பேதைமை என்பதொன்று யாதெனின்

குறள் 831
பேதைமை என்பதொன்று யாதெனின் ஏதங்கொண்டு
ஊதியம் போக விடல்.
[பொருட்பால், நட்பியல், பேதைமை]
(For meaning in English, scroll to the bottom of this post)

பொருள்
பேதைமை - மடமை, உய்த்துணராமை, அவிவேகம், பேதமை, அறிவின்மை

என்பது - என்ரென்பது;

ஒன்று - ஒன்றுஎன்னும்எண்; மதிப்பிற்குரியபொருள்; வீடுபேறு; ஒற்றுமை; வாய்மை; அறம்; அஃறிணையொருமை.

யாது? - எது?, கள், யாதி, இராக்கதன்; பிசாசு;  நினைவு.

எனின் - என்றால்; என்றுசொல்லின்; என்கையால்.
ஏதம் - துன்பம், குற்றம், கேடு
கொண்டு - முதல்; குறித்து; மூன்றாம்வேற்றுமைச்சொல்லுருபு; ஓர்அசைநிலை.
ஊதியம் - இலாபம்; கல்வி; பயன்.
போகவிடல் - செல்ல விடுதல்

முழுப்பொருள்
விவேகமற்ற செயல், அறிவற்ற செயல், மடமை என்பது என்னவென்றால் கேடு விளைவிக்க கூடிய செயல்கள்/ துன்பம் தரக்கூடிய செயல்கள் தனை பற்றிக்கொண்டு அதனை செயல்படுத்துதலுக்கு மாறாக நற்பயன் விளைவிக்கக்கூடிய செயல்களை செய்யாமல் கைவிடுதல்.  ஆதலால் ஆக்கப்பூர்வமான செயல்களை செய்யாது கேடான செயல்களை செய்வது, சோம்பலில் திளைப்பது, போன்றது அறிவின்மை. இஃது அல்லாவற்றிலும் மடமையாகும்.

அறியாமையைத் தீர்த்துக்கொள்ள முடியும். அறிய அறிய அறியாமை வற்றிவிடும். ஆனால், பேதைமையை ? ஏதங்கொண்டு ஊதியம் தவறவிட்ட ஒவ்வோரிடத்திலும் நாம் பேதைகளாகத்தாம் நின்றிருப்போம். அதைத் தீர்ப்பதற்கு விழிப்போடிருத்தலே வழி.

அர்ஜுனன் கீதையில் கண்ணனிடம் தம்முடைய அறிவீனத்தில் பகைவர்கள் செய்வதெல்லாம் மன்னிக்கத்தக்கதில்லையா என்று வினவுகையில், அறியாமை தவறல்ல, அதைப் போக்கும் ஞானத்தைத் தேடாத அறிவீனத்துக்கு தண்டனையே சரியான மருந்து என்பான் கண்ணன். ஆக அறிவீனத்தைக் குற்றமாகப் பார்ப்பது சரியே என்று தோன்றுகிறது. உலகே கல்விக்கூடமாக இருக்கையில் கற்றலுக்குப் பலவழிகள் இருக்கையில், பேதைமையைக் கைக்கொள்வது மற்ற குற்றங்களில் மிக்கதாகும்.

பி.கு: இதற்கு மற்றொருப் பொருளும் எனக்கு தோன்றுகிறது. ஒரு நற்பயன் விளைவிக்கக்கூடிய செயல் என்றால் அதற்கு உழைக்கவேண்டும். உழைப்பு உடலுக்கு ஒரு அசதியை (துன்பத்தையும்) தரலாம். வெறும் அசதியை மட்டும் கருத்தில்கொண்டு அச்செயலினால் ஏற்படும் நற்பயனை கருத்தில்கொள்ளாமல் அச்செயலை கைவிடுதல் என்பது பேதைமையாகும். 

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
[இனி , அந்நட்பினை எதிர்மறுத்துப் பகை முகத்தாற் கூறிய தொடங்கினார் . அப் பகைதான் முற்றக் கடியுங் குற்றமன்மையின் உளவாய வெகுளியானும் காமத்தானும் வருவதாம் . அவற்றுள் வெகுளியான் வருவன ஐந்துஅதிகாரத்தானும் , காமத்தான் வருவன ஐந்து அதிகாரத்தானும் கூறுவார் , அவ்விரண்டற்கும் அடியாய மயக்கத்தை இரு வகைப்படுத்து , இரண்டு அதிகாரத்தால் கூறுவான் தொடங்கி , முதற்கண் பேதைமை கூறுகின்றார் .அஃதாவது , யாதும் அறியாமை .]

