வன்கண் குடிகாத்தல் கற்றறிதல் ஆள்வினையோடு

குறள் 632
வன்கண் குடிகாத்தல் கற்றறிதல் ஆள்வினையோடு
ஐந்துடன் மாண்டது அமைச்சு
[பொருட்பால், அமைச்சியல், அமைச்சு]
(For meaning in English, scroll to the bottom of this post)

பொருள் 

கண் - விழி; கண்ணோட்டம்; பீலிக்கண்; கணு; மரக்கணு; தொளை; மூங்கில்முரசடிக்குமிடம்; மூட்டுவாய்; பெருமை; இடம்; ஏழனுருபு; அறிவு; பற்றுக்கோடு; உடம்பு; அசை; உடலூக்கம்.

வன்கண் - மனக்கொடுமை; வீரத்தன்மை; பகைமை; பொறாமை; கொடும்பார்வை.

குடி - பருகுகை; மதுபானம்; மதுவுண்டமயக்கம்; புருவம்; குடியானவன்; குடியிருப்போன்; ஆட்சிக்குட்பட்டகுடிகள்; குடும்பம்; குலம்; வீடு; ஊர்; வாழிடம்.

காத்தல் - பாதுகாத்தல்; அரசாளுதல்; எதிர்பார்த்தல்; விலக்குதல்

கற்று - கல்வி

அறிதல் - உணர்தல்; நினைத்தல் மதித்தல் பயிலுதல் அனுபவித்தல் உறுதிசெய்தல்; புதிதாய்க்கண்டுபிடித்தல்.

கற்றறிதல் - கல்வியினை கற்று அதனை அறிந்து பின்பற்றுதல் 

ஆள்வினை - முயற்சி; மகிழ்ச்சி

ஆள்வினையோடு - முயற்சியுடன் 

ஐந்துடன் - ஆகிய ஐந்து அங்கங்களை 

மாண்டது - மகிமைப்பட்டது
மாண்பு, v. noun. Honor, dignity (நீதி); excellence (El. 17. 152); respectability, virtue (El. 1886. 1933); மாட்சிமை. 2. Beauty, அழகு.
மாண்டார், appel. n. [pl.] The illustrious, the great, பெருமையோர். (நால.) 2. See மாள்.

அமைச்சு - அச்செயலை மகிமைப் பட செய்யவேண்டும் என்று எண்ணி அச்செயலை முடிக்கத்தக்கவன் அமைச்சன்

முழுப்பொருள் 
வன்கண் என்ற சொல்லுக்கு பல பொருள்களை இங்கே காணலாம். 1. வீரத்தன்மை, மனவலிமை ஆகியவற்றை கூறலாம் 2. கண் என்றால் கண்ணோட்டம் என்றும் கூறலாம். வன்கண் என்று கூறுவதானால் வலிமையான கண்ணோட்டம் என்ற பொருள் பொருந்தவில்லை.  ஆதலால் வன்கண் என்றால் எந்த செயலையும் எப்பேர்ப்பட்ட இன்னல்கள் வந்தாலும் செய்து முடிக்க கூடிய மனஉறுதி கொண்ட மனம் வேண்டும் என்று கூறலாம்.

இக்குறள் கூறும் கருத்து என்னவென்றால்  ஒரு அமைச்சர் என்பவர் முக்கியமான ஐந்து குணங்களை கொண்டிருக்க வேண்டும் 1) எந்த செயலையும் செய்து முடிக்கும் மனவலிமை 2) மக்களையும் ஊரையும் நாட்டையும் பாதுகாக்கும் திறன் (இங்கே பாதுகாப்பு என்றால் அந்நியர்களிடமும் இருந்து பஞ்சத்தில் இருந்து நோய்களில் இருந்து போன்று பல இன்னல்களில் இருந்து பாதுகாப்பது)  3) தன் துறை சார்ந்து கசடற கற்றுக்கொண்டே இருத்தல் 4) கற்றவற்றை ஆராய்ந்து மக்களுக்கு தேவையானவற்றை செய்தல் 5) தளராத முயற்சி. ஆக இந்த ஐந்து குணங்களும் ஒரு அமைச்சருக்கு இருப்பது தான் அவருக்கு மகிமையை தரும். 

