எண்ணென்ப ஏனை எழுத்தென்ப

குறள் 392
எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும் 
கண்ணென்ப வாழும் உயிர்க்கு
[பொருட்பால், அரசியல், கல்வி]

பொருள்
'எண்'  -  எண்ணிக்கை; கணக்கிடுதல்; எண்ணம்; ஆலோசனை; அறிவு; மனம்; கவலை; மதிப்பு; இலக்கம்; கணக்கு; சோதிடநூல்; இலக்கியம்; வரையறை; தருக்கம்; மாற்று; மந்திரம்; அம்போதரங்கம்; எளிமை; வலி; எள்; (வி)எண்என்னும்ஏவல்; நினை, கருது.

என்ப  - எனறுசொல்லப்படுவன; என்றுசொல்லுவர்; ஓர்அசைச்சொல்;

ஏனை - ஒழிபு, மற்றையெனும்இடைச்சொல்; ஒழிந்த; மற்று; எத்தன்மைத்து; மலங்குமீன்.

எழுத்து’ - அக்கரம்; கல்வி; எழுதப்பட்டதாள், கடிதம்; கையெழுத்து; ஆதாரச்சீட்டு; கைரேகை; உடன்படிக்கைச்சீட்டு; இலக்கணம்; அட்டவணை; சித்திரம்.

என்ப  - எனறுசொல்லப்படுவன; என்றுசொல்லுவர்; ஓர்அசைச்சொல்;

இவ் இரண்டும் - இவை இரண்டும்

‘கண்’ - விழி; கண்ணோட்டம்; பீலிக்கண்; கணு; மரக்கணு; தொளை; மூங்கில்முரசடிக்குமிடம்; மூட்டுவாய்; பெருமை; இடம்; ஏழனுருபு; அறிவு; பற்றுக்கோடு; உடம்பு; அசை; உடலூக்கம்.

என்ப  - எனறுசொல்லப்படுவன; என்றுசொல்லுவர்; ஓர்அசைச்சொல்;

வாழும் - வாழ் - vāẕ   வாழு, II. live, sustain life, சீவி; 2. flourish, prosper, live happily, செழி; 3. live together (as husband and wife.) வாழாவெட்டி, a married woman not living with her husband.

உயிர்க்கு - உயிர் - காற்று; உயிர்வளி; சீவன் ஆதன் ஓரறிவுயிர்முதலியஉயிரினம்; உயிரெழுத்து ஓசை ஒருநாழிகையில்4320-ல்ஒருகூறு; சன்மலக்கினம்

முழுப்பொருள்
இக்குறள் எனக்கு இரண்டு அர்த்தங்களை தருகிறது. ஏன் எனில் ”எண்’ என்ற சொல்லுக்கு பல அர்த்தங்களை அகராதி கூறுகிறது.
1) எண்ணம், மனம் ஆகிய பொருள்கள் மனதின் எண்ணத்தை ஒட்டி இருப்பதால் இவை (கல்வி அதிகாரத்தில் வரும்) இக்குறள் சொல்லும் பொருளாக இல்லாமல் இருக்கவே வாய்ப்புகள் அதிகம்.
2) கணிதம் என்ற பொருள் இருக்க வாய்ப்புகள் உண்டு ஏனெனில் ஒருவர் சிற்பம், விவசாயம், கட்டுமானம், சமையல், இசை என்று எந்த துறை கற்றாலும் ஏதோ ஒருவித கணக்கு அத்தியாவசியம் ஆகிறது. உலகில் எழுத்து தெரியாதவர்கள் கூட உண்டு எண்ணத்தெரியாதவர்கள் இல்லை.
3) அதேப்போல் தருக்கம் என்ற பொருளுக்கும் வாய்ப்புகள் அதிகமே. ஏனெனில் முறையான தருக்கமே நமக்கு தெளிவினை கொடுக்கும். தெளிவுப் பெருதலே கல்வியின் குறிக்கோள். ”குறள் 355: எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு” என்று வள்ளுவர் முன்பே கூறியுள்ளார்.

எழுத்தினால் பெரும் கல்வியும் மிக முக்கியம். ஏனெனில் ஒருவருக்கு எழுத்தினை படிக்கத் தெரிந்தால் அவரால் ஒரு கட்டத்திற்குப் பிறகு தன்னுள்ளோ அல்லது பிறருடனோ தருக்கம் செய்தே கற்றுக்கொள்ளலாம். எழுத்து இல்லையென்றால் கல்விக்காக நாம் பிறரை நம்பியே இருக்க வேண்டியது இருக்கும்.

இவை இரண்டும் கண் என்கிறார் திருவள்ளுவர். ஏன் கண் என்கிறார்? கை அல்லாது கால் என்று சொல்லலாமே? ஏன் கண் என்கிறார் என்றால் நம் அறிவென்பது வெளியுலகத்தை அறிவது கண்களினாலே. கையும், காலும் நமது அன்றாட வேலைகளை செய்வதற்காக. கண் என்பது மிக சிறந்த வழிகாட்டியாக இருக்கிறது. நாம் மகிழ்ச்சியாக இருந்தால் கண்ணில் ஒரு ஒளி குடிக்கொள்ளும்

எண்ணும்  (கணிதம், தருக்கம் (தருக்கத்தினால் வரும் தெளிவும்)) மற்றும் எழுத்தும் (எழுத்தினால் வரும் கல்வி, அறிவு) ஒரு மனிதனுக்கு இரு கண் போன்றது. இவை வாழும் உயிர்க்கு மிக அவசியம். வாழ்தல் என்றால் மகிழ்ச்சியாக செழிப்பாக வாழ்வது. ஆதலால் வாழ்வதற்கு எண்ணும் எழுத்தும் கண்ணை போன்று அவசியம். உண்டுறங்கிப் புணர்ந்து பெற்று முதிர்ந்து மாயும் எளியோர் வாழ்வதில்லை என்பதையும் அறியவேண்டும்.

