இன்மையின் இன்னாதது யாதெனின்

குறள் 1041
இன்மையின் இன்னாதது யாதெனின் இன்மையின்
இன்மையே இன்னா தது
[பொருட்பால், குடியியல், நல்குரவு]

பொருள்
நல்குரவு - nalkuravu   n. நல்கூர்-. Poverty,indigence, destitution; வறுமை நல்குரவென்னுநசை (குறள், 1043).

இன்மை - இல்லாமை; வறுமை உடைமைக்குமறுதலை; அறுவகைவழக்கினுள்ஒன்று.

'இன்மையின் -  இல்லாமையில், வறுமையுள்

இன்னாது - iṉṉātu   n. இன்னா-மை. 1.Evil; தீது பிறப்பின்னா தென்றுணரும் (நாலடி. 173).2. Pain; துன்பு (ஈடு.)

இன்னாதது - துன்பம் தருவது

யாது? - எது; இராக்கதன்; பிசாசு; கள்; நினைவு.

எனின் - என்றால், என்றுசொல்லின்; என்கையால்.

இன்மையின் - இல்லாமையில், வறுமையுள்

இன்மையே - இல்லாமை; வறுமை உடைமைக்குமறுதலை;

இன்னாதது -  துன்பம் தருவது

முழுப்பொருள்
இல்லாமை/வறுமையானவற்றுள் வறுமை என்னவென்றால்? வறுமையே என்கிறார் திருவள்ளுவர். வறுமையை போல் துன்பம் தருவது வேறேதும் இல்லை. ஆதலால் வறுமையை போல் கொடிது வேறேதும் இல்லை என்கிறார் திருவள்ளுவர். 

பி.கு: ஆதலால் வறுமையை தடுப்பது மேன்மையான செயலாகும். இதனால் தான் என்னவோ ஈகை என்னும் கொடை செயலுக்கு அவ்வளவு மேன்மை உண்டு என்று சான்றோர்களும் அறநூல்களும் மறுபடி மறுபடி சொல்லுகின்றன.

வறுமையில் இருந்து விலக பொருள் ஈட்ட வேண்டும். ஒருவர் பொருள் ஈட்ட அறம் அதாவது தனது கடமையை (அன்றறிவாம் என்னாது) தக்க நேரத்தில் காலம் தாழ்த்தாமல் செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால் பொருள் ஈட்டில் வறுமையில் இருந்து விடுப்படலாம்.

ஔவையார் தனிப்பாடல் திரட்டிலே அரியது, பெரியது, கொடிது என்ற பொருள்களில், கொடிது யாது என்று இவ்வாறு கூறி துவக்குகிறார்.

கொடியது கேட்கின் நெடியவெல் வேலோய்!
கொடிது கொடிது வறுமை கொடிது
அதனினும் கொடிது இளமையில் வறுமை.

வறுமையினும் கொடுமையானது வேறொன்றும் இல்லை என்று வள்ளுவர் கருத்தையே ஔவையும் வழிமொழிகிறார்.

டென்மார்க்கைச் சார்ந்த தற்காலக் கவிஞரான வேதா அவர்களின் அழகான கவிதை வெளிப்பாட்டையும் பார்ப்போம். கவிதை வறுமையைப் பற்றியதாயினும், அருமை, எளிமை.

இல்லாமை தரும் நிலைமை
வறுமை! பெரும் கொடுமை!
வெறுமை! இதிலில்லை பெருமை!
உண்மை உழைப்பு வறுமை 
வராமை காக்கும்! முயலாமை
இயலாமை இணைதலே வறுமை.

தனிமை ஒரு வகை வறுமை.
இனிமை வார்த்தை பேசாமை,
அன்பின்மை வேண்டாத வறுமை.
அறியாமை, அறிய மனமில்லாமை, 
ஈயாமை, ஆதரவு இல்லாமை,
உண்மை பேசாமையும் வறுமை.

மை போன்றிவை கருமைத்
தன்மை கொண்டு மேன்மை, 
பெருமை அழிக்கும் உண்மை.
செழுமை அழிக்குமிச் சிறுமை
வராமை காத்தல் வலிமை.
வறுமை தடுத்தல் மேன்மை.

ஒப்புமை
“அரிதுமன்றம்ம இன்மைய திளிவே”  (நற் 262.10)
“எற்றுள்ளும் இன்மையின் இன்னாத தில்லை” (நான்மணி. 30)

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
[அஃதாவது , நுகரப்படுவன யாவும் இல்லாமை .]
இன்மையின் இன்னாதது யாது எனின் - ஒருவனுக்கு வறுமை போல இன்னாதது யாது என்று வினவின்; இன்மையின் இன்னாதது இன்மையே - வறுமை போல இன்னாதது வறுமையே, பிறிதில்லை. (இன்னாதது - துன்பஞ்செய்வது. ஒப்பது இல்லை எனவே, மிக்கது இன்மை சொல்ல வேண்டாவாயிற்று).

மணக்குடவர் உரை
 நல்குரவுபோல இன்னாதது யாதெனின் நல்குரவுபோல இன்னாதது தானே. (தானே - நல்குரவே). இது தன்னை யொத்த இன்னாதது பிறிதில்லை யென்றது.

மு.வரதராசனார் உரை
வறுமையைப் போல் துன்பமானது எது என்று கேட்டால், வறுமையைப் போல் துன்பமானது வறுமை ஒன்றே ஆகும்.

சாலமன் பாப்பையா உரை
இன்மையை விடக் கொடியதுஎது என்றால், இல்லாமையை விடக் கொடியது இல்லாமையே.

No comments:

Post a Comment