ஒருதலையான் இன்னாது காமம்காப்

குறள் 1196
ஒருதலையான் இன்னாது காமம்காப் போல
இருதலை யானும் இனிது
[காமத்துப்பால், கற்பியல், தனிப்படர்மிகுதி]

பொருள்
ஒருதலை - இன்றியமையாமை; கட்டாயம்; நிச்சயம்; ஓரிடம்; ஒருசார்பு; ஒருபக்கம்.

யான்  - நான்

இன்னாது - தீது; துன்பு

காமம் - ஆசை, அன்பு, விருப்பம்; இன்பம்; புணர்ச்சியின்பம்; காமநீர்; ஊர்; குடி; இறை.

கா - கா - ஓர்உயிர்மெய்யெழுத்து(க்+ஆ); சோலை; கற்பகமரம்; பாதுகாப்பு; காவடித்தண்டு; துலாக்கோல்; ஒருநிறையளவு; தோட்சுமை; பூமுதலியனஇடும்பெட்டி; அசைச்சொல்; கலைமகள்

போல - போன்று

இருதலை - iru-talai   n. இரண்டு +. Bothends; இருமுனை. நடுவண தெய்த விருதலையு மெய்தும்(நாலடி. 114).  

இனிது - இன்பந்தருவது; நன்மையானது; நன்றாக

முழுப்பொருள்
ஒருதலையான காதல் (ஒருவர் மட்டுமே கொண்ட காதல்) என்பது மிகுந்த துன்பமானது. அது துன்பத்தை மட்டுமே தரும். ஆனால் காதலர் காதலி இருவரும் ஒருங்கே இருவர்மீது கொள்ளும் காதல் ஆனது காவடியில் இருமுனைகளும் நிறைந்திருப்பதைப்போல, இருவர் உள்ளமும் காதலில் நிறைந்திருக்கும். இருவரும் நெஞ்சில் காதலை சுமப்பதால் அது அவர்களுக்கு இன்பத்தை தரும்.

இரு உள்ளமும் இங்கே காவடியில் உள்ளதைப்போல பிரிந்துள்ளது. ஆதலால் பிரிவில் இருக்கும் பொழுது இருவருக்கும் ஒருவர் மீது ஒருவர் காதல் இருந்தால் தான் அந்த பிரிவு அர்த்தம் வாய்ந்ததாக இருக்கும். உதாரணமாக இருவரும் ஊடலில் சிறிது நேரம் பிரிந்து இருந்தால் கூட, ஒருவருக்கு காதல் இல்லை என்றாலும் இறுதியில் ஊடல் தரும் சுவையை யாரும் பருக முடியாது.


மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
(இதுவும் அது.) காமம் ஒரு தலையான் இன்னாது - மகளிர் ஆடவர் என்னும் இரு தலையினும் வேட்கை ஒருதலைக்கண்ணேயாயின், அஃது இன்னாது; காப்போல இருதலையானும் இனிது - காவினது பாரம்போல இருதலைக்கண்ணும் ஒப்பின் அஃது இனிது. (மூன்றன் உருபுகள் ஏழன் பொருண்மைக் கண் வந்தன. கா -ஆகுபெயர். 'என்மாட்டு உண்டாய வேட்கை அவர் மாட்டும்உண்டாயின், யான் இவ்வாறு துன்பமுழத்தல் கூடுமோ'?என்பதாம்.).

மணக்குடவர் உரை
ஒருதலை அன்பினாலுண்டாகிய காமம் இன்னாது: காவினது பாரம்போல இரண்டு தலையும் ஒத்த அன்பினா லுண்டாகிய காமமே இனிதாவது. இது மேற்கூறிய சொற்கேட்ட தலைவர் அருள் செய்வாரென்றும் தெய்வக் குறிப்பினாற் கூறிய சொற்கேட்டுக் கூடினாலும் பயனில்லை யென்றும் தலைமகள் கூறியது.

மு.வரதராசனார் உரை
காதல் ஒரு பக்கமாக இருத்தல் துன்பமானது; காவடியின் பாரம் போல் இருபக்கமாகவும் ஒத்திருப்பது இன்பமானதாகும்.

சாலமன் பாப்பையா உரை
ஆண், பெண் என்னும் இரு பக்கத்தில் ஒரு பக்கம் மட்டுமே காதல் இருந்தால் அது கொடுமை காவடியின் பாரத்தைப் போல இருபக்கமும் இருந்தால்தான் இனிது.


இருதலை: இருமுனைகள், இரு பக்கங்கள், மறுதலை என்றால் மறுபக்கம்,  Inverse, ஒருதலை எனில் ஒருபக்கம் மட்டுமே சார்ந்திருப்பது. One sided.

‘ஒரு தலையான் இன்னாது காமம் காப்போல
இரு தலையானும் இனிது’

என்பது திருக்குறள். ஒருதலைப் பட்சமான காமம் துன்பமானது. காவடி போல இரண்டு உள்ளங்களும் காமம் நிறைந்திருப்பதே இனிது என்பது பொருள். இங்கு காமம் என்பது காதலுக்கு ஆதிச் சொல். 

No comments:

Post a Comment