காதலர் தூதொடு வந்த கனவினுக்கு

குறள் 1211
காதலர் தூதொடு வந்த கனவினுக்கு
யாதுசெய் வேன்கொல் விருந்து
[காமத்துப்பால், கற்பியல், கனவுநிலையுரைத்தல்]

பொருள்
காதலர் - தலைவன்

தூது - இருவரிடையே பேச்சு நிகழ்தற்கு உதவியாக நிற்கும் ஆள்; இராசதூதர்தன்மை; ஒருநூல்வகை; கூழாங்கல்; தூதுமொழி; தூதுவளைக்கொடி; காமக்கூட்டத்துக் காதலரை இணக்கும் செயல்; செய்தி.

தூதொடு வந்த - தூதைக் கொண்டு வந்த

கனவு - கனா; உறக்கம்; மயக்கம்.

கனவினுக்கு -  கனவிற்கு

யாது - எது; இராக்கதன்; பிசாசு; கள்; நினைவு.

செய்வேன்கொல் - செய்வதென்று தெரியவில்லை

விருந்து! - viruntu   n. [T. vindu, M.virunnu.] 1. Feast, banquet; அதிதி முதலியோர்க்கு உணவளித் துபசரிக்கை. யாதுசெய் வேன்கொல் விருந்து (குறள், 1211). 2. Guest; அதிதி.விருந்துகண் டொளிக்கும் திருந்தா வாழ்க்கை (புறநா.266). 3. Newcomer; புதியவன். விருந்தா யடைகுறுவார் விண் (பு. வெ. 3, 12). 4. Newness, freshness; புதுமை. விருந்து புனலயர (பரிபா. 6, 40).5. (Pros.) Poetic composition in a new style;நூலுக்குரிய எண்வகை வனப்புக்களு ளொன்று.(தொல். பொ. 551.)

முழுப்பொருள்
ஒற்றர்கள் தூது கொண்டு வந்து கொடுப்பர். இவ்வாறு தூது கொண்டு வந்து கொடுப்போர்க்கு விருந்து அளித்து உபசரிப்பது வழக்கம். ஆனால் இப்பொழுது என் காதலரை பிரிந்து உள்ள நான் வாடிப்போய் இருக்கிறேன். அவரை பற்றிய செய்தி ஒன்றும் எனக்கு வரவில்லை. 

இந்த சுகமான இரவில் சுந்தரி நான் கனவு காணும் பொழுது கனவில் அவரிடம் இருந்து செய்தி வந்தது எனக்கு. கனவிலாவது அவரை பற்றிய செய்தி எனக்கு வந்தது மகிழ்ச்சிதான். ஆனால் இந்த செய்தியை தூதாக கொண்டு வந்த கனவிற்கு நான் என்ன கைமாறு செய்வேன்? இக்கனவிற்கு நான் எப்படி விருந்து அளித்து உபசரிப்பேன்? என்று தலைவி நினைக்கிறாள்.  

கனவு இயல்பாக வருவது தான். இதற்கு முன்பு நாம் கண்டு இருக்கிறோம். ஆனால் அப்பொழுதெல்லாம் கனவிற்கு நன்றிகடமைப்பட்டு இருக்கிறோமா என்ன? இல்லையே. ஆனால் கனவிற்கு நன்றிகடன்படும் அளவிற்கு ஒருவர் இருக்கிறார் என்றால் அவர் தலைவனை பிரிந்து ஏக்கமாக எவ்வளவு வாடுகிறார் என்பதை நாம் இங்கு உணரலாம்.

ஆண்டாளும் கனவு கண்டாள் “வாரணமாயிரம்” என்று தொடங்கி பத்துப்பாடல்களில். அவள் கூட கனவைப் பற்றிச் சொன்னாளே தவிர, கனவையே தன் காதற்தலைவனிடமிருந்து வந்த தூதாக எண்ணிப் பாடவில்லை.

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
[அஃதாவது , தலைமகள் தான் கண்ட கனவினது நிலைமையைத் தோழிக்குச் சொல்லுதல் . அக் கனவு, நனவின்கண் நினைவு மிகுதியாற்கண்டதாகலின் , இது நினைந்தவர் புலம்பலின் பின் வைக்கப்பட்டது .]

(தலைமகன் தூது வரக் கண்டாள் சொல்லியது). காதலர் தூதொடு வந்த கனவினுக்கு -யான் வருந்துகின்றது அறிந்து அது தீரக் காதலர் விடுத்த தூதினைக் கொண்டு என் மாட்டு வந்த கனவினுக்கு; விருந்து யாது செய்வேன் -விருந்தாக யாதனைச் செய்வேன்? ('விருந்து' என்றது விருந்திற்குச் செய்யும் உபசாரத்தினை. அது கனவிற்கு ஒன்று காணாமையின், 'யாது செய்வேன்' என்றாள்.).

மணக்குடவர் உரை
நங்காதலர் விட்ட தூதரோடே வந்த கனவினுக்கு யான் யாது விருந்து செய்வேன்?. இது தலைமகளாற்றுதற் பொருட்டுக் காதலர் வாராநின்றாரென்று தூதர் வரக் கனாக் கண்டேனென்று தோழி சொல்லியது.

மு.வரதராசனார் உரை
( யான் பிரிவால் வருந்தி உறங்கியபோது) காதலர் அனுப்பிய தூதோடு வந்த கனவுக்கு உரிய விருந்தாக என்ன செய்து உதவுவேன்?.

சாலமன் பாப்பையா உரை
என் மன வேதனையை அறிந்து அதைப் போக்க, என்னவர் அனுப்பிய தூதை என்னிடம் கொண்டு வந்த கனவிற்கு நான் எதை விருந்தாகப் படைப்பேன்?.

தூதென வந்தார்க்கெல்லாம் துய்ய நல் விருந்தளித்தல்
மாதென வந்தார்க்கெல்லாம் மாபெருங் கடமையன்றோ
சூதிலாப் பெண்ணாள் நல்ல சுந்தரத் தோற்றம் கொண்டாள்
ஏது நான் செய்வேன் எந்த விருந்தினை நான் அளிப்பேன்
சோதனைஅய்யோ என்றாள் சுகமான இரவில் வந்தான்
காதலன் அவனைத் தந்த கனவிற்கு மங்கை நானும்
யாது தான் விருந்தாய்ச் செய்வேன் எப்படிப் போற்றி நிற்பேன்
தூதாக வந்த கனவு தூற்றாதா என்னை என்றாள்

No comments:

Post a Comment