நட்பிற் குறுப்புக் கெழுதகைமை

குறள் 802
நட்பிற் குறுப்புக் கெழுதகைமை மற்றதற்கு
உப்பாதல் சான்றோர் கடன்
[பொருட்பால், நட்பியல், பழைமை]

பொருள்
பழைமை - தொன்மை; தொன்மையானது; வழங்காதொழிந்தது; சாரமின்மை; முதுமொழி; நெடுநாட்பழக்கம்; பழங்கதை; மரபு; நாட்பட்டதால்ஏற்படும்சிதைவு

நட்பிற்கு - சிநேகம்; உறவு; சுற்றம்; நண்பன்; யாழின்நாலாம்நரம்பு; காதல்; அரசாங்கம்ஆறனுள்ஒன்றாகியநட்பரசர்; கையூட்டு; மாற்றரசரோடுநட்புச்செய்கை

உறுப்பு - சிணை, அவயவம், உடல், நெருக்கம், பங்கு; மிகுதி; மரக்கொம்பு; மேல்வரிச்சட்டம்; காணியாட்சிப்பத்திரம்; பாலையாழ்த்திறம்; உடல்அழகு

கெழுதகைமை - உரிமை; நட்பு

மற்று  - ஓர்அசைநிலை; பிறிதின்பொருட்குறிப்பு; வினைமாற்றுக்குறிப்பு; மறுபடியும்; பின்; காண்க:மற்றப்படி

அதற்கு -அதற்கு

உப்பு  -உவர்ப்பு; உவர்ப்புள்ளபொருள்; உவர்க்கடல் இனிமை பெண்கள்விளையாட்டு; மணற்குவியல்; அன்பு

ஆதல் - ஆவதுஎனப்பொருள்படும்இடைச்சொல்; நூல் கூத்து தரிசனம் நுணுக்கம் ஆசை உண்டாதல் நிகழ்தல் முடிதல் இணக்கமாதல்; வளர்தல் அமைதல் ஒப்பாதல்

சான்றோர்  - அறிவொழுக்கங்களால்நிறைந்தோர்; சங்கப்புலவர்; வீரர்.

கடன் - முறைமை; இருணம்; இரவற்பொருள்; இயல்பு; வைதிகக்கிரியை; விருந்தோம்பல்; மரக்கால்; குடியிறை; மானம்; இறுதிக்கடன்; பின்னர்த்தருவதாகவாங்கியபொருள்; கடப்பாடு.

முழுப்பொருள்
நெடுநாட்கள் ஆன நட்பு அதாவது பழைமையான நட்பு என்றால் என்ன? நண்பர்கள் உரிமை எடுத்துக்கொண்டு நெருங்கி பழகுவதாகும். தவிர, நண்பர்களுடன் மகிழ்ச்சியாக அன்பு செலுத்தி நெருங்கி பழகுவது நட்பினை போற்றும் அறிவொழுக்கங்களால் நிறைந்த சான்றோர்களின் முறையாகும் (கடனாகும்). அதாவது நண்பர்களை நெருங்கி உரிமை எடுத்துக்கொண்டு அன்பு செலுத்துதல் சான்றோரின் பணி.

இங்கே திருவள்ளுவர் தெளிவாக உப்பாதால் என்கிறார். உப்பு என்றால் அன்பு. அன்பு செலுத்துவதற்கே இது பொருந்தும்.

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
நட்பிற்கு உறுப்புக் கெழுதகைமை - நட்பிற்கு அவயவமாவன நட்டார் உரிமையால் செய்வன; அதற்கு உப்பாதல் சான்றோர் கடன் - அதனால் அவ்வுரிமைக்கு இனியராதல் அமைந்தார்க்கு முறைமை. (வேறன்மை தோன்ற 'உறுப்பு' என்றார். உறுப்பு என்பது ஈண்டு இலக்கணையடியாக வந்த குறிப்புச் சொல். அவயவமாதல் அறிந்தே இனியவராவர் என்பது தோன்றச் சான்றோர்மேல் வைத்தார்.).

மணக்குடவர் உரை
நட்பிற்கு அங்கமாவது உரிமை: அவ்வுரிமையால் செய்யுமதற்கு உடன்படுதல் சான்றோர்க்கு இயல்பு. இது பேய்ச்சுரைக்காய்க்குப் பல காயம் அமைத்தாலும் இனிமை யுண்டாகாதுபோல, உடன்படாராயின் இனிமை உண்டாகாதாதலான் உடன்படல் வேண்டு மென்றது.

மு.வரதராசனார் உரை
நட்பிற்க்கு உறுப்பாவது நண்பனுடைய உரிமைச் செயலாகும், அந்த உரிமைச் செயலுக்கு உடன்பட்டவராதல் சான்றோரின் கடமையாகும்.

சாலமன் பாப்பையா உரை
நண்பர்கள் உரிமையுடன் செய்வதே நட்பிற்கு உறுப்பாகும். அவ்வுரிமையை எண்ணி மகிழ்வதே சான்றோர்க்கு நீதியாகும்.

No comments:

Post a Comment