உள்ளம் இலாதவர் எய்தார்

குறள் 598
உள்ளம் இலாதவர் எய்தார் உலகத்து
வள்ளியம் என்னுஞ் செருக்கு
[பொருட்பால், அரசியல், ஊக்கமுடைமை]

பொருள்
ஊக்கம் - மனத்திடம்; ஊக்கம் எனப்படுவது உள்ளத்தில் உருவாகும் உள்ளம் சார்ந்தப் பண்பு. ஆதலால் ஊக்கம் நிலை நிற்கும்

உள்ளம் - ஊக்கம், மனத்திடம்; அறிவு, நினைவு, உணர்ச்சி, மனத்திடம், கற்பனை, சிந்தனை, ஊக்கம்; ஊக்கம் எனப்படுவது உள்ளத்தில் உருவாகும் உள்ளம் சார்ந்தப் பண்பு.

இலாதவர் - இல்லாதவர்

எய்தல் - அடைதல், சேர்தல்; அம்பைச்செலுத்தல்; நிகழ்தல்; சம்பவித்தல்; பெறுதல்.

எய்தார் - அடையமாட்டார்கள்.


உலகத்து - உலகத்தினுடைய

உலகத்தும் - உலகு, உலகப்பொது, பூமி நிலப்பகுதி; உலகுயிர்கள்; திக்கு மக்கள்தொகுதி; உலகிலுள்ளஉயர்ந்தோர்ஒழுக்கம்; உயர்ந்தோர் உயர்குணம்; வானம்

வள்ளியம் - வள் - வளம்; பெருமை; நெருக்கம்; கூர்மை; வாள்; வார்; வாளுறை; கடிவாளம்; காது; படுக்கை; வலிமை; வலிப்பற்றிரும்பு

என்னும் - என்கிற

செருக்கு -  cerukku   s. pride, vanity, haughtiness, arrogance, self-impartance, அகங்கா ரம்; 2. exultation, excessive joy, களிப்பு; 3. ostentation, இடம்பம்; 4. mettle, intrepidity, rashness, ஆண்மை; 5. infatuation, illusion, மருள், மயக்கம், 6. aspiration, high hope, மனோராச்சியம்.

முழுப்பொருள்
வள்ளியம் என்றால் பெருமை, வளம். இந்த பெருமையை, தான் என்னும் தற்பெருமையை, தன்னிடம் இருக்கின்றது என்ற செருக்கை  மயக்கத்தை ஆண்மையை ஒருவர் அடையலாம். அதனை தவறு என்று வள்ளுவர் கூறவில்லை. ஆனால் மிக எச்சரிக்கையாக ஒரு வார்த்தையை சேர்கிறார். அது உலகத்து வள்ளியம். உலகத்து வள்ளியம் எனப்படுவது உலகில் உயர்ந்தோர் உலகில் ஒழுக்கம் உடையவர்கள் வானம் அளவு உயர் குணம் கொண்டவர்கள் என்று பொருள். அத்தகையவர்கள் கொண்டுள்ள முக்கியமான குணம் ஊக்கம் எனும் மனத்திட்பம். 

ஆதலால் ஊக்கம் என்னும் உள்ளம் சார்ந்த பண்பினை இல்லாதவர்கள் உலகத்தில் வானம் அளவு உயர்ந்த குணத்தை உடையவர்கள் கொண்ட கர்வத்தை அது தரும் இனிய மயக்கத்தை களிப்பை என்றும் அடையமாட்டாரகள்.  

சுருங்க சொன்னாலால் ஊக்கம் இல்லாதவர்கள் உயர் குணத்தை அது தரும் களிப்பை என்றும் அடைய முடியாது. 

