குடிப்பிறந்து குற்றத்தின் நீங்கி

குறள் 502
குடிப்பிறந்து குற்றத்தின் நீங்கி வடுப்பரியும் 
நாணுடையான் கட்டே தெளிவு
[பொருட்பால், அரசியல், தெரிந்துதெளிதல்]

பொருள்
குடிப் - பருகுகை; மதுபானம்; மதுவுண்டமயக்கம்; புருவம்; குடியானவன்; குடியிருப்போன்; ஆட்சிக்குட்பட்டகுடிகள்; குடும்பம்; குலம்; வீடு; ஊர்; வாழிடம்.

பிறந்து - பிறத்தல், வெளிவரல்; தோன்றுதல்

குற்றத்தின் - குற்றம் - பிழை; பழி; துன்பம்; உடற்குறை; தீங்கு; அபராதம்; தீட்டு.

நீங்கி - நீங்குதல் - பிரிதல்; ஒழித்தல்; கடத்தல்; மாறுதல்; விடுதலையாதல்; தள்ளுண்ணுதல்; நடத்தல்; ஒழிதல்; நீந்துதல்; பிளவுபடுதல்; விரிந்துஅகலுதல்; சிதறுதல்.

வடுப் -  தழும்பு; மாம்பிஞ்சு; இளங்காய்; உடல்மச்சம்; உளியாற்செதுக்கினஉரு; புண்வாய்; குற்றம்; பழி; கேடு; கருமணல்; செம்பு; வாள்; வண்டு; பிரமசாரி; இளைஞன்; வைரவன்; புத்திசாலிப்பையன்

பரிதல் - பற்றுவைத்தல்; காதல்கொள்ளுதல்; இரங்குதல்; சார்பாகப்பேசுதல்; வருந்துதல்; பிரிதல்; அறுதல்; முறிதல்; அழிதல்; ஓடுதல்; வெளிப்படுதல்; அஞ்சுதல்; வருந்திக்காத்தல்; பகுத்தறிதல்; அறிதல்; அறுத்தல்; அழித்தல்; நீங்குதல்; கடத்தல்; உதிர்த்தல்; வாங்கிக்கொள்ளுதல்.

பரி -  செலவு; வேகம்; குதிரைநடை; குதிரை; அசுவினிநாள்; குதிரைமரம்; உயர்ச்சி; பெருமை; கறுப்பு; மாயம்; பருத்திச்செடி; பாதுகாக்கை; சுமை; துலை; ஊற்றுணர்வு; அன்பு; வருத்தம்; மிகுதிப்பொருள்குறிக்கும்ஓர்இடைச்சொல்.

பரியும் - வருந்துதல்

நாண் - வெட்கம்; மகளிர்க்குரியகூச்சம்; வில்நாண்; கயிறு; மாங்கலியங்கோத்தசரடு; காண்க:அரைஞா(நா)ண்

உடையான் - உடையவன்; உரிமைக்காரன் அரசன் தலைவன் கடவுள்

உடையான்கட்டே - உடையவர்களுக்கு 

தெளிவு - விளக்கம், துலக்கம்; உடற்செழிப்பு; பதநீர்; நினைவு; மனஅமைவு; அறிவு; நற்காட்சி; உளக்குறிப்பு; நீக்கம்; சான்று; ஆராய்வு; நம்பிக்கை; சாறு; கஞ்சித்தெளிவு; இலாபம்; பொருள்புலப்படஅமையும்செய்யுளின்குணம்; பாடற்பயன்வகை.

