உயர்வகலம் திண்மை அருமை

குறள் 743
உயர்வகலம் திண்மை அருமைஇந் நான்கின்
அமைவரண் என்றுரைக்கும் நூல்
[பொருட்பால், அரணியல், அரண்]

பொருள்
உயர்வு - மிகுதியாதல்; உயர்ச்சி உயரம் விருத்தி, மேன்மை வருத்தம் உயர்வுநவிற்சியணி

அகலம் - விரிவு; பரப்பு இடம் பூமி மார்பு விருத்தியுரை வித்தாரகவி பெருமை

திண்மை - வலிமை; உறுதி; கலங்காநிலைமை; பருமன்; உண்மை.

அருமை  -அரியதன்மை; பெருமை கடினம் எளிதிற்கிட்டாமை; சிறுமை இன்மை

இந் நான்கின் - ஆகிய இந்த நான்கை உடைய

அமைதல் - உண்டாதல்; தகுதியாதல்; பொருந்தல் அடங்குதல் நிறைதல் உடன்படுதல் முடிதல்

அரண் - பாதுகாப்பு, காவல் கோட்டை சுற்றுமதில் காவற்காடு கவசம் வேலாயுதம் செருப்பு அழகு அச்சம்

அமைவரண் - அமைந்தால் அரண்

என்று - என்று

உரைத்தல் - சொல்லுதல்

உரைக்கும் - கூறும்

என்றுரைக்கும் - என்று கூறும்

நூல் - நெறி நூல்கள் ; பஞ்சிநூல்; பூணூல்; மங்கலநாண்; எற்றுநூல்; ஆண்குறியிலுள்ளநரம்பு; ஆண்குறி; ஆயுதவகை; சாத்திரம்; ஆகமம்; ஒருநாடகநூல்; ஆலோசனை.

முழுப்பொருள்
ஒரு நாட்டின் கோட்டை மதில்கள் எவ்வாறு நாட்டிற்கு அரணாக இருக்க வேண்டும் என்று திருவள்ளுவர் கூறுகிறார்.

அஃதாவது, கோட்டை என்பது மிக உயரமாக இருக்க வேண்டும். எவ்வளவு உயரம் என்றால் பகைவர்கள் எளிதில் ஏறி கடக்கமுடியாத உயரமாக இருத்தல் வேண்டும்.

அஃதாவது, கோட்டை என்பது மிக அகலமாக இருக்க வேண்டும்.  தம் நாட்டுப் படைவீரர்கள் நடமாடுவதற்கும், தடவாளங்களைக் கொண்டு செல்வதற்கு ஏற்ற வகையில் அகலமானதாக இருத்தல் வேண்டும்.

அஃதாவது, கோட்டை என்பது மிக உறுதியானதாக இருத்தல் வேண்டும். கல் போன்ற மிக திண்மை வாய்ந்தவற்றால் கட்டப்பட்டதாக இருத்தல் வேண்டும்.

அஃதாவது, கோட்டை என்பது மிக அருமையாக இருக்க வேண்டும். அப்படியென்றால் பகைவர்கள் எவ்வகைப் படைக்கருவிகள் மற்றும் பொறிகளாலும் உடைத்து எளிதில் புகுந்துவிடாததாகவும் இருக்கவேண்டும்.

இவ்வாறு மிக உயரமான அகலமான உறுதிவாய்ந்த மிக அரிதாக உடைக்கப்படக்கூடிய கோட்டையை ஒரு நாடு அரணாக கொள்ளவேண்டும் என்று நெறிநூல்கள் சொல்லும் என்று திருவள்ளுவர் கூறுகிறார்.


மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
உயர்வு, அகலம், திண்மை, அருமை இந்நான்கின் அமைவு - உயர்ச்சியும், அகலமும், திண்மையும், அருமையும் என்று சொல்லப்பட்ட இந்நான்கின் மிகுதியையுடைய மதிலை; அரண் என்று உரைக்கும் நூல் - அரண் என்று சொல்லுவர் நூலோர். (அமைவு, நூல் என்பன ஆகுபெயர். உயர்வு - ஏணியெய்தாதது. அகலம் - புறத்தோர்க்கு அகழலாகா அடியகலமும், அகத்தோர்க்கு நின்று வினை செய்யலாம் தலையகலமும். திண்மை - கல் இட்டிகைகளாற் செய்தலின் குத்தப்படாமை. அருமை - பொறிகளான் அணுகுதற்கு அருமை. பொறிகளாவன, 'வளைவிற் பொறியும் அடியிற்செறி நிலையும் கருவிர லூகமும் கல்லுமிழ் கவணும், பரிவுறு வெந்நெயும் பாகடு குழிசியும், காய்பொன் உலையும் கல்லிடு கூடையும் தூண்டிலும் துடக்கும் ஆண்டலை யடுப்பும் கவையும் கழுவும் புதையும் புழையும் ஐயவித் துலாமும் கைபெய ரூசியும் சென்றெறி சிரலும், பன்றியும் பணையும் எழுவும் சீப்பும் உழுவிறற் கணையமும் கோலும் குந்தமும் வேலும் சூலமும்' ( சிலப., அடைக் 207-216) என்றிவை முதலாயின).

மணக்குடவர் உரை
உயர்ச்சியும், அகலமும், திண்மையும், கிட்டுதற்கு அருமையுமென்னும் இந்நான்கினது அமைதியுடையது மதிலாமென்று சொல்லுவர் நூலோர். திண்மையென்பது கல்லும் இட்டிகையும் இட்டுச் செய்தல்.

மு.வரதராசனார் உரை
உயரம், அகலம், உறுதி, பகைவரால் அழிக்க முடியாத அருமை ஆகிய இந்த நான்கும் அமைந்திப்பதே அரண் என்று நூலோர் கூறுவர்.

சாலமன் பாப்பையா உரை
பகைவர் ஏற முடியாத உயரம், காவலர் நிற்க இயங்க வசதியான அகலம், இடிக்கமுடியாத வலிமை, கடக்க முடியாத பொறிகளின் அருமை, இந்நான்கையும் மிகுதியாக உடைய கோட்டையையே செயற்கை அரண் என்று நூல்கள் கூறும்.

No comments:

Post a Comment