மேலும்: அஷோக் உரை

படைக்கலத்தேர்ச்சி என்பது உள்ளம் தேர்வதே. சொல்லோ அம்போ வெறும் கருவிதான்

உள்ளம் இலாதவர் எய்தார் உலகத்து
வள்ளியம் என்னும் செருக்கு.
‘ஊக்கம் இல்லாதவர் இந்த உலகத்தில் பெருமிதமாக நிமிர்ந்து நிற்கும் வாய்ப்பைபெறமாட்டார்’ என்ற எளிய நீதிக் கருத்தைச் சொல்லும் குறள் இது. குறளின் மென்மையான நீதிக்கூற்று முறைக்குச் சிறந்த உதாரணம். ஊக்கம் உடைமை என்ற அதிகாரத்தில் வருவது இக்குறள்.
நான் வலியேன் என்ற செருக்கு என்பது பெரும்பாலும் எல்லா நீதிநூல்களிலும் கடிந்து விலக்கப்பட்டிருக்கக் காணலாம். ஆனால் தண்டனைகளைப் பற்றிப் பேசும் நீதிநூல்கள் அதை ஒரு தண்டனைக்குரிய குற்றமாக முன்வைக்கின்றன. சமயச் சார்புடைய நூல்கள் அதை ஒரு பாவமாக கூறுகின்றன. இறைவனால் தண்டிக்கப்படக்கூடிய ஒரு பிழையாக அதைச் சொல்கின்றன. குறைந்தபட்சம் வள்ளியம் என்னும் செருக்கு நம்மை அழித்துவிடும் என்ற கடும் எச்சரிக்கையாவது அதில் இருக்கும்.
ஆனால் ஊக்கம் உடையவர்களுக்கு கிடைக்கும் ஒரு வெகுமதியாகவே வள்ளுவர் அதைச் சொல்கிறார் என்பது வியப்புக்குரியது. ஆனால் இக்குறளை ஊக்கமுடைமை என்ற அதிகாரத்தின் தொடர்ச்சியில் வைத்து நோக்கும்போது இதன் பொருள் மேலும் விரிவதைக் காண்கிறோம். ‘ஊக்கம் உடையவரே உடையவர்கள், பிறர் எது இருந்தாலும் இல்லாதவரே’ என்று தளர்விலாத செயலூக்கத்தைச் சொல்லி மேலே பேச ஆரம்பிக்கிறது இந்த அதிகாரம். ‘ஊக்கம் கொண்ட உள்ளம் உடைமையே உடைமை ,பொருள் உடைமை நில்லாது நீங்கிவிடும்’ என்று மேலும் விளக்குகிறது. இவ்வாழ்க்கையில் வாழவேண்டுமென்ற ஊக்கமும் வெல்லவேண்டுமென்ற துடிப்பும் கொண்டவர்களுக்கே செல்வமும் வெற்றியும் அமைகிறது என்று வலியுறுத்திச் செல்கிறது வள்ளுவரின் கூற்று. செல்வமும் வெற்றியும் ஊக்கமுடையவனை நோக்கி வழிகேட்டுச்செல்லும்.

பரிமேலழகர் உரை
உள்ளம் இல்லாதவர் - ஊக்கம் இல்லாத அரசர்; உலகத்து வள்ளியம் என்னும் செருக்கு எய்தார் - இவ்வுலகத்தாருள் வண்மையுடையேம் என்று தம்மைத்தாம் மதித்தலைப் பெறார்.
(ஊக்கம் இல்லையாகவே முயற்சி, பொருள், கொடை, செருக்கு இவை முறையே இலவாம் ஆகலின், 'செருக்கு எய்தார்' என்றார். கொடை, வென்றியினாய இன்பம் தமக்கல்லாது பிறர்க்குப் புலனாகாமையின் தன்மையால் கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
உள்ளமிகுதியில்லாதார் உலகின்கண் வண்மையுடைமை யென்னுங் களிப்பினைப் பெறார். இஃது உள்ளமிகுதி யில்லாதார்க்குப் பொருள்வரவு இல்லையாம் ஆதலான் அவர் பிறர்க்கு ஈயமாட்டாரென்றது.

மு.வரதராசனார் உரை
ஊக்கம் இல்லாதவர் இவ்வுலகில் யாம் வண்மை உடையேம் என்றுத் தம்மைத் தான் எண்ணி மகிழும் மகிழ்ச்சியை அடையமாடடார்.

சாலமன் பாப்பையா உரை
ஊக்கம் இல்லாதவர் பிறர்க்கு உதவும் வள்ளல் யாம் என்னும் மன உயர்வைப் பெறமாட்டார்.

No comments:

Post a Comment