முழுப்பொருள்
தெளிவு என்றால் மன அமைதி என்று ஒரு பொருள் கூறப்படுகிறது. ஆதலால் மன அமைதியிற்கு தேவை நம்பிக்கை. நம்மேல் நமக்கு எப்போது நம்பிக்கை வரும் என்றால் நம் செயலை சரிவர செய்யும் பொழுது. ஒருவர் ஒரு செயலை செய்யும் பொழுது அவர் மட்டும் செய்து விட முடியாது. மற்றவருடைய பங்கேற்பும் தேவைப்படுகிறது. ஆதலால் அவர்களை சரிவர தேர்வு செய்தால் நமக்கு அமைதி கிடைக்கும்

எப்படி தேர்வு செய்யவேண்டும் என்று இக்குறளில் கூறுகிறார் திருவள்ளுவர். நல்ல குடும்பத்தில் பிறந்து, பழிகள் தன்மேல் இல்லாமல், குற்றங்கள் செய்யும் பாதையை நினையாமல், பழிகளுக்கு அஞ்சி, பழியென்றால் வெட்குபவரை தேர்ந்தெடுக்க வேண்டும். அவ்வாறு தெர்ந்தெடுத்தால் நமக்கு அமைதி கிடைக்கும்.

இக்குறளை நாம் நமது நண்பர்கள் தேர்வு, ஊழியர்கள் தேர்வு ஆகியவற்றுக்கும் பயன்படுத்தலாம்.

ஆதலால் தான் என்னவோ நமது பெற்றோர்கள் நம்மிடம் - அடுத்தவங்க நம்மள குத்தம் சொல்ற மாதிரி நடந்துக்ககூடாது என்று சொல்லுவார்களோ?

இக்குறளை திருமணத்தின் போது ஆண் பெண் பார்க்கும் பொழுதும் நினைவில்கொள்ளலாம் என்று நினைக்கிறேன்.

குடிப்பிறந்தார் வடுப்பரிதலை,
"அங்கண் விசும்பி னகனிலாப் பாரிக்குந்
திங்களுஞ் சான்றோரு மொப்பர்மன் - திங்கள் 
மறுவாற்றுஞ் சான்றோரஃ தாற்றார் தெருமந்து 
தேய்வ ரொருமா சுறின்."
(நாலடி . 151.)

மேலும்: அஷோக் உரை

ஒப்புமை
“குடிப்பிறந்து தன்கட் பழிநாணு வானை” (குறள் 794)

பரிமேலழகர் உரை
குடிப்பிறந்து - உயர்ந்த குடியில் பிறந்து, குற்றத்தின் நீங்கி - குற்றங்களினின்று நீங்கி, வடுப்பரியும் நாண் உடையான்கட்டே தெளிவு - தமக்கு வடு வருங்கொல் என்று அஞ்சாநிற்கும் நாணுடையவன் கண்ணதே அரசனது தெளிவு. 
(குற்றங்களாவன: மேல் அரசனுக்குச் சொல்லிய வகை ஆறும், மடி, மறப்பு, பிழைப்பு என்ற இவை முதலாயவும் ஆம். நாண்: இழிதொழில்களில் மனம் செல்லாமை. இவை பெரும்பான்மையும் தக்கோர்வாய்க் கேட்டலாகிய ஆகம அளவையால் தெரிவன. இந்நான்கும் உடையவனையே தெளிக என்பதாம்.).

மணக்குடவர் உரை
உயர்குடியிற் பிறந்து காமம் வெகுளி முதலான குற்றித்தினின்று நீங்கி, தனக்கு வரும் பழியை அறுக்கவல்ல நாணமுடையவன்கண்ணதே அரசனது தெளிவு. 
இதுவும் உடன்பாடென்று கொள்ளப்படுமென்றவாறு.

மு.வரதராசனார் உரை
நல்லகுடியில் பிறந்து குற்றங்களிலிருந்து நீங்கிப் பழியாச் செயல்களைச் செய்ய அஞ்சுகின்ற நாணம் உடையவனையே நம்பித் தெளிய வேண்டும்.

சாலமன் பாப்பையா உரை
நல்ல குடும்பத்தில் பிறந்து குற்றம் ஏதும் இல்லாதவனாய்ப் பழிக்கு அஞ்சி, வெட்கப்படுபவனையே பதவிக்குத் தெரிவு செய்யவேண்டும்.

No comments:

Post a Comment