நன்றாற்ற லுள்ளுந் தவுறுண்டு

குறள் 469
நன்றாற்ற லுள்ளுந் தவுறுண்டு அவரவர்
பண்பறிந் தாற்றாக் கடை
[பொருட்பால், அரசியல், தெரிந்துசெயல்வகை]

பொருள்
நன்று - நல்லது; சிறப்பு; பெரிது; அறம்; இன்பம்; நல்வினை; உதவி; வாழ்வின்நோக்கம்; துறக்கம்; ஏற்கைக்குறிப்பு

ஆற்றல் - சக்தி; முயற்சி மிகுதி கடைப்பிடி பொறை ஆண்மை வெற்றி வாய்மை அறிவு இன்னசொல்இன்னபொருள்உணர்த்தும்என்னும்நியதி; சாகசம்

ஆற்றலுள்ளும் - ஆற்றல் இருப்பினும்

தவறு - பிழை; செயல்கைகூடாமை; நெறிதவறுகை; அழுக்கு; பஞ்சம்; குறைவு.

உண்டு உள்ளதன்மையைஉணர்த்தும்ஐம்பால்மூவிடத்திற்கும்உரியஒருகுறிப்புவினைமுற்றுச்சொல்; ஓர்உவமஉருபு; அற்பத்தைக்குறிக்கும்சொல்; ஊன்றுகோல்

அவரவர் - ஒவ்வொருவரின்

பண்பு  - வண்ணம், வடிவு, அளவு, சுவைஎன்னும்நாற்குணம்; இயல்பு; மனத்தன்மை; பிறர்இயல்பைஅறிந்துநடக்கும்நற்குணம்; விதம்; பண்புப்பெயர்; அழகு; முறை; செய்கை.

அறிந்து - அறிதல் - உணர்தல்; நினைத்தல் மதித்தல் பயிலுதல் அனுபவித்தல் உறுதிசெய்தல்; புதிதாய்க்கண்டுபிடித்தல்.

ஆற்றுதல் - வலியடைதல்; கூடியதாதல்; போதியதாதல்; உய்தல் உவமையாதல்; செய்தல் தேடுதல் உதவுதல் நடத்துதல் கூட்டுதல் சுமத்தல் பசிமுதலியனதணித்தல்; துன்பம்முதலியனதணித்தல்; சூடுதணித்தல்; ஈரமுலர்த்துதல்; நூல்முறுக்காற்றுதல்; நீக்குதல்

கடை - முடிவு; இடம்; எல்லை; அங்காடி; கீழ்மை; தாழ்ந்தோன்; வாயில்; புறவாயில்; பக்கம்; பணிப்பூட்டு; காம்பு; ஒருவினையெச்சவிகுதி; ஏழனுருபு; பின்; கீழ்; சோர்வு; வழி; பெண்குறி

ஆற்றாக்கடை - செய்யாவிட்டால்

முழுப்பொருள்
ஆற்றல் என்பது ஒருவர் பெரும் கல்வி, அறிவு, அனுபவம் , முயற்சி, கடின உழைப்பு போன்ற பலவற்றில் இருந்து வருவது ஆகும். ஒருவருக்கு (அல்லது ஒரு நிறுவனத்திற்கு) அத்தகைய ஆற்றல் சிறப்பானதாக இருக்கக்கூடும். இருப்பினும் தவறு இழைப்பது மனித இயல்பாகும். இயற்கை, நேரம், சூழல் என்ற பலவற்றாலும் செயலின் விளைவை மாற்றக்கூடும். அது மட்டும் இன்றி ஒருவருக்கு ஆற்றல் இருந்தாலும் அது எல்லா செயலுக்கும் பொருந்தாது. உதாரணமாக சொன்னால் ஒரு நல்ல மருத்துவர் வீட்டில் எரியும் மின்சார சாதனத்தை சரியாக பழுதுபார்த்துவிடுவார் என்று சொல்ல முடியாது. அவர் மின்சார சாதனத்தில் தவறான ஒரு wire-ஐ தொட்டால் shock அடித்து உயிர் இழக்க கூடும். ஆதலால் தனது ஆற்றலை அறிந்து, தேவையில் வளர்த்துக்க்கொண்டு ஒரு செயலில் இறங்க வேண்டும்.

ஆதலால் ஒருவர் ஒரு செயலை செய்யும் பொழுது அவரின் ஆற்றலையும், செய்யும் செயலின் பண்பையும், செயல் கேட்கும் உழைப்பையும் பற்றி நன்கு ஆராய்ந்துத் தெளிவுப் பெற வேண்டும். அவ்வாறு செய்தால் ஒருவரால் நல்ல விளைவுகளை கொடுக்க முடியும். செயலை செம்மையாக செய்யலாம். ஒருவருக்கு நல்ல எண்ணங்களும் திறமையும் இருந்தாலும் அப்படி செய்யவேண்டியவற்றை செய்யாவிட்டால் அந்த செயல் தவறாக முடிவதற்கே வாய்ப்புகள் அதிகம். அதற்கு நாம் இடம் கொடுக்கக் கூடாது.

இக்குறள் தனி நபருக்கும் பொருந்தும், நிறுவனங்களுக்கும் பொருந்தும். ஒருவர் ஒரு செயலை செய்யும் போது தன்னுடைய ஆற்றலிலும் தன்னுடைய முந்தய சாதனைகளிலும் திளைக்காமல் முதல் முதலாக செய்வது போன்று ஒரு செயலை கவனமாய் செய்யவேண்டும்.

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
நன்று ஆற்றல் உள்ளும் தவறு உண்டு - வேற்று வேந்தர்மாட்டு நன்றான உபாயம் செய்தற்கண்ணும் குற்றம் உண்டாம், அவரவர் பண்பு அறிந்து ஆற்றாக்கடை - அவரவர் குணங்களை ஆராய்ந்து அறிந்து அவற்றிற்கு இயையச் செய்யாவிடின்.
(நன்றான உபாயமாவது: கொடுத்தலும் இன்சொல் சொல்லுதலுமாம். அவை யாவர் கண்ணும் இனியவாதல் சிறப்புடைமையாயின், உம்மை சிறப்பு உம்மை. அவற்றை அவரவர் பண்பு அறிந்து ஆற்றாமையாவது, அவற்றிற்கு உரியர் அல்லாதார்கண்ணே செய்தல். தவறு, அவ்வினை முடியாமை.).

மணக்குடவர் உரை
நன்மையைச் செய்யுமிடத்தினும் குற்றமுண்டாம்; அவரவர் குணமறிந்து செய்யாத விடத்து.
இதுவுமோரெண்ணம்.

மு.வரதராசனார் உரை
அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும்.

சாலமன் பாப்பையா உரை
அவர் அவர் குணநலன்களை அறிந்து செயல் ஆற்றாவிட்டால் நல்லது செய்வதிலும் பிழை நேர்ந்து விடும்.

No comments:

Post a Comment