பகல்கருதிப் பற்றா செயினும்

குறள் 852
பகல்கருதிப் பற்றா செயினும் இகல்கருதி 
இன்னாசெய் யாமை தலை
[பொருட்பால், நட்பியல், இகல்]

பொருள்
இகல் - பகை; போர் வலிமை சிக்கு அளவு புலவி

பகல் - பகுக்கை; நடு; நடுவுநிலை; நுகத்தாணி; முகூர்த்தம்; அரையாமம்; மத்தியானம்; பகற்போது; பிறரோடுகூடாமை; கட்சி; இளவெயில; அறுபதுநாழிகைகொண்டநாள்; ஊழிக்காலம்; சூரியன்; ஒளி; வெளி; கமுக்கட்டு.

கருதிப் - கருத்து - நோக்கம், தாற்பரியம், கொள்கை, எண்ணம், விருப்பம், சொற்பொருள், கவனம், இச்சை, விவேகம், சம்மதம், மனம், பயன், சங்கற்பம், தன்மதிப்பு.

பற்றா - பற்று அல்லாமல்

செயினும் -செய்தாலும்

இகல் -  பகை; போர் வலிமை சிக்கு அளவு புலவி

கருதி - கருத்து - நோக்கம், தாற்பரியம், கொள்கை, எண்ணம், விருப்பம், சொற்பொருள், கவனம், இச்சை, விவேகம், சம்மதம், மனம், பயன், சங்கற்பம், தன்மதிப்பு.

இன்னா - துன்பம்; தீங்குதருபவை; கீழ்மையான; இகழ்ச்சி வெறுப்பு

செய்யாமை - செய்யாதிருத்தல்

தலை - சிரம்; முதல்; சிறந்தது; வானம்; இடம்; உயர்ந்தோன்; தலைவன்; உச்சி; நுனி; முடிவு; ஒப்பு; ஆள்; தலைமயிர்; ஏழாம்வேற்றுமைஉருபு; ஓர்இடைச்சொல்; மேலே; தபால்கடிதத்தில்ஒட்டும்முத்திரைத்தலை; தலையோடு.

முழுப்பொருள்
ஒருவர் நம்முடன் கூடக்கூடாது என்று எண்ணி வெறுக்கத்தக்கச் செயல்களை நமக்கு செய்தாலும் அதனை பொருட்படுத்தாது இருத்தல் வேண்டும். ஏட்டிக்குப் போட்டியாக அவருக்கு தீங்கு விளைவிக்கும் செயல்களை, கீழ்மையான செயல்களை, வெறுக்கத்தக்க செயல்களை செய்யாது இருத்தலே சிறந்தது ஆகும்.

இக்குறளில் பார்க்க வேண்டிய ஒன்று என்னவென்றால் எது மாட்சிமை என்றால் பிறருக்கு (எதிரிக்கும், பகைவருக்கும்) இன்னா செய்யாதிருத்தல். அதுமட்டும் இன்றி நம்முடைய ஆற்றலையும் எண்ணங்களையும் ஆக்கப்பூர்வமான செயல்களில் செலவிட வேண்டும். பயன்தராத செயல்களில் ஈடுபடக்கூடாது.

ஒரு கண்ணுக்கு மறுகண் என்று பழி தீர்க்கும் படலத்திலேயே வாழ்ந்தால் உலகம் குருடாகித்தானே போகும்? இதையே இக்குறள் வாயிலாக உணர்த்துகிறார். இகலை இகல வேண்டும்

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
பகல் கருதிப் பற்றா செயினும் - தம்மொடு கூடாமையைக் கருதி ஒருவன் வெறுப்பன செய்தானாயினும்; இகல் கருதி இன்னாசெய்யாமை தலை - அவனொடு மாறுபடுதலைக் குறித்துத் தாம் அவனுக்கு இன்னாதவற்றைச் செய்யாமை உயர்ந்தது. (செய்யின் பகைமை வளரத் தாம் தாழ்ந்து வரலானும், ஒழியின் அப்பற்றாதன தாமே ஓய்ந்து போகத் தாம் ஓங்கி வரலானும், 'செய்யாமை தலை' என்றார். 'பற்றாத' என்பது விகாரமாயிற்று.).

மணக்குடவர் உரை
தம்மோடு பற்றில்லாதார் வேறுபடுதலைக் கருதி இன்னாதவற்றைச் செய்தாராயினும் அவரோடு மாறுபடுதலைக் கருதித் தாமும் அவர்க்கு அவற்றைச் செய்யாமை நன்று. இது மேற்கூறிய குற்றமும் குணமும் பயக்குமாதலின் மாறுபடுதற்குக் காரணமுள வழியும் அதனைத் தவிர்தல் வேண்டும் என்றது.

மு.வரதராசனார் உரை
ஒருவன் தன்னோடு பொருந்தாமல் வேறுபடுதலைக் கருதி அன்பில்லாதவற்றைச் செய்தாலும் தான் இகழ் கொண்டு அவர்க்கு துன்பம் செய்யாதிருத்தல் சிறந்ததாகும்.

சாலமன் பாப்பையா உரை
நம்மோடு இணங்கிப் போக முடியாமல் ஒருவன் நமக்கு வெறுப்புத் தருவனவற்றைச் செய்தாலும், அவனைப் பகையாக எண்ணித் தீமை செய்யாதிருப்பது சிறந்த குணம்.

No comments:

Post a Comment