பேதைமை என்பது ஒன்று - பேதைமை என்று சொல்லப்படுவது ஒருவனுக்கு ஏனைய குற்றங்கள் எல்லாவற்றினும் மிக்கதொன்று; யாது எனின் ஏதம் கொண்டு ஊதியம் போக விடல் - அதுதான் யாதென்று வினவின், தனக்குக் கேடு பயப்பனவற்றைக் கைக்கொண்டு ஆக்கம் பயப்பனவற்றைக் கைவிடுதல். (கேடு - வறுமை, பழி, பாவங்கள், ஆக்கம் - செல்வம், புகழ், அறங்கள், தானே தன் இருமையும் கெடுத்துக் கோடல் என்பதாம்.).

மணக்குடவர் உரை
அறியாமையென்று சொல்லப்படுவதொன்று யாதெனின், அது குற்றம் பயப்பனவற்றைக் கொண்டு நன்மை பயப்பனவற்றைப் போகவிடல். இது பேதைமையின் இலக்கணம் கூறிற்று.

மு.வரதராசனார் உரை
பேதைமை என்று சொல்லப்படுவது யாது என்றால், தனக்கு கெடுதியானதைக் கைக் கொண்டு ஊதியமானதை கைவிடுதலாகும்.

சாலமன் பாப்பையா உரை
அறியாமை என்பது என்ன என்றால், அது ஒருவன் தனக்குத் தீமை தருவதை ஏற்றுக் கொண்டு, இலாபத்தை விட்டு விடுவதே ஆம்.

அறியாத குறள்கள் - கவிஞர் மகுடேசுவரன் 
நாட்டில் எவ்வகை மக்கள் அதிகம் என்று பார்த்தோமானால் நிச்சயம் அறிவாளிகள் அல்லர். அவர்கள் எல்லாக் காலத்திலும் சிறு தொகையினராகவே உள்ளனர். 

அறிவு என்பதும் பல்வகை. நடைமுறை அறிவு, துறைசார்ந்த அறிவு, அவையறிவு, பகுத்தறிவு, நுண்ணறிவு, பொது அறிவு என அறிவுக்குக் கிளைகள் நூறு. ஒரு சராசரியான அளவீட்டை நிர்ணயித்து அத்தகைய அறிவு மட்டத்தை அடைந்தவர்களை இனங்கண்டால் சோர்வு மிஞ்சக் கூடும்.

அப்படியானால் நாட்டில் அறிவில்லாதவர்களே அதிகமிருக்கிறார்களா ? தானுண்டு தன்வேலையுண்டு என்றிருப்பவன் அறிவில்லாதவனா ? அறிவுக்கு நிறையளவு என்று ஏதும் உள்ளதா ? அறிவு என்பதற்கும் அறிவுற்றாயிற்று என்று அமைவதற்கும் அளவுமுறைகள் வகுக்கப்பட்டிருக்கின்றனவா ? முடிவற்ற கேள்விகள் தோன்றுகின்றன. தெளிவற்ற விடைகளே தென்படுகின்றன. 

அதற்கு மாறாக, அறியாமையை அளந்துவிடுவது எளிது. பேருந்துத் தட எண் தெரியவில்லை என்பதை அறியாமையாகக் கொள்ள வேண்டியதில்லை. வாகனம் ஓட்டத் தெரிந்தும் எரிகுமிழ் (Spark Plug) துலக்கத் தெரியவில்லை என்பதைக் கணக்கிலெடுக்க வேண்டியதில்லை. 

ஆனால், ஈட்டத் தெரிந்த பணத்தைக் காக்கத் தெரியவில்லை என்றால் என்னவென்பது ? எல்லாம் தெரிந்திருந்தும் எடுத்தியம்பத் தெரியவில்லை என்றால் என்னவென்பது ? இது ஒருவகை அறியாமை. புன்மை நிலையெனக் கொள்ள முடியாது என்றாலும் குணச்சித்திரத்தில் ஏதோ குறைபாடு, ஆர்வமின்மை, அருமை உணராமை, பார்வைத் தெளிவின்மை, பக்குவப்படாமை. சரிவுக்கு உத்தரவாதமுள்ள போதாக்குறையான நிலைமை இது.

