சிறப்பீனும் செல்வம் பெறினும்

குறள் 311
சிறப்பீனும் செல்வம் பெறினும் பிறர்க்குஇன்னா 
செய்யாமை மாசற்றார் கோள்
[அறத்துப்பால், துறவறவியல், இன்னாசெய்யாமை]

பொருள்
சிறப்பு - பெருமை; திருவிழா; செல்வம்; அன்பளிப்பு; மதிப்பு; தலைமை; பகட்டு; காண்க:சிறப்பணி; இன்பம்; ஒன்றற்கேயுரியது; வரிசை; போற்றுகை; மிகுதி; வீடுபேறு 
ஈனும் - இயன்று தரும்
செல்வம் - செல்வம் (பணம்) உட்பட மற்ற பல செல்வங்களினையும் (கல்வி, கேள்வி, நல்லோர் சேர்க்கை, உயர்ந்தபதவிகள் உள்ளிட்ட எல்லா செல்வங்களையும்); கல்வி; அழகு; செழிப்பு; நுகர்ச்சி; துறக்கம்; ஐசுவரியம்; மகளிரின்கொஞ்சற்பேச்சு.
பெறினும் - பெற்றாலும்
பிறர்க்கு - பிற உயிர்களுக்கு
இன்னா - துன்பம்; தீங்குதருபவை; கீழ்மையான; இகழ்ச்சி வெறுப்பு
செய்யாமை - செய்யாதிருத்தல்
மாசு - அழுக்கு; குற்றம்; மறு; மாறுபாடு; கருமை; இருள்; மேகம்; பாவம்; தீமை; தூளி; புழுதி; புன்மை; பால்வீதிமண்டலம்; மெய்ம்மலம்; நஞ்சுக்கொடி; பித்தநீர்; கோழை; கண்ணின்காசபடலம்; வலைவடம்; குழப்பினமா.
அற்றார் - பொருள் இல்லாதவர்; முனிவர் ( 2. Those who have dedicatedthemselves to the service of God; தம்மைஒன்றற்கென்றே யொப்படைத்தவர்.)
கோள் - கொள்ளுகை, துணிவு; மதிப்பு; வலிமை; அனுபவம்; புறங்கூறுதல்; பொய்; இடையூறு; தீமை; கொலை; பாம்பு; நஞ்சு; இராகு; கோள்; மேகம்; ஒளி; பரிவேடம்; குலை; இயற்கை; காவட்டம்புல்; கொழு; முன்னிலைப்பன்மைவிகுதி.

முழுப்பொருள்
ஒருவருக்கு பிற உயிர்களுக்கும் சக மனிதர்களுக்கும் தீங்கு விளைவிக்கக்கூடிய (கீழ்மையான, மன வருத்தம் தரக்கூடிய, துன்பம் தரக்கூடிய) செயல்கள்  செய்வதனால் பல (தலைமை பொறுப்புகள், பெருமை, பட்டங்கள், மதிப்பு, அன்பளிப்பு, இன்பம், இன்ப சுற்றுலாக்கள், விஷேச கேளிக்கைகள் போன்ற) சிறப்புகளும்,  (கல்வி; அழகு; செழிப்பு; நுகர்ச்சி; துறக்கம்; ஐசுவரியம்;  நல்லோர் சேர்க்கை, பொன், பொருள் போன்ற) செல்வங்களும் கிடைக்குமாயினும் பிறருக்கு தீங்கு செய்யாது இருப்பதே மனதில் மாசு அல்லாதவர்களின் மனதிட்பமாகவும் வினைதிட்பமாகவும் கொள்கையாகவும் இருக்கும் என்கிறார் திருவள்ளுவர். அதுவே அவர்களுக்கு வலிமை சேர்க்கும்.

இங்கே திருவள்ளுவர் ஒருவருக்கு சிறப்பும் செல்வமும் இல்லாத நேரத்தில் அவை பெறுவதற்கு வாய்ப்பு அமைந்தாலும் இன்னா செய்யாதே என்று சொல்வதால் சிறப்பும் செல்வமும் ஏற்கனவே இருப்பவர்களுக்கும் இன்னா செய்யாதே என்றென்பது இயல்பாகவே பொருந்தும்.

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
[அஃதாவது, தனக்கு ஒரு பயன் நோக்கியாதல் ,செற்றம் பற்றியாதல். சோர்வானாதல் ஓர் உயிர்க்கு இன்னாதவற்றைச் செய்யாமை. இன்னா செய்தல் வெகுளி ஒழியவும் நிகழும் என்பது அறிவித்தற்கு , இது வெகுளாமையின்பின் வைக்கப்பட்டது.)

சிறப்பு ஈனும் செல்வம் பெறினும் - யோகமாகிய சிறப்புத்தரும் அணிமா முதலிய செல்வங்களைப் பிறர்க்கு இன்னா செய்து பெறலாமாயினும்; பிறர்க்கு இன்னா செய்யாமை மாசு அற்றார் கோள் - அதனைச் செய்யாமை ஆகமங்கள் கூறிய ஆற்றான் மனந்தூயாராது துணிவு. (உம்மை பெறாமைமேற்று. சிறப்பு உடையதனைச் சிறப்பு என்றும், அதன் பயிற்சியான் வாயுவை வென்று எய்தப்படுதலின் எட்டுச் சித்திகளையும் சிறப்பு ஈனும் செல்வம் என்றும், காமம் வெகுளி மயக்கம் என்னும் குற்றங்கள் அற்றமையான் 'மாசு அற்றார்' என்றும் கூறினார். இதனான் தமக்கொரு பயன் நோக்கிச் செய்தல் விலக்கப்பட்டது.).

மணக்குடவர் உரை
மிகுதியைத் தருகின்ற செல்வத்தைப் பெறினும் பிறர்க்கு இன்னாதவற்றைச் செய்யாமை குற்றமற்றார் கோட்பாடு. இது பழி வாராத செல்வம் பெறினும் தவிரவேண்டுமென்றது.

மு.வரதராசனார் உரை
சிறப்பைத்தருகின்ற பெருஞ் செல்வத்தைப் பெறுவதாக இருந்தாலும், பிறர்க்குத் துன்பம் செய்யாதிருத்தலே மாசற்றவரின் கொள்கையாம்.

சாலமன் பாப்பையா உரை
சிறப்பைத் தரும் செல்வத்தைப் பெறுவதாக இருந்தாலும்கூட அடுத்தவர்க்குத் தீமை செய்யாதிருப்பது குற்றமற்றவரின் கொள்கை.

குறளும் பொருளும் - பா.ராகவன் உரை
நல்லறம் ஒன்றே நலம் தரும்.

No comments:

Post a Comment