மேலும் 
எழுத்தறிய தீரும் இழிதகைமை தீர்ந்தான்
மொழித்திறத்தின்  முட்டறுப்பா னாகும் – மொழித்திறத்தின்
முட்டறுத்த நல்லோன் முதனூற் பொருளணர்ந்து
கட்டறுத்து வீடு பெறும்

என்ற பாடல் மொழியறிதலின் சிறப்பைக் .கூறுகிறது. சிறுபஞ்சமூலப் பாடல்வரியும் “கண்ணுங்காற் கண்ணும் கணிதம் எழுத்து” என்று ஒருவரியில் இக்கருத்தையே சொல்கிறது. அப்பரும் கண்ணுதற் கடவுளை, “எண்ணும் எழுத்தும் குறியுமறிபவர்” (அப்பர்.வேதிகுடி.6) என்கிறார்.

ஒப்புமை
”அண்ணலும் நாலும் பொருளும் நிகழ்வும் இவைஎனலும்
எண்ணினும் ஏனை எழுத்தினும் மிக்காங் கிருந்தவர்” (நீலகேசி 679)

“கண்ணுங்காற் கண்ணும் கணிதம் எழுத்து”  (சிறுபஞ்ச் 93)

“கண்ணெனப்படுவ மூன்று காவலன் கல்வி காமர்
விண்ணினைச் சுழல ஓடும் வெய்யவன் என்னும் பேர்” (சூளா.மந்திர.30)

ஜெயமோகன் தளத்தில் இருந்து
தமிழில் திருக்குறள் சார்ந்து அப்படி பல திறப்புகள் இருப்பதைக் காணலாம்.  திருக்குறள் இங்கே பலரால் பேசப்படுகிறது, மேடையில் மேற்கோள்காட்டப்படுகிறது. ஆகவே அது சார்ந்து ஒரு திறப்பு சட்டென்று உருவாகிறது. உதாரணமாகச் சிலநாட்கள் முன்னால் ஒரு பேருந்தில் ஒரு கிழவர் சொன்னார், ‘எண்ணென்ப ஏனை எழுத்தென்ப- ன்னு குறள் சொல்லுது. எழுத்து இல்லாட்டிக்கூட வாழ்ந்திடலாம். எண் இல்லாம இருக்க முடியுமா?. எழுத்து தெரியாத லட்சம்பேரு இருப்பாங்க. எண்ணத்தெரியாதவன் மெண்டல் ஆஸ்பத்திரியிலே இல்லா இருப்பான்?’

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
எண் என்ப ஏனை எழுத்து என்ப இவ்விரண்டும் - அறியாதார் எண் என்று சொல்லுவனவும் மற்றை எழுத்து என்று சொல்லுவனவும் ஆகிய கலைகள் இரண்டினையும், வாழும் உயிர்க்குக் கண் என்ப - அறிந்தார் சிறப்புடை உயிர்கட்குக் கண் என்று சொல்லுவர். 
(எண் என்பது கணிதம். அது கருவியும் செய்கையும் என இருவகைப்படும். அவை ஏரம்பம் முதலிய நூல்களுள் காண்க. எழுத்து எனவே, அதனோடு ஒற்றுமையுடைய சொல்லும் அடங்கிற்று. இவ்விருதிறமும்,அறமுதற்பொருள்களைக் காண்டற்குக் கருவியாகலின், கண் எனப்பட்டன.அவை கருவியாதல் 'ஆதி முதலொழிய அல்லாதன எண்ணி. நீதி வழுவா நிலைமையவால் - மாதே, அறமார் பொருள் இன்பம் வீடுஎன்று இவற்றின் , திறமாமோ எண்ணிறந்தால் செப்பு'. 'எழுத்தறியத் தீரும் இழிதகைமை தீர்ந்தான், மொழித்திறத்தின் முட்டறுப்பான் ஆகும், மொழித்திறத்தின், முட்டறுத்த நல்லோன் முதல் நூல் பொருள் உணர்ந்து , கட்டறுத்து வீடு பெறும்'. இவற்றான் அறிக. 'என்ப' என்பவற்றுள் முன்னைய இரண்டும் அஃறிணைப் பன்மைப் பெயர். பின்னது உயர்திணைப் பன்மை வினை. அறியாதார், அறிந்தார் என்பன வருவிக்கப்பட்டன. சிறப்புடைய உயிர் என்றது மக்கள் உயிருள்ளும் உணர்வு மிகுதி உடையதனை. இதனால் கற்கப்படும் நூல்கட்குக் கருவியாவனவும் அவற்றது இன்றியமையாமையும் கூறப்பட்டன.) .

மணக்குடவர் உரை
எண்ணென்று சொல்லப்படுவனவும் மற்றை எழுத்தென்று சொல்லப்படுவனவுமாகிய இவ்விரண்டு பொருளையும் உலகின்கண் வாழுமுயிர்களுக்குக் கண்ணென்று சொல்லுவர் அறிவோர்.

மு.வரதராசனார் உரை
எண் என்று சொல்லப்படுவன எழுத்து என்று சொல்லப்படுவன ஆகிய இரு வகைக் கலைகளையும் வாழும் மக்களுக்குக் கண்கள் என்று கூறுவர்.

சாலமன் பாப்பையா உரை
வாழும் நல்லவர்க்கு அறிவியலும் கலைஇயலும் சிறந்த கண் என்று அறிந்தவர் கூறுவர்.

No comments:

Post a Comment