இதற்குத் தமிழில் தனியான சொல்லொன்று இருக்கிறது. பேதைமை. அப்படிப்பட்டவன் பேதை. ஒன்றிலும் தெளிவற்ற, பிரித்தறியத் தெரியாத, தான் கருதுவதே சரியென்ற மயக்கத்திலேயே வாழ்கின்றவன். இதற்குப் பேதுறுதல் என்று பெயர். 

பேதுற்றவன் பேதை. அவனின் அந்நிலை பேதைமை. கூட்டமில்லாமல் போகின்ற பேருந்தில் ஏறாமல், எங்கோ வேடிக்கை பார்த்திருந்துவிட்டு நெரிசலான பேருந்தில் ஏறிக் கசங்கி வதங்கிப் பயணம் செய்யும் நிலை. வேர்க்கடலையை உடைத்துத் தின்னும்போது வேறேதோ நினைவுக்கு ஆட்பட்டால் பருப்பைக் கீழே போட்டுவிட்டுத் தொட்டுகளை வாய்க்குள் போடுவோமல்லவா, அத்தகைய நிலை !

இவையெல்லாம் பெருந்தவறில்லை. சிறு பிழைகள். கண்டிக்கத்தக்கவற்றைத்தானே கணக்கில் கொள்ள வேண்டும் ? ஆம். வள்ளுவரும் அவற்றைத்தான் பேதைமை என்கிறார். பேதைமை என்பது என்னவென்று அதிகாரத்தின் முதல் குறளில் விளக்கிய பின்பே மேற்செல்கிறார். 

பேதைமை என்பதொன்று யாதெனின் ஏதங்கொண்டு 
ஊதியம் போக விடல்.

- என்பதே அக்குறள். இலாபத்தை எடுத்துக்கொள்ள வேண்டிய இடத்தில் எடுத்துக்கொள்ளாமல் போக்கடித்துவிட்டு நட்டத்தை வைத்துக்கொண்டு விழிப்பது. தும்பை விட்டு வாலைப் பிடிப்பது. ஏதம் என்றால் துன்பம்/குற்றம்/கேடு. ஊதியம் என்றால் பலன். 

பெண்ணுக்கு நல்ல நல்ல வரன்கள் தேடி வந்திருக்கும். அவை எவற்றிலும் திருப்தியுறாமல் எதையாவது குறைகூறி திருமணத்தைத் தள்ளிப்போட்டுக்கொண்டே போவது. இறுதியில் காலங்கடந்துவிட, கிடைத்த மாப்பிள்ளைக்குத் திருமணம் செய்து வைப்பது. நல்ல நல்ல வேலைகளைத் தொலைத்துவிட்டு இப்போது பொருத்தமேயில்லாத இடத்தில் அரைமனத்தோடு பணியாற்றுவது. வீட்டிற்கருகிலேயே வாய்த்த சிறு நிலத்தை வாங்காமல் விளம்பரத்தில் மயங்கி சென்னைக்கு அருகில் என்று செங்கல்பட்டில் வாங்குவது. 

அறியாமையைத் தீர்த்துக்கொள்ள முடியும். அறிய அறிய அறியாமை வற்றிவிடும். ஆனால், பேதைமையை ? ஏதங்கொண்டு ஊதியம் தவறவிட்ட ஒவ்வோரிடத்திலும் நாம் பேதைகளாகத்தாம் நின்றிருப்போம். அதைத் தீர்ப்பதற்கு விழிப்போடிருத்தலே வழி.

English Meaning - As I taught a kid - Rajesh
Stupidity is accepting and following negative things (bad habits, bad ideas, lethargy etc) that leads to a destructive path, loss, and not embracing positive things (good habits, bias for actions, consistency, focus etc), forsaking profits, advantages, productive things etc.
For the sake of long term benefits, one can accept any kind of difficulty in the work and not give room for stupidity/mediocrity/lethargy etc.

Questions that I ask to the kid
What is stupidity?

No comments:

Post a Comment