அமைச்சர்கள் கற்றறிந்தவர்களாக இருக்கவேண்டியதை, “குலமுதல் தொன்மையும் கலையின் குப்பையும், பலமுதற் கேள்வியும் பயனும் எய்தினார்” என்று கம்பராமாயண மந்திரப்படலப் பாடல் ஒன்று கூறுகிறது. 

”குலமுதல் தொன்மையும் கலையின் குப்பையும்
பலமுதற் கேள்வியும் பயனும் எய்தினார்” (கம்ப.மந்திரப்.6)

ஏலாதிப் (17) பாடல் ஒன்று இக்குறளின் கருத்தை முழுவதுமாக கீழ்காணும் பாடல் வழி சொல்லுகிறது.

குடியோம்பல் வன்கண்மை நூல்வன்மை கூடம்
மடியோம்பும் ஆற்றல் உடைமை – முடியோம்பி
நாற்றம் சுவைகேள்வி நல்லார் இனஞ்சேர்தல்
தேற்றானேல் தேறும் அமைச்சு.

மேலும் : அஷோக் உரை 

பரிமேலழகர் உரை
வன்கண் - வினை செய்தற்கண் அசைவின்மையும்; குடிகாத்தல் - குடிகளைக காத்தலும்; கற்று அறிதல் - நீதி நூல்களைக் கற்றுச் செய்வன தவிர்வன அறிதலும்; ஆள்வினையொடு - முயற்சியும்; ஐந்துடன் மாண்டது அமைச்சு - மேற்சொல்லிய அங்கங்கள் ஐந்துடனே திருந்த உடையானே அமைச்சனாவான். (எண்ணொடு நீண்டது. 'அவ்வைந்து' எனச் சுட்டு வருவிக்க. இந்நான்கனையும் மேற்கூறியவற்றோடு தொகுத்துக் கூறியது,. அவையும் இவற்றோடு கூடியே மாட்சிமைப்பட வேண்டுதலானும், அவற்றிற்கு ஐந்து என்னும் தொகை பெறுதற்கும். இனி, இதனை ஈண்டு எண்ணியவற்றிற்கே தொகையாக்கிக் குடிகாத்தல் என்பதனைக் குடிப்பிறப்பும் அதனை ஒழுக்கத்தால் காத்தலும் எனப் பகுப்பாரும் 'கற்று அறிதல்' என்பதனை கற்றலும் அறிதலும் எனப் பகுப்பாரும் உளர். அவர் 'உடன்' என்பதனை முற்றும்மைப் பொருட்டாக்கியும் 'குடி' என்பதனை ஆகுபெயராக்கியும் இடர்ப்படுப.).

மணக்குடவர் உரை
அஞ்சாமையும், குடிகாத்தலும், இந்திரியங்களைக் காத்தலும், நூல்முகத்தானறிதலும், முயற்சியும் என்னும் ஐந்தும் கூட மாட்சிமைப்பட்டவன் அமைச்சனாவான். இவை அமைச்சனாவதன் முன்னே வேண்டுமாதலின், இது முற்கூறப்பட்டது.

மு.வரதராசனார் உரை
அஞ்சாமையும், குடிபிறப்பும், காக்கும் திறனும், கற்றறிந்த அறிவும் முயற்சியும் ஆகிய இவ்வைந்தும் திருந்தப்பெற்றவன் அமைச்சன்.

சாலமன் பாப்பையா உரை
செயலுக்கு ஏற்ற மன உறுதி, மக்களைக் காத்தல், உரிய நீதி நூல்களைக் கற்றல், கற்றாரிடம் கேட்டு அறிதல், முயற்சி ஆகிய ஐந்தையும் உடையவரே அமைச்சர்.

English Meaning - As I taught a kid - Rajesh
A capable minister should have 5 important characteristics and  1) Resolve/Mental Strength to execute tasks and face challenges despite hurdles and difficult circumstances on the field right from natural disasters, pandemic etc 2) Skill to protect the country and countrymen 3) Being curious and learning continously in his field of work 4) Doing work for the welfare of the people and country in his area of ministry 5) Undeterred Perseverance

Questions that I ask to the kid
What are the 5 important characteristics of a minister?

No comments:

Post a Comment