துகொண்டு ஆனால் உண்மையில் நமக்கு தீங்கு விளைவிக்ககூடியவரிடம் நட்புறவானது நமக்கு ஏற்றதில்லை. ஏனெனில் மகளிர் மனம் நேரத்துக்கு நேரம் மாறுபட்டுக்கொண்டே இருக்கும் அதுபோலவே பகைவர் குணமும் மாறிக்கொண்டே இருக்கும். வில் வளைவது தீமை செய்யவே, பகைவர் வணங்கிப் பேசும் சொற்களும் அத்தன்மையவே; அதனால் அவர்தம் சொற்களை ஏற்றுக் கொள்ள வேண்டாம்.

வளையாபதிப்பாடல் இவ்வாறு கூறுகிறது “பெண்ணினது மனத்தியல்பினை மாற்றி ஒருமுகப்படுத்துவேன் என்று ஆராய்ச்சியில்லாத மடவோனுடைய தன்மையை நினையுங்கால், அம்முயற்சி எதனை ஒக்குமெனின், தெளிந்த நீரிலேபெய்யப்பட்டு நான்கு திசைகளினும் பரவிச் சென்று அழிந்து போன, எண்ணெயை மீண்டும் ஒருசேரக் கொண்டுவந்து சேர்த்தற்கு அவாவுதலையே ஒக்கும் என்பதாம்”. அதாவது பெண்ணின் மனது பொதுவாக மாறும் தன்மையுடைத்து, ஒருமுகப்படுத்தலுக்கு ஏலாதவொன்று என்பதே இப்பாடலின் மையக்கருத்து, குறளின் ஒப்புமைக் கருத்து. இனி அப்பாடல்,

தெண்ணீர் பரந்து திசைதொறும் போய்க்கெட்ட
எண்ணெய்கொண் டீட்டற் கிவறுதலென்னொக்கம்
பெண்மனம் பேதிக் தொருப்படுப்பெ னென்னு
மெண்ணி லொருவ னியல்பெண்ணு மாறே.

நீதிநெறி விளக்கப்பாடலொன்றும் இதே பொதுவாக பெண்களின் மனம் திரியும் இயல்பைக் கூறுகிறது.

“ஏந்தெழின் மிக்கா னிளையா விசைவல்லான்
காந்தையர் கண்கவர் நோக்கத்தான்-வாய்ந்த 
நயனுடை யின்சொல்லான் கேளெனினு மாதர்க் 
கயலார்மே லாகு மனம்”

பெருங்கதை வரிகளும், “மாரியுந் திருவு மகளிர் மனமுந் தக்குழி நில்லாது பட்டுழிப் படும்”, என்று மகளிர் மனம் மாறுபடும் இயல்பைக் கூறுகிறது. எனினும், இன்றைய மாற்றுக்குறளில் பொதுவாக மகளிர் என்னாது பெண்டிருக்கும் ஏற்புடைய வகையில் “உளந்திரிபுற்ற பெண்டிர் போல்” என்று சொல்லப்படுவதை கவனிக்க.

மேலும்: அஷோக் உரை

ஒப்புமை
”உள்ளத்தால் நள்ளா துறுதித் தொழிலராய்க்
கள்ளத்தால் நட்டார் கழிகிளைமை...
மனத்துக்கண் மாசாய் விடும்” (நாலடி.128)

“குறள் 920

“அன்னவள் உரைத்த லோடும் ஐயனும் அறிதற் கொவ்வா
நன்னுதல் மகளிர் சிந்தை” (கம்ப.சூர்ப்பணகை 44)

“குன்றிடை யிவரும் மேகக் குழுவிடைக் குதிக்கும்
...............நிதிவழி நேயம் நீட்டும்
மன்றலங் கோதை மாதர் மனம்எனப் போயிற் றம்மா” (கம்ப.மாரீசன்.243)

“வருமுலை விலைக்கென மதித்தனர் வழங்கும்
தெரிவையர் மனமெனக் கறங்கெனத் திரிந்தான்” (கம்ப.சட்புமாலி.35)

பரிமேலழகர் உரை
இனம்போன்று இனமல்லார் கேண்மை - தமக்கு உற்றார் போன்று உறாதாரோடு உளதாய நட்பு; மகளிர் மனம்போல வேறுபடும் - இடம் பெற்றால் பெண்பாலார் மனம் போல வேறுபடும். (அவர் மனம் வேறுபடுதல் 'பெண்மனம் பேதின்று ஒருப்படுப்பேன் என்னும் எண்ணில் ஒருவன்' (வளையாபதி புறத்திரட்டு-பேதைமை,18) என்பதனானுமறிக. நட்பு வேறுபடுதலாவது பழைய பகையேயாதல். இவை இரண்டு பாட்டானும் கூடா நட்பினது குற்றம் கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
நட்டோர் போன்று மனத்தினான் நட்பில்லாதார் நட்பு, பெண் மனம்போல வேறுபடும்; ஆதலால், அவருள்ளக் கருத்தறிந்து கொள்க. இது நட்பாயொழுகுவாரது உள்ளக்கருத்தறிய வேண்டு மென்றது.

மு.வரதராசனார் உரை
இனம் போலவே இருந்து உண்மையில் இனம் அல்லாதவரின் நட்பு, பொதுமகளிரின் மனம் போல உள்ளொன்று புறமொன்றாக வேறுபட்டு நிற்கும்.

சாலமன் பாப்பையா உரை
வேண்டியவர் போலத் தோன்றி, மனத்தால் வேண்டாதவராக இருப்பவரோடு உண்டான நட்பு பாலியல் தொழிலாளர் மனம் போல வேறுபடும்.

2 comments:

  1. இது 822 ஆவது குறள். ஆனால் 827 ஆவது குறளுக்கு உரிய நூலாசிரியர்கள் விளக்கத்தை தந்துள்ளீர்கள்.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி டாக்டர் ஜவஹர்லால் தர்மலிங்கம். முதலாவது அல்லது இரண்டாவது முறை இப்படி ஆகியுள்ளது. மண்ணிக்கவும். பிழையை சரி செய்துள்ளேன் இப்பொழுது.

      Delete