நினைத்தொன்று சொல்லாயோ நெஞ்சே

குறள் 1241
நினைத்தொன்று சொல்லாயோ நெஞ்சே எனைத்தொன்றும்
எவ்வநோய் தீர்க்கும் மருந்து
[காமத்துப்பால், கற்பியல், நெஞ்சொடுகிளத்தல்]

பொருள்
நினைத்து - நினைத்தல் - கருதுதல்; ஞாபகத்திற்கொணர்தல்; ஆராய்தல்; தியானித்தல்; அறிதல்; நோக்கமாகக்கொள்ளுதல்; பாவித்தல்; மனனம்.

ஒன்று - ஒன்றுஎன்னும்எண்; மதிப்பிற்குரியபொருள்; வீடுபேறு; ஒற்றுமை; வாய்மை; அறம்; அஃறிணையொருமை.

சொல்லாயோ - சொல்வாயோ?

நெஞ்சே - மனம்; இதயம்; மார்பு; நடு; திண்ணக்கம்; தொண்டை; துணிவு.

எனைத்து - எத்தன்மைத்து; எத்தனை; எவ்வளவு.

ஒன்றும் - சிறிதும், oṉṟum   oNNum ஒண்ணும் (+ neg.) nothing  

எவ்வ - evvai   n. எவ்வம். Care, anxiety;கவலை. எவ்வையில்லா வள்ளியம்மை கவ்வைமனதாகும் (வள்ளி. கதை. Ms.).

நோய் - துன்பம்; வருத்தம்; பிணி; குற்றம்; அச்சம்; நோவு.

தீர்க்கும் - தீர்த்தல் - விடுதல்; முடித்தல்; போக்குதல்; அழித்தல்; கொல்லுதல்; தீர்ப்புச்செய்தல்; நன்றாகப்புடைத்தல்; கடன்முதலியனஒழித்தல்; மனைவியைவிலக்குதல்.

மருந்து - அமுதம்; ஔடதம்; பரிகாரம்; வசியமருந்து; சோறு; குடிதண்ணீர்; இனிமை; வெடிமருந்து; முள்ளுக்கடம்பு; புதற்புல்என்னும்புல்வகை.

முழுப்பொருள்
நெஞ்சே உனக்கு தெரியும் என் தலைவன் என்னைவிட்டு பிரிந்து சென்று இருக்கிறான். இப்பிரிவால் நான் படும் பாடு சொல்லி மாலாது. இதனால் நான் கொண்டுள்ள கவலையான ஆசை நோயானது எத்தன்மைவாய்ந்தது எவ்வளவு கொடியது என்று நீ அறிவாய். (பிறருக்கு புரியாது இது எவ்வளவு கொடியது என்று). ஒருவிதத்தில் பார்த்தால் நான் (காதலால்) கொண்ட துன்பத்திற்கு நீயும் தான் காரணம்.

என்னால் முடிந்தவரையில் இந்த நோயினை தீர்க்கும் மருந்து பற்றி கேட்டுப்பார்த்தேன்.  எனக்கு ஒன்றும் கிட்டவில்லை. நெஞ்சே நன்றாக யோசித்துப்பார், என் தலைவன் உன்மூலமாக தான் எனக்கு இக்காதலை தந்தான். யோசித்துப்பார், நீ அறிந்தவரை இதற்கு இந்த நோயை தீர்க்கும் மருந்து இருந்தால் என்னிடம் கண்டிப்பாய் சொல்!

இங்கே நாம் காணவேண்டிய ஒன்று, தலைவி இந்த நோய்க்கு புறவயமான மருந்துகள் ஆன கஷாயம், இலை, தழை என்று நினைத்து இருந்தால் அதனை மருத்துவர்களிடம் கேட்டு இருப்பாள். ஆனால் அவளுக்கு தெரியும் இந்த நோய் மிகவும் அகவயமான ஒன்று என்று. அதனால் தான் அகவயமாக உரையாடி நெஞ்சத்திடம் கேட்கிறாள் மருந்தினை.

அவளுக்கு தெரியும் நெஞ்சிற்கு தெரியும் தலைவன் தான் இதற்கு மருந்து என்று. அதனால் தான் நெஞ்சத்திடம் அவனை கேட்காமல் கேட்கிறாள்.

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
[அஃதாவது , ஆற்றாமை மீதூரத் தனக்கு ஓர் பற்றுக்கோடு காணாத் தலைமகள் தன் நெஞ்சொடு செய்திறன் அறியாது சொல்லுதல் . இஃது , உறுப்புக்கள் தம் நலனழிந்தவழி நிகழ்வதாலின் , உறுப்பு நலன் அழிதலின்பின் வைக்கப்பட்டது.]

(தன் ஆற்றாமை தீரும் திறன் நாடியது.) நெஞ்சே - நெஞ்சே; எவ்வநோய் தீர்க்கும் மருந்து ஒன்று - இவ்வெவ்வநோயினைத் தீர்க்கும் மருந்தாவதொன்றனை; எனைத்து ஒன்றும் நினைத்துச் சொல்லாய் - யான் அறியுமாற்றலிலன், எத்தன்மையது யாதொன்றாயினும் நீ அறிந்து எனக்குச் சொல். (எவ்வம் - ஒன்றானும் தீராமை. உயிரினும் சிறந்த நாணினை விட்டுச் செய்வது யாதொன்றாயினும் என்பாள், 'எனைத்தொன்றும்' என்றாள்.).

மணக்குடவர் உரை
நெஞ்சே! நீ எனக்கு உற்ற எவ்வநோயைத் தீர்க்கும் மருந்தாவது யாதொன்றாயினும் ஒன்றை விசாரித்துச் சொல்லாய். இஃது ஆற்றுதலரி தென்று கூறியது. இவையெல்லாம் தனித்தனி சிலகூற்றென்று கொள்ளப்படும்.

மு.வரதராசனார் உரை
நெஞ்சே! ( காதலால் வளர்ந்த) இத் துன்ப நோயைத் தீர்க்கும் மருந்து ஏதாவது ஒன்றை நீ நினைத்துப் பார்த்து எனக்குச் சொல்ல மாட்டாயோ?.

சாலமன் பாப்பையா உரை
நெஞ்சே! எதனாலும் தீராத என் நோயைத் தீர்க்கும் மருந்து ஏதாவது ஒன்றை எண்ணிப் பார்த்துச் சொல்லமாட்டாயா?.

No comments:

